Election bannerElection banner
Published:Updated:

`நான் இதுவரை கரூரைக்கூட தாண்டினதில்ல; ஆனா, இப்போ இஸ்ரோ போறேன்!' - நெகிழும் அரசுப் பள்ளி மாணவி

தனபாலுடன் சிவரஞ்சனி
தனபாலுடன் சிவரஞ்சனி ( நா.ராஜமுருகன் )

''தென்னிந்திய அளவில் கலந்துகிட்ட 15,000 பேரில் 6-ம் இடம் வந்தேன். இஸ்ரோ செல்லும் தேதியை விரைவில் அறிவிப்பதா சொல்லியிருக்காங்க. அங்க ராக்கெட் ஏவும் நேரத்தில் எங்களை அழைத்து, அந்த அற்புதக் காட்சியைப் பார்க்கும் வாய்ப்பை வழங்க இருக்காங்க.''

தென்னிந்திய அளவில் தனியார் கல்லூரி ஒன்று நடத்திய விநாடி வினா போட்டியில் வென்ற கரூர் அரசுப் பள்ளி மாணவி ஒருவர், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மைய ராக்கெட் ஏவுதளத்தைப் பார்வையிடத் தேர்வாகி இருக்கிறார். "நான் இதுவரை கரூரைத் தாண்டியதில்ல ஆனா, விண்வெளி ஆய்வு மையத்துல இருந்து ராக்கெட் விண்ணில் சீறிப்பாயும் நிகழ்வை பார்க்கப்போறேன், இஸ்ரோவுக்கு செல்வேன்னு கனவுலயும் நான் நினைச்சதில்ல" என்று அந்த மாணவி நெகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார்.

பஞ்சப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி
பஞ்சப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள பஞ்சப்பட்டியில் செயல்பட்டு வருகிறது, அரசு மேல்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் மாணவி சிவரஞ்சனிதான், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில், மண்ணில் இருந்து விண்ணுக்கு ராக்கெட் பறக்கும் நிகழ்வை காணத் தேர்வாகியிருக்கிறார். கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, 'ஸ்ரீசக்தி ஸ்பேஸ் மிஷன்' என்ற அறிவியல் விநாடி வினா போட்டியை, 'இந்திய விண்வெளி தொழில்நுட்பம்' என்ற தலைப்பில், இணைய வழியில் (ஆன்லைன்) மூன்று கட்டமாக நடத்தியது.

இப்போட்டியில், தென்னிந்திய அளவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், தெலங்கானா, கேரளம் மற்றும் புதுச்சேரியில் இருந்து மத்திய, மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, சுயநிதி பள்ளிகளைச் சேர்ந்த 15,000 மாணவர்கள் கலந்துகொண்டனர். அந்த 15,000 பேரும் முதற்சுற்று எழுத்துத் தேர்வை எழுதினார்கள். இந்த இணையவழி ஆன்லைன் போட்டியில் சிவரஞ்சனி உட்பட கரூர் மாவட்டம், பஞ்சப்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 30 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.

அப்படி நடைபெற்ற போட்டியில் அரையிறுதிச்சுற்றில் 1,000 மாணவர்கள், இறுதிச்சுற்றில் 250 மாணவர்கள் எனத் தேர்வுபெற்று, இறுதியாக இஸ்ரோ செல்ல 100 மாணவர்கள் தேர்வு பெற்றனர். அவர்களில் ஒரு மாணவியாகத்தான், பஞ்சப்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி சு.சிவரஞ்சனி 6-ம் இடம் பெற்றுத் தேர்வாகி தமிழகத்துக்கும், அரசுப் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இஸ்ரோ செல்லத் தேர்வான மாணவி சிவரஞ்சனிக்கு, விண்வெளி சார்ந்த இணையவழி பயிற்சியை, இந்தப் பள்ளியில் பணியாற்றும் முதுகலை இயற்பியல் ஆசிரியர் தனபால் வழங்கியிருந்தார். இஸ்ரோ செல்லும் மாணவி சிவரஞ்சனி மற்றும் வழிகாட்டி ஆசிரியர் தனபால் ஆகியோர், கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கா.பெ.மகேஸ்வரியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இஸ்ரோ செல்லும் மாணவியை பஞ்சப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர் மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

சிவரஞ்சனியை வாழ்த்தும் மகேஸ்வரி
சிவரஞ்சனியை வாழ்த்தும் மகேஸ்வரி
நா.ராஜமுருகன்
`ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்ட அப்பா, அண்ணனைக் கொன்னாங்க... இப்போ நான் வந்திருக்கேன்!' - அன்னலட்சுமி

மாணவி சிவரஞ்சனியிடம் பேசினோம்.

"பஞ்சப்பட்டியை அடுத்துள்ள கண்ணமுத்தாம்பட்டியில உள்ள சாதாரண ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த மாணவி நான். நான் கரூரைக்கூட இதுவரை தாண்டினதில்ல. ஆனா, இப்போ இஸ்ரோ செல்ல தேர்வாகியிருப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்படி இஸ்ரோ போவேன்னு கனவிலும் நினைச்சதில்ல. எல்லாத்துக்கும் காரணம், எங்க பள்ளி இயற்பியல் ஆசிரியர் தனபால் சார்தான். தனபால் சார், எங்க பள்ளியில் 'ஸ்பேஸ் க்ளப்' குழுவை ஆரம்பித்து, வாட்ஸ்அப் மூலம் நான் உட்பட 30 மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தார்.

அதோடு, பள்ளியில் அறிவியல் ஆய்வகம் உருவாக்கி, 60 மாணவர்களை இளம் விஞ்ஞானிகