Published:Updated:

முருகன் கோயிலில் தமிழ் முறைப்படி திருமணம்... தடைவிதித்த நிர்வாகம்... போராடி நிகழ்த்திய தம்பதி!

கண்ணன், பவானி திருமணம்
கண்ணன், பவானி திருமணம் ( நா.ராஜமுருகன் )

'காலம் காலமா சம்ஸ்கிருத முறைப்படிதான் திருமணங்கள் நடக்குது. அதை மாத்த முடியாது'னு எதிர்ப்பு தெரிவிச்சாங்க. 'முருகனை எல்லோரும் தமிழ்க் கடவுள்னு கொண்டாடுகிறோம். முருகன் கோயிலில் சம்ஸ்கிருத முறைப்படி திருமணம் நடத்துவது எப்படி ஆகமம் ஆகும்?'னு வாக்குவாதம் செய்தோம்.

தமிழ் முறைப்படி திருமணம் நடத்த தடை விதித்த கோயில் நிர்வாகம், அறநிலையத்துறை அதிகாரிகள் எனப் பலதரப்பு தடைகளை உடைத்து, க.பரமத்தி சாலையில் உள்ள பவித்ரம் பாலமலை பாலமுருகன் திருக்கோயிலில் வெற்றிகரமாக ஒரு திருமணத்தை நடத்தியிருக்கிறார்கள். தமிழ் ஆர்வலர்கள் ஒன்றுகூடி, சிவாச்சாரியாரின் முன்னிலையில், தமிழ் மந்திரங்கள் ஓதி, தமிழ் முறைப்படி நடந்த சமூக ஆர்வலர் ஒருவரின் திருமணம் அது. 'இது ஒரு பண்பாட்டு வெற்றி' என்று கரூரில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

பாலமலையில் உள்ள பாலமுருகன் திருக்கோயில், தமிழக அளவில் பிரசித்திபெற்ற முருகன் கோயில். இங்கு நடத்தப்படும் திருமணங்கள் அனைத்தையும், சம்ஸ்கிருத முறைப்படிதான் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கப் பொறுப்பாளர் கண்ணன் - பவானி திருமணத்தை பல எதிர்ப்புகளை மீறி, தமிழ் முறைப்படி நடத்தி, தமிழ் ஆர்வலர்கள் சாதித்திருக்கிறார்கள்.

கண்ணன், பவானி திருமணம்
கண்ணன், பவானி திருமணம்
நா.ராஜமுருகன்

பவித்ரம் பாலமலை பாலமுருகன் மலை திருக்கோயிலில், இவர்களின் திருமணத்தை காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் விசுவநாதன் மங்கள நாண் எடுத்துக் கொடுத்து, தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இந்தத் திருமணத்தில், இந்திய பொதுவுடைமைக் கட்சி தேசிய குழு உறுப்பினர் சி.மகேந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தொடக்கம் முதல் இறுதி வரை ஒரு மாத காலமாக இந்த திருமணம் நடைபெறுவதற்காக உழைத்த, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சு.ராஜேஷ் கண்ணனிடம் பேசினோம்.

"பாலமலை பாலமுருகன் மலை திருக்கோயிலில் கண்ணன் - பவானியின் திருமணத்தை தமிழ்முறைப்படி நடத்த திட்டமிட்டோம். திருமணம் நடத்த வேண்டுமென பதிவு செய்யச் சென்றபோதே, கடுமையான எதிர்ப்பை கோயில் அர்ச்சகர்களும் கோயில் நிர்வாகமும் தெரிவித்தனர்.

