Published:Updated:

`பழங்கால தமிழ்க் கல்வெட்டுகளைப் படிப்பது எப்படி?' -கரூர் அரசுப் பள்ளிகளைக் கலக்கும் தமிழி பயிற்சி

தமிழி எழுத்துப் பயிற்சியில் மாணவி
தமிழி எழுத்துப் பயிற்சியில் மாணவி

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்தத் தமிழி எழுத்துப் பயிற்சியை அளித்து வருகிறோம். 2020-ம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் ஒரு லட்சம் மாணவர்களுக்கு கற்றுத் தர இருக்கிறோம்.

குளித்தலையில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பழங்கால கல்வெட்டுகளில் இருக்கும் தமிழி எழுத்துகள் பயிற்சி கொடுக்கப்பட்டிருப்பது, மாணவர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழி எழுத்துப் பயிற்சி கொடுக்கும் ராமசுப்பிரமணியன்
தமிழி எழுத்துப் பயிற்சி கொடுக்கும் ராமசுப்பிரமணியன்

`தனியார் பள்ளிகள் மட்டுமல்ல, அரசுப் பள்ளிகள் மாணவர்களுக்குக் கூட தமிழில் சரளமாகப் பேசவோ, எழுதவோ முடியவில்லை. மாறாக, ஆங்கிலம் கற்பதில் அவர்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்கு' என்ற குற்றச்சாட்டு கல்வியாளர்கள் மத்தியில் முன்வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள பல்வேறு அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்குத் தமிழி எழுத்துப் பயிற்சி தரப்படுவது தனிக் கவனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

குளித்தலை நூலக வாசகர் வட்டம் சார்பில், குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த எழுத்துப் பயிற்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. குளித்தலை நூலக வாசகர் வட்டத் தலைவர் கோபால தேசிகன் இந்த தமிழி எழுத்துப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார்.

 தமிழி எழுத்துப் பயிற்சியில் மாணவி
தமிழி எழுத்துப் பயிற்சியில் மாணவி

குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம், குளித்தலை கிளை நூலக நூலகர் ஆனந்த கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பல அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆர்வமுடன் இந்தத் தமிழி எழுத்துப் பயிற்சியில் கலந்து கொண்டனர். இந்தத் தமிழி எழுத்துப் பயிற்சியை, திருவள்ளுவர் மாணவர் இளைஞர் பேரியக்க தேசிய ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன் மேற்கொண்டார்.

`தாய்க்குப் பெருமைசேர்த்த மகமு சுந்தரபாண்டியன்!' -131 ஆண்டு 
பழைமையான பாண்டியாபுரம் கல்வெட்டு

ராமசுப்ரமணியனிடம் பேசினோம்.

``2009-ம் ஆண்டு புகழூர் சென்றபோது, அங்கிருந்த கல்வெட்டில் உள்ள எழுத்துகள் தமிழி வடிவத்தில் இருந்தன. அதைப் படித்து புரிந்துகொள்ள முடியவில்லை. அதனால், புவனேஸ்வரி என்ற ஆசிரியையின் உதவியுடன், எங்கள் பள்ளியைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு தமிழி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து எங்கள் பள்ளியில் உள்ள ஆசிரியர்களும் நானும் தமிழி எழுத்துகளைப் படிக்க, எழுத கற்றுக்கொண்டோம். முதல்கட்டமாகத் திருக்குறளைத் தமிழி முறையில் எழுதி, பிரின்டிங்கில் ஓலைச்சுவடி போல் ஆவணப்படுத்தினோம். அதைப் பார்த்த தேசிய தொல்லியல் நினைவுச் சின்னத்தின் தலைவர் தருண் விஜய், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பாண்டியராஜன் ஆகியோர் பாராட்டினர்.

தமிழி எழுத்துப் பயிற்சி கொடுக்கும் ராமசுப்ரமணியன்
தமிழி எழுத்துப் பயிற்சி கொடுக்கும் ராமசுப்ரமணியன்

அதனால், நாங்கள் தமிழி முறையில் ஆவணப்படுத்திய சங்க இலக்கியங்களை விரைவில் தமிழி வடிவிலான புத்தகங்களாக வெளியிட இருக்கிறோம். அதேபோல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்தத் தமிழி எழுத்துப் பயிற்சியை அளித்து வருகிறோம். 2020-ம் ஆண்டுக்குள் குறைந்தப்பட்சம் ஒரு லட்சம் மாணவர்களுக்கு கற்றுத் தர இருக்கிறோம். அதையொட்டி, குளித்தலைப் பகுதி மாணவர்களுக்கு இந்தப் பயிற்சியை அளித்தோம். அவர்களும் ஆர்வமுடன் இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டார்கள்" என்றார்.

இந்தப் பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்கள், ``எங்களாலும் இனிமேல் பழங்கால கல்வெட்டுக்களைப் படிக்க முடியும்" என்கின்றனர் உற்சாகமான குரலில்.

முதல் பெண்கள்: இந்தியாவின் முதல் தொழில்முறை... பெண் கல்வெட்டு ஆய்வாளர்... முனைவர் மார்க்சிய காந்தி
அடுத்த கட்டுரைக்கு