Published:Updated:

`நள்ளிரவில் பற்றியெரிந்த வைக்கோல் போர்!' - தீயணைப்பு வீரர்களோடு போராடி அசத்திய கரூர் இளைஞர்கள்

தீயை அணைக்கும் இளைஞர்கள்
தீயை அணைக்கும் இளைஞர்கள்

காற்று பலமாக அடித்ததால், நடேசன் வீட்டு வைக்கோல் போரிலிருந்து தீ பரவி, அந்தக் குடிசை வீடுகளையும், வைக்கோல் போர்களையும் எரித்து சாம்பலாக்கிவிடுமோ என்று ஒட்டுமொத்த கிராமமும் பதட்டம் அடைந்தது.

விவசாயி ஒருவருக்குச் சொந்தமான வைக்கோல் போர் ஒன்று தீப்பற்றி எரிய, அதை அருகில் உள்ள குடிசை வீடுகளுக்குப் பரவாமல், தீயணைப்பு வீரர்களோடு சேர்ந்து போராடி, தீயை அனைத்த குளித்தலை இளைஞர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தீயை அணைக்கும் இளைஞர்கள்
தீயை அணைக்கும் இளைஞர்கள்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள சத்தியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன். விவசாயியான இவர், தனது வீட்டுக்கு அருகில் வைக்கோல் போரைப் போட்டுவைத்திருந்தார்.

'மாவட்டத்துக்கு ஒரு விவசாயி; மருந்தில்லா விவசாயம்!' -சகாயம் ஐஏஎஸ் முன்னெடுக்கும் 'கலப்பைத் திட்டம்'

இந்த நிலையில், அந்த வைக்கோல் போர் திடீரென இரவு 12 மணியளவில் பற்றியெரிந்திருக்கிறது. அதைப் பார்த்த நடேசன் மட்டுமின்றி, மொத்தக் கிராமமும் பதற்றமடைந்தது. காரணம், அருகில் 20-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளும் 10-க்கும் மேற்பட்ட வைகோல் போர்களும் இருந்ததும்தான்.

தீயை அணைக்கும் இளைஞர்கள்
தீயை அணைக்கும் இளைஞர்கள்

காற்று பலமாக அடித்ததால், நடேசன் வீட்டு வைக்கோல் போரிலிருந்து தீ பரவி, அந்தக் குடிசை வீடுகளையும், வைக்கோல் போர்களையும் எரித்து சாம்பலாக்கிவிடுமோ என்று ஒட்டுமொத்த கிராமமும் பதற்றம் அடைந்தது. உடனே தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் சொல்லப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அங்கே வந்தனர்.

ஆனால் கோடைக்காலம் என்பதால், மளமளவென பரவும் தீயை அணைக்க தங்களால் மட்டும் முடியாது, கூடுதலாக ஆட்கள் தேவை என்று சொல்லியிருக்கிறார்கள். உடனே, திலக் என்ற காவலர் மூலம், கொரோனா ஊரடங்கு பாதுகாப்புப் பணிக்காக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட, ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸை சேர்ந்த குளித்தலைப் பகுதி இளைஞர்கள் நான்கு பேரை, சம்பவ இடத்துக்கு வரவழைத்தனர். சுந்தர், தியாகு, மது மற்றும் இந்திரஜித் என்ற அந்த நான்கு இளைஞர்களும், தீயணைப்பு வீரர்களோடு சேர்ந்து கடுமையாகப் போராடி, அதிகாலை 4 மணியளவில் வைக்கோல் போர் தீயை அணைத்தனர்.

தீயை அணைக்கும் இளைஞர்கள்
தீயை அணைக்கும் இளைஞர்கள்

இதனால், அருகில் உள்ள குடிசை வீடுகளும் வைக்கோல் போர்களும் எரியாமல் தப்பித்தன. நிம்மதியடைந்த நடேசனும் கிராம மக்களும் தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி சொன்னார்கள். குறிப்பாக, தங்கள் உயிரைப் பணயம் வைத்து தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கிய அந்த நான்கு இளைஞர்களையும் பாராட்டினர்.

இது குறித்து, ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸை சேர்ந்த சுந்தரிடம் பேசினோம்.`` கொரோனா ஊரடங்கு சம்பந்தப்பட்ட பணிகளுக்கு குளித்தலைப் பகுதியைச் சேர்ந்த காவல்துறையினருக்கு உதவி செய்வதற்காக, 45 இளைஞர்களை ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸாக தற்காலிகமாக நியமிச்சிருக்காங்க. அந்த வகையில்தான், பல்வேறு பணிகளை செஞ்சுக்கிட்டு வர்றோம். இந்த நிலையில், சத்தியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நடேசன் என்பவரது வைக்கோல் போரில் ஏற்பட்ட தீயை அணைக்க எங்களைக் கூப்பிட்டாங்க. தீயை அணைப்பதில் எங்களுக்கு எந்தவித முன் அனுபவமும் இல்லை. இருந்தாலும், இந்த நேரத்தில் ஒரு கிராமத்தையே காப்பாற்றும் வாய்ப்பு கிடைச்சிருக்கேனு துணிஞ்சு போனோம். பயங்கர தீயா இருந்துச்சு.

சுந்தர்
சுந்தர்

அந்தக் கிராமமே புகை மண்டலமா காட்சியளித்தது. 2 கிலோமீட்டர் தாண்டியுள்ள மணப்பாறை சாலை வரை புகை பரவியது. தீயணைப்பு வீரர்களோடு சேர்ந்து, எரிந்துகொண்டிருக்கும் வைக்கோல் போரில் இருந்து குடிசைப் பகுதிகளுக்கு தீ பரவாமல் இருக்க, தண்ணீர் அடித்தோம்.

தண்ணீர் பட்டு அணைந்த பகுதியில் உள்ள எரிந்த வைக்கோலை அள்ளி, அப்புறப்படுதினோம். மக்களை அருகில் வராமல் பார்த்துக் கொண்டோம். அருகில் இருந்த குடிசைப் பகுதிகளில் தூங்கிகொண்டிருந்த எல்லோரையும் எழுப்பி, வெளியேற்றினோம். இப்படி அனைத்து வேலைகளையும் பார்த்தோம். தீயணைப்பு வீரர்கள் இன்னொரு பக்கம் திறமையாக தீயை அணைத்தனர். இதனால், பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. எல்லோரும் எங்களைப் பாராட்டியதும், மிகப்பெரிய சாதனை செய்த உணர்வை அடைந்தோம்" என்றார் மகிழ்ச்சியாக.

அடுத்த கட்டுரைக்கு