ராஜேஷ் கண்ணன்
ராஜேஷ் கண்ணன்
நா.ராஜமுருகன்

ஆனால் நாங்கள், தமிழ் முறையில் திருமணம் நடத்தியே தீருவது என்று உறுதியுடன் போராடியதால், முதலில் 'கோயில் அடிவாரத்தில் நடத்திக்கொள்ளுங்கள்' எனக் கோயில் நிர்வாகம் கூறியது. 'இது எங்களின் உரிமை' எனக் கூறி உறுதியுடன் போராடினோம். அதனால், வேறுவழியின்றி, 'அதிகாலையில் முதல் திருமணமாக 10 நிமிடத்தில் மலைக்கோயிலில் கண்ணன், பவானி திருமணத்தை நடத்தி முடித்துக்கொள்ள வேண்டும்' என்று வாய் வழியாகக் கூறி, வேண்டா வெறுப்பாக அனுமதி அளித்தனர். நாங்கள் இதுபோன்ற தமிழ்முறை திருமணத்தை நடத்துவதைப் பார்த்து, வேறு யாரும் அப்படி நடத்த வேண்டும் எனக் கூறி விடக்கூடாது என்பதற்காகவே, கோயில் நிர்வாகம் இவ்வாறு கூறி அனுமதி கொடுத்தது.

கரூர் மாவட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு கரூர், திருமுக்கூடலூரில் கோயில் குடமுழுக்கை சிவனடியார்கள் மக்களோடு இணைந்து போராடி, தமிழில் நடத்திய வரலாறு உண்டு. அதன் தொடர்ச்சியாக, கடந்த 2020-ம் ஆண்டு தஞ்சை பெரிய கோயிலிலும், கரூர் பசுபதீஸ்வரர் கோயிலிலும் தமிழ் முறைப்படி, நீதிமன்ற உத்தரவோடு குடமுழுக்குகள் நடைபெற்றன. அதுமட்டுமன்றி உயர் நீதிமன்ற நீதிபதிகள், 'தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் இனி குடமுழுக்கு தமிழிலும் நடத்தப்பட வேண்டும்' என உத்தரவிட்டனர்.

இந்நிலையில், 'பாலமலை முருகன் கோயிலில் தமிழ் முறையில் திருமணம் நடத்தியே தீருவது' என உறுதியுடன் மணமக்கள், அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் இருந்ததால், அனைத்து எதிர்ப்புகளையும் முறியடித்து, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பாலமலை பாலமுருகன் மலைக்கோயிலில், உப்பிடமங்கலம் சிவனடியார்கள் தமிழ் முறைப்படி திருமணத்தை நடத்தி வைத்தனர்.

தமிழ் முறைபடி பத்திரிகை
தமிழ் முறைபடி பத்திரிகை
நா.ராஜமுருகன்
கரூர்: 3 மணி நேரம் தர்ணா; பணிந்த அதிகாரிகள் - மயானம் கேட்டு கிராம மக்களின் தொடர் போராட்டம்!

மக்களுக்குப் புரியும் மொழியில், எளிமையாகத் தமிழ் திருமறைகளைக் கூறி திருமணம் நடந்ததை, பாலமலை திருக்கோயிலுக்கு வந்த அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். நமக்குத் தெரிந்த, புரிந்த மொழியில் சிவனடியார்கள் தமிழ் மறைகளைச் சொல்லி நடத்தியது சிறப்பாக இருந்தது. 'இனிமேல் இப்படித்தான் நடத்த வேண்டும்' எனப் பலரும் ஆச்சர்யத்துடன் பேசிக்கொண்டனர்.

கண்ணன், பவானி திருமணம் நடந்த அன்று, பாலமலை பாலமுருகன் திருக்கோயிலில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடத்த பதிவு செய்யப்பட்டிருந்தன. எனவே, அந்தத் திருமணங்களில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் பாலமலையில் கூடியிருந்தனர். கண்ணன், பவானியின் திருமணத்தைத் தமிழ் முறையில் நடத்தியதைப் பார்த்த, வழக்கமாக பாலமுருகன் மலைக்கோயிலில் நடக்கும் சம்ஸ்கிருத முறை திருமணம் செய்ய வந்திருந்த வேறொரு குடும்பத்தினரும், 'எங்க மணமக்களுக்கும் இப்படித் தமிழ் முறையில் திருமணம் செய்யுங்க' என வலியுறுத்தினர். உடனே மகிழ்ச்சியடைந்த சிவனடியார்கள், அவர்களுக்கும் தமிழ் முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். இது, பாலமலை பாலமுருகன் கோயிலுக்கு வந்திருந்தவர்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது'' என்றார்.

