Published:Updated:

`கிலோ 4 ரூபாய்க்கு வாங்கக்கூட ஆள் இல்லை!' - கொரோனா தாக்கத்தால் கலங்கும் முருங்கை விவசாயிகள்

முருங்கையோடு விவசாயிகள்..
முருங்கையோடு விவசாயிகள்.. ( நா.ராஜமுருகன் )

அரவக்குறிச்சி இடைத்தேர்தலின்போது, தி.மு.க சார்பில் நின்ற செந்தில் பாலாஜி, `நான் எம்.எல்.ஏ-வானால் இங்கே உற்பத்தியாகும் முருங்கை மூலம் முருங்கை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து தர நடவடிக்கை மேற்கொள்வேன்'னு சொன்னார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, கிலோ ரூ.600 வரை விலைபோன முருங்கைக் காய்கள், இப்போது கிலோ 4 ரூபாய்க்கு விலைபோவதாக கண்ணீர் வடிக்கின்றனர் அரவக்குறிச்சிப் பகுதி முருங்கை விவசாயிகள்.

முருங்கையோடு விவசாயிகள்..
முருங்கையோடு விவசாயிகள்..
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் அதிக அளவில் முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தின் மொத்த முருங்கை உற்பத்தியில் 60 சதவிகித உற்பத்தி அரவக்குறிச்சி ஒன்றியப் பகுதியில்தான் நடக்கிறது.

Vikatan

இயற்கை முறையில் இங்கே விளைவிக்கப்படும் முருங்கை, கரூர் மட்டுமல்லாது, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

மருத்துவக் குணம் கொண்ட பயிர் என்பதாலும், சமீபகாலங்களில் காய்கறிகள், கீரைகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டிருப்பதாலும், முருங்கைக்கு நல்ல கிராக்கி இருந்து வந்தது.

அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதல் உலக மக்களை அச்சுறுத்திக் கொண்டிருப்பதால், வர்த்தகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், அரவக்குறிச்சி முருங்கைக்காய் கிலோ 4 ரூபாய்க்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 4 ரூபாய்க்குக்கூட முருங்கைக்காயை வியாபாரிகள் கொள்முதல் செய்ய முன்வராததால், பல இடங்களில் முருங்கைக்காய் மலைபோல குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலை தொடர்ந்தால், முருங்கையின் விலை 1 ரூபாய்க்கு விற்க வேண்டிய நிலை ஏற்படும் எனக் கலங்குகிறார்கள், முருங்கையை உற்பத்தி செய்யும் விவசாயிகள். தற்போது ஏற்பட்டுள்ள இழப்பீட்டை சரி செய்ய அரசு உதவ முன்வர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, அரவக்குறிச்சி விவசாயி கருவை ராஜா கூறுகையில்,

``அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைக்காய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகப்பெரிய கேள்விக்குறியாய் உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கொள்முதல் விலை அதலபாதாளத்துக்குப் போய் உள்ளது. அரவக்குறிச்சி இடைத்தேர்தலின்போது, தி.மு.க சார்பில் நின்ற செந்தில் பாலாஜி, `நான் எம்.எல்.ஏ-வானால் அரவக்குறிச்சிப் பகுதியில் நேரடி முருங்கை கொள்முதல் நிலையம் அமைத்துத் தருவேன்.

 கருவை ராஜா
கருவை ராஜா
நா.ராஜமுருகன்

இங்கே உற்பத்தியாகும் முருங்கை மூலம் முருங்கை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து தர நடவடிக்கை மேற்கொள்வேன்'னு சொன்னார். இதுக்கு முன்னாடி தேர்தலில் போட்டியிட்டவர்களும் இதையே வாக்குறுதியாகக் கொடுத்தனர். ஆனால், சொன்னபடி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அப்படிச் செய்திருந்தால், முருங்கை வியாபாரத்துக்கு நெருக்கடி ஏற்படும் காலங்களில் முருங்கை விவசாயிகள் தப்பித்திருக்க முடியும். இப்போது எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டத்துக்கு அரசு இழப்பீடு தர வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

அடுத்த கட்டுரைக்கு