Published:Updated:

`முதல்வர் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட தனியார் கல்லூரிகள்!'' - எச்சரித்த கரூர் ஆட்சியர்

அன்பழகன் ஆய்வு
அன்பழகன் ஆய்வு ( நா.ராஜமுருகன் )

தமிழக அரசின் உத்தரவை மீறி கரூரில் ஒருசில தனியார் கல்லூரிகள் இன்றும் வழக்கம்போல் இயங்கின. காலையில் கரூர் பேருந்து ரவுண்டானா பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது கல்லூரி வாகனத்துக்காகக் காத்திருந்தனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மாணவர்களைக் காபந்து பண்ண அனைத்து விதமான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கடந்த 16-ம் தேதி முதல் வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்து உத்தரவிட்டார் தமிழக முதல்வர். ஆனால், அதைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, கரூர் மாவட்டத்தில் பல தனியார் கல்லூரி நிர்வாகங்கள் தங்கள் கல்லூரிகளை இயக்கி வந்ததைப் பார்த்து கோபமான கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், `நடவடிக்கை பாயும்' என்று சாட்டையைச் சொடுக்கியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அன்பழகன் ஆய்வு
அன்பழகன் ஆய்வு
நா.ராஜமுருகன்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், இன்று உலக மக்களையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. இதன் தீவிரத்தை உணர்ந்த இந்திய அரசு, இதை தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. தமிழக அரசும், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், திருமண மண்டபங்கள், சுற்றுலாத் தலங்கள், பிரபல ஆலயங்கள் என்று மக்கள் கூடும் அத்தனை இடங்களையும் மூடும்படி உத்தரவிட்டுள்ளது.

தொடக்கப் பள்ளி விடுமுறை; திரையரங்குகள் மூடல்!- முதல்வர் பழனிசாமி சுட்டிக்காட்டிய 5 விஷயங்கள் #Corona

`பள்ளி, கல்லூரிகளைக் கண்டிப்பாக மூட வேண்டும்' என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதையடுத்து, கரூர் மாவட்ட அட்சியர் அன்பழகன் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, `கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார். அவரது உத்தரவை ஏற்று பல தனியார் மற்றும் அரசுப் பள்ளி, கல்லூரிகளும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்புச் செய்து உத்தரவிட்டன.

அன்பழகன் ஆய்வு
அன்பழகன் ஆய்வு
நா.ராஜமுருகன்

ஆனால், ஒருசில தனியார் கல்லூரிகள் இன்றும் வழக்கம்போல் இயங்கின. இன்று காலையில் கரூர் பேருந்து ரவுண்டானா பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது கல்லூரி வாகனத்துக்காகக் காத்திருந்தனர். இதை அறிந்த சில பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் தொலைபேசி வாயிலாகப் புகார் அளித்தனர். இந்த நிலையில், இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், கரூர் ரயில் நிலையத்தில் சுகாதாரப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில், ``கரூர் ரயில் நிலையத்தில் வெளி மாவட்டப் பயணிகளை மருத்துவ பரிசோதணைக்குப் பிறகே, உள்ளேயும் வெளியேவும் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ரயில் வருவதற்கு முன்பு பயணிகள் காத்திருக்கும்போது, அந்த இடைவெளியிலும் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஒலிப்பெருக்கி மூலம் கூறப்படுகிறது.

அன்பழகன் ஆய்வு
அன்பழகன் ஆய்வு
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது எனத் தவறான செய்தி பரப்பப்படுகிறது. அப்படி யாருக்கும் நோய்த்தொற்று ஏற்படவில்லை. அரசு உத்தரவை மீறி செயல்படும் தனியார் கல்லூரிகள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசு உத்தரவை அவர்கள் அலட்சியம் செய்தால், தக்க பலனை அவர்கள் அடைய நேரிடும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.

அடுத்த கட்டுரைக்கு