Published:Updated:

கரூர்: `அரசு சொல்றத கேளுங்க!' - ஊரடங்கில் கட்டுப்பாடுகளுடன் நடந்த காதல் திருமணம்

ஹரிஸ், பிரியங்கா திருமணம்
ஹரிஸ், பிரியங்கா திருமணம்

இரண்டு வீடுகளில் மிக நெருங்கிய உறவினர்கள் 50 நபர்கள் மட்டுமே பங்கு பெற்று கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளான சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

கரூரில் கடந்த ஞாயிறு முழு ஊரடங்கு நாளில் உரிய விதிகளைப் பின்பற்றி, தகுந்த பாதுகாப்போடு ஐ.டி கம்பெனியில் பணிபுரியும் ஜோடியின் காதல் திருமணம் நடந்தேறியது. ``எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒருமுறைதான் திருமணம். ஆனால், அதை நினைத்தபடி நடத்த முடியவில்லை என்றாலும், நினைத்தவரோடு திருமணம் என்பதில் மகிழ்ச்சியா இருக்கிறோம்" என்று அந்தத் தம்பதிகள் தெரிவித்தனர்.

ஹரிஸ், பிரியங்கா திருமணம்
ஹரிஸ், பிரியங்கா திருமணம்

இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் கொத்துக் கொத்தாக இறந்து வருவது, மக்களை கலங்கடித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 20-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் தனியார் மென்பொருள் (ஐ.டி) கம்பெனியில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராகப் பணியாற்றும் கரூரைச் சேர்ந்த ஹரிஷ் என்பவருக்கும், பெங்களூர் தனியார் ஐ.டி கம்பெனியில் மனிதவள பிரிவில் பணியில் இருக்கும் சென்னையைச் சேர்ந்த பிரியங்கா என்பவருக்கும் திருமணம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டது. காதலர்களான அவர்களது திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்தோடு, முழு ஊரடங்கு நாளான ஏப்ரல் 25-ம் தேதி, கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கே.வி.பி நகர் பகுதியில் அமைந்துள்ள ஞானஸ்கந்தன் திருக்கோவிலில் மிகவும் எளிமையாக நடைபெற்றது.

 திருமண நிகழ்வில் உறவினர்கள்
திருமண நிகழ்வில் உறவினர்கள்

மேலும், கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் விடுதியில், எளிமையான முறையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டு வீடுகளின் மிக நெருங்கிய உறவினர்கள் 50 நபர்கள் மட்டுமே பங்குபெற்று கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளான சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஐ.டி கம்பெனியில் பணிபுரியும் இருவரும் காதலித்து வந்த நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் முழு ஊரடங்கு நாளில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைக் கடைப்பிடித்து திருமணம் நடைபெற்றது.

தங்களது திருமண நிகழ்வு குறித்து மணமக்கள் ஹரிஸ்- பிரியங்கா செய்தியாளர்களிடம், ``எங்கள் திருமணத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்று இரண்டு பேரும் முடிவு பண்ணினோம். அதற்காக, உறவினர்கள் அனைவருக்கும், இருவீட்டாரும் பத்திரிகை வைத்து அழைப்பு விடுத்திருந்தோம். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள இருந்த நிலையில், ஊரடங்கு என்பதால் மிகவும் எளிமையான முறையில் எங்கள் திருமணம் நடைபெற்றது. முக்கியமான பல உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திருமணத்துக்கு வரவில்லை என்பது வருத்தமளிக்கிறது. திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு முறைதான் நடைபெறும். அதில், உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் கலந்துகொள்ள முடியாதது வருத்தமா இருக்கு.

ஹரிஸ், பிரியங்கா
ஹரிஸ், பிரியங்கா

ஆனாலும், ஆசைப்பட்டபடி காதல் திருமணம் வாழ்க்கையில் இணைந்தது மிக்க மகிழ்ச்சி. எல்லாவற்றையும்விட, கொரோனா தீவிரமாகப் பரவி வருகிறது. பல்வேறு பகுதிகளிலும் நோய்த்தொற்று மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. அதனால், தனிப்பட்ட விருப்பு, வெறுப்பைவிட, அரசு அறிவித்துள்ள ஊரடங்குக் கட்டுப்பாடுகளை மதித்து பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். அதனால், உரிய விதிமுறைகளைப் பின்பற்றி, எங்கள் திருமணம் நடந்தது. மக்களும் அரசு சொல்லும் விதிகளைப் பின்பற்றி, தகுந்த ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு