Published:Updated:

`காசு இல்லன்னா வெளியே போ!' -கரூரில் வீட்டு உரிமையாளரால் கட்டடத் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்

நடுரோட்டில் குடியிருந்த நாகராஜன் குடும்பம்
நடுரோட்டில் குடியிருந்த நாகராஜன் குடும்பம்

குடும்பத்தோடு எங்கே போவது என்று தெரியாமல், தட்டுமுட்டுச் சாமான்களோடு கால்போன போக்கில் நடந்திருக்கிறார், நாகராஜன்.

வாடகைப் பணம் தராததால், கட்டடத் தொழிலாளியை வீட்டு உரிமையாளர் வீட்டைவிட்டு வெளியேற்றிய சம்பவம் கரூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வருவாய்த்துறை அதிகாரிகள் தலையிட்டு, அந்தக் கட்டட தொழிலாளியை மறுபடியும் அதே வீட்டில் குடியிருக்க வைத்து, பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.

நடுரோட்டில் குடியிருந்த நாகராஜன் குடும்பம்
நடுரோட்டில் குடியிருந்த நாகராஜன் குடும்பம்

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கிறது, மூக்கணாங்குறிச்சி. இந்தக் கிராமத்தில் வசித்து வருபவர், லட்சுமி. இவரது மற்றொரு வீட்டில் நாகராஜன் என்பவர் வாடகைக்குக் குடியிருந்து வந்தார். கட்டடத் தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், நாகராஜனுக்கு வேலை கிடைக்கவில்லை.

`அணில், முயலை வேட்டையாடி பெருமைப்பட்ட இளைஞர்கள்!' -அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த கரூர் வனத்துறை

இதனால், அவரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. வருமானத்துக்கு வழியில்லாததால், அவர் குடும்பம் உணவு சாப்பிடுவதற்கும் வழியில்லாமல் தவித்து வந்திருக்கிறது. `வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களிடம் வாடகை வசூல் செய்யக் கூடாது' என்று அரசே அறிவித்ததால், `தன்னிடம் வாடகை கேட்கமாட்டார்கள்' என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டார் நாகராஜன்.

விசாரணை நடத்தும் தாசில்தார்
விசாரணை நடத்தும் தாசில்தார்

ஆனால், நாகராஜன் குடியிருந்த வீட்டின் உரிமையாளரான லட்சுமியோ, கடந்த மாதமே நாகராஜனிடம் வாடகையைக் கேட்டு தொல்லை கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. தனது நிலைமையைச் சொல்லி நாகராஜன் கண்ணீர் வடித்தும், லட்சுமி மனமிறங்கவில்லையாம். இருந்தாலும் ஒரு மாத காலத்தை நாகராஜன் அங்கேயே கழித்துள்ளார்.

இந்த நிலையில், மே மாதம் பிறந்துள்ளதால், ஏப்ரல் மாதத்துக்கான வாடகைப் பணத்தைக் கேட்டு, லட்சுமி நச்சரித்தாராம். அதற்கு, `கொரோனா பிரச்னை முடிந்ததும், வேலைக்குப் போய் எல்லா மாத வாடகையையும் சேர்த்து கட்டுறேன்' என்று சொல்லியுள்ளார். ஆனால், அதற்கு மனமிறங்காத லட்சுமி, நாகராஜனை குடும்பத்தோடு சேர்த்து வெளியே துரத்தியடித்ததாகச் சொல்கிறார்கள்.

தங்களது நிலைமையை எண்ணி நொந்துகொண்ட நாகராஜன், குடும்பத்தோடு எங்கே போவது என்று தெரியாமல், தட்டுமுட்டுச் சாமான்களோடு கால்போன போக்கில் நடந்திருக்கிறார். பசி வேறு வாட்டி எடுக்க, வெள்ளியணை என்ற கிராமத்தில் சாலையோரத்தில் உள்ள மரத்தில் தங்கிவிட்டார். இரவுப் பொழுதையும் அங்கேயே படுத்து தூங்கி கழித்திருக்கிறது, அந்தக் குடும்பம். இந்த நிலையில், சாலையோரத்தில் குடியிருந்த நாகராஜனின் குடும்ப நிலையைப் பற்றி அறிந்துகொண்ட அந்தப் பகுதி மக்கள், அதிர்ந்து போனார்கள். உடனடியாக, வெள்ளியணை காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீஸார், நாகராஜனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை நடத்தும் தாசில்தார்
விசாரணை நடத்தும் தாசில்தார்

விசாரணை முடிவில், அந்தக் குடும்பத்தை பழையபடி லட்சுமி வீட்டில் குடியிருக்க வைப்பதாக வாக்குறுதி கொடுத்தனர். இதற்கிடையில், இந்த விவகாரம் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர் அன்பழகன், உடனடியாக தாசில்தார், மூக்கணாங்குறிச்சி ஆர்.ஐ, வி.ஏ.ஓ உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்களை அங்கே அனுப்பி வைத்தார்.

அவர்கள் நாகராஜன் குடும்பத்தை அழைத்துக்கொண்டு, லட்சுமியிடம் போய் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். முதலில், நாகராஜனிடம், `இந்த வீட்டில் தொடர்ந்து குடியிருக்கிறீர்களா, இல்லை, வேறு வீடு பார்த்துக் கொள்கிறீர்களா?' என்று கேட்டார். அதற்கு நாகராஜன், `கையில் அம்மஞ்சல்லி காசு இல்லை. சாப்பாட்டுக்கே திண்டாடுறோம். வேறு வீடு பார்த்தா, அட்வான்ஸ் கொடுக்கணும். இந்த நேரத்துல வீடும் தரமாட்டாங்க' என்று சொல்லியிருக்கிறார்.

அதனால் லட்சுமியிடம் திரும்பிய தாசில்தார், ``நாகராஜன் குடும்பத்தோடு உங்க வீட்டுலதான் குடியிருப்பார். கொரோனா பிரச்னை முடியும்வரை அவரை வெளியேற்றவும் கூடாது; அவரிடம் வாடகையும் கேட்கக் கூடாது" என்று எச்சரித்தார். ஆனால் லட்சுமியோ, ``இரண்டு மாத வாடகை தராத அவங்களை மறுபடியும் என்னோட வீட்டுல குடியமர்த்த முடியாது" என்றார்.

விசாரணை நடத்தும் தாசில்தார்
விசாரணை நடத்தும் தாசில்தார்

அதைக் கேட்டு கோபப்பட்ட தாசில்தார், ``வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களிடம் கொரோனா பிரச்னை முடியும் வரை வாடகை வசூலிக்க கூடாதுனு அரசே சொல்லியிருக்கு. அதையும் மீறி, நீங்க இப்படி செயல்பட்டா சட்டப்படி குற்றம். அதையும் மீறி, நாகராஜன் குடும்பத்துக்கு தொல்லைக் கொடுத்தா, உங்க மேல வழக்கு போட வேண்டியிருக்கும். வருவாய்த்துறை அதிகாரிகள், காவல் துறை, பத்திரிகையாளர்கள்னு பலரும் வந்திருக்கிறோம். பிரச்னை பண்ணாம நாகராஜன் குடும்பத்தை உள்ளே அனுப்புங்க. இல்லைன்னா, உங்க மேல உடனடியாக நடவடிக்கை பாயும்" என்று சொல்ல, அதன்பிறகே நாகராஜன் குடும்பத்தை வீட்டுக்குள் அனுமதித்தார், லட்சுமி.

`மறுபடியும் லட்சுமி பிரச்னை பண்ணுனா, என்னைக் கூப்பிடுங்க' என்று தாசில்தார் தனது தொடர்பு எண்ணை நாகராஜனிடம் வழங்கிவிட்டே, அங்கிருந்து கிளம்பினார்.

அடுத்த கட்டுரைக்கு