தமிழ் முறை திருமணம் செய்துகொண்ட மணமக்களான கண்ணன், பவானி ஆகியோரை, இந்திய பொதுவுடைமைக் கட்சி தேசியக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் நேரில் வந்திருந்து வாழ்த்தினார். காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத் தோழர்களும், கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், பல்வேறு மக்கள் இயக்கத்தினரும், மணமக்களின் உறவினர்களும் நண்பர்களும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். பாலமலை கோயிலில் ஒரு வரலாற்று தமிழ்க் கலாசார திருமணத்தை நடத்திய திருப்தி ஏற்பட்டுள்ளது என்றனர் அனைவரும் மகிழச்சியாக!

மணமகன் கண்ணனிடம் பேசினோம்.

"நான் டிப்ளோமா கோர்ஸ் படிச்சுட்டு, சொந்தமா தொழில் செஞ்சுக்கிட்டு வர்றேன். அதோடு, சமூக பணிகளில் ஆர்வம் அதிகம். அதனால், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தில் இணைஞ்சு, பல்வேறு சமூக செயலாடுகளில் ஈடுப்பட்டுகிட்டு வர்றேன். இந்த நிலையில்தான், எனக்கும் பவானிக்கும் திருமணம் நிச்சயமாச்சு. அதைப் பாலமலை முருகன் கோயிலில் வைத்து, தமிழ் முறைப்படி செய்ய நினைத்தேன். தமிழ் ஆர்வலர்களிடம் சொன்னப்போ, தட்டிக் கொடுத்தாங்க. ஆனா, பாலமலை கோயில் நிர்வாகமும் அறநிலையத்துறை அதிகாரிகளும், 'காலம் காலமா சம்ஸ்கிருத முறைப்படிதான் திருமணங்கள் நடக்குது. அதை மாத்த முடியாது. அப்படி மாத்துறது, ஆகமத்தை மீறிய செயலாகிவிடும்'னு எதிர்ப்பு தெரிவித்தாங்க.

கண்ணன்
கண்ணன்
நா.ராஜமுருகன்

'ஆனா அரசு விதி, அவரவரர் முறைப்படி திருமணம் செய்துகொள்ளலாம்னு சொல்லுது. அதோடு, முருகனை எல்லோரும் தமிழ்க் கடவுள் என்று கொண்டாடுறோம். அப்படிப்பட்ட முருகன் கோயிலில் சம்ஸ்கிருத முறைப்படி திருமணம் நடத்துவது எப்படி ஆகமம் ஆகும்?'னு வாக்குவாதம் செய்தோம்'' என்றவரைத் தொடர்ந்தார் மணப்பெண் பவானி. ''அவங்க கடுமையா எதிர்த்தாங்க. இருந்தாலும், விடாப்பிடியா நின்று தொடர்ச்சியாகப் போராடி, தமிழ் முறைப்படி திருமணம் செய்துகிட்டோம். பத்திரிகையையும் தமிழ் முறைப்படி அச்சடித்ததோடு, முருகன், திருவள்ளுவர் படங்களை அச்சிட்டோம். அதோடு, ஔவையார், தீரன் சின்னமலை, நம்மாழ்வார், மேதகு பிரபாகரன் ஆகியோரின் மேற்கோள்களையும் பத்திரிகையில் அச்சடித்திருந்தோம்" என்றார்.

மணமக்கள் தமிழ்போல் தழைத்து வாழ்க!

அடுத்த கட்டுரைக்கு