Published:Updated:

`இந்த உதவி போதும்; என் மகனை கரைசேர்த்திடுவேன்!' - பெண்ணுக்கு ஒரு மணி நேரத்தில் வீடு வழங்கிய ஆட்சியர்

ஒரு மணி நேரத்திற்குள் பயனாளிக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கியதற்கான ஆணை தயாராக, அதை மாவட்ட ஆட்சித்தலைவர், சந்திராவிடம் வழங்கினார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கணவனால் கைவிடப்பட்டு, மாற்றுத்திறனாளி மகனோடு, போக்கிடம் இல்லாமல், குடியிருக்க வீடு இல்லாமல் தவித்த பெண்ணுக்கு வீடு ஒதுக்கீடு செய்து, அந்த வீட்டுக்குக் கட்ட வேண்டிய தொகையையும் செலுத்தி அந்தப் பெண்ணை நெகிழ வைத்திருக்கிறார், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்.

வீட்டுக்கான ஆணையைப் பெறும் சந்திரா
வீட்டுக்கான ஆணையைப் பெறும் சந்திரா

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள், ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கடந்த அக்டோபர் 11-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்ட அரங்கிற்கு கோரிக்கை மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளிகள் இருந்த இடத்திற்கே சென்று மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், அவர்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அந்தக் கூட்டத்தில் காந்திகிராமத்தைச் சேர்ந்த சந்திரா என்பவர், தனது மாற்றுத்திறனாளி மகன் ரவிச்சந்திரனுடன் (வயது 29) வந்து கோரிக்கை மனு ஒன்றை, கண்ணீருடன் அளித்தார். தன் மகன் கை, கால் இயங்காத, வாய் பேச இயலாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி என்ற அவர், தான் கணவனால் கைவிடப்பட்டவர் என்பதால் ஆதரவற்ற நிலையில் இருப்பதை கண்ணீரோடு தெரிவித்தார். அதோடு, தங்களுக்குக் குடி இருக்க வீடு இல்லை என்றும், தற்போது தன் உறவினர் வீட்டில் வசித்து வருவதாகவும், மாற்றுத்திறனாளி மகன் இருப்பதால் வாடகைக்குக் கூட யாரும் வீடு தர மறுக்கின்றார்கள் என்றும் கண்ணீர் மல்க ஆட்சியரிடம் தெரிவித்தார்.

அவரது நிர்கதியான நிலையை உணர்ந்த மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாகத் தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்தார். விவரங்களைக் கேட்டுக்கொண்ட அமைச்சர் உத்தரவின்படி, அந்தப் பெண்ணுக்கு காந்திகிராமத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒதுக்கிக் கொடுக்க துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும், மாற்றுத்திறனாளி மகனை எளிதில் அழைத்துச்செல்ல ஏதுவாக தரைத்தளத்தில் வீடு ஒதுக்கும்படியும், சக்கர நாற்காலி சென்று வர ஏதுவாக சாய்தள வசதிகள் செய்து தரும்படியும் மாவட்ட ஆட்சித்தலைவர் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆட்சியருடன் சந்திரா
ஆட்சியருடன் சந்திரா

பிறகு, ஒரு மணி நேரத்திற்குள் பயனாளிக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கியதற்கான ஆணை தயாராக, அதை மாவட்ட ஆட்சித்தலைவர், சந்திராவிடம் வழங்கினார். அதோடு, குடியிருப்புக்கு பயனாளி செலுத்த வேண்டிய தொகையான ரூ.1.88 லட்சம் பணத்தையும் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியில் இருந்து செலுத்துவதாகத் தெரிவித்தார். ஒரு மணி நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு ரூ.8.35 லட்சம் மதிப்பிலான வீடு தரைத்தளத்தில் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, அரசு வாகனத்தில் குடியிருப்புப் பகுதிக்கு மாற்றுத்திறனாளி மகனையும், அவர் தாயையும் அழைத்துச் சென்று, அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள கீழ்த்தளமான ஏ 2 பிளாக்கில் அதிகாரிகள் குடியமர்த்தினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நடந்தவை எல்லாம் கனவா, நனவா என்ற இன்ப அதிர்ச்சியில் இருந்த சந்திராவிடம் பேசினோம்.

``என் மகன் மாற்றுத்திறனாளியா இருந்ததால, என் கணவர் என்னை விட்டுப் போயிட்டார். யாரும் எனக்கு வாடகை வீடு கூடத் தரலை. பிறந்ததில் இருந்து கை, கால்கள் செயல்படாத, வாய் பேச இயலாத நிலையில உள்ள 29 வயசு மகன் கூட, உறவினர் வீட்ல வசிக்கிறேன். கூலி வேலை பார்த்து, என் மகனைக் காப்பாத்துறேன். கொரோனா காலத்துல எந்த வேலையும் இல்லாம ரொம்ப சிரமப்பட்டேன். இதனால வருமானத்துக்கும் வழியில்லாம, குடியிருக்கவும் வீடு இல்லாம அல்லாடினேன்.

`நடமாடும் கழிப்பறை; மனிதக் கழிவில் இயற்கை உரம்!' - கரூர் பள்ளி மாணவர்களின் அசத்தல் ஐடியா

என் நெலமைய எடுத்துக் கூறி, உதவி கேட்டு கடந்த 15 வருஷமா தொடர்ந்து கோரிக்கை வெச்சுக்கிட்டு வந்தேன். ஆனா, இப்போதான் என்னோட கோரிக்கை நிறைவேறி இருக்கு. மனு அளிச்ச ஒரு மணி நேரத்துக்குள்ள வீடு ஒதுக்கீடு செஞ்சு கொடுத்திருக்காங்க. வாழவே வழி தெரியாம நின்ன எனக்கு, இப்போது நம்பிக்கை வந்திருக்கு. இனி என் மகனை கரைசேர்த்திடுவேன். இந்த உதவியை என் ஆயுசுக்கும் மறக்கமாட்டேன்" என்றார் நெகிழ்ச்சியுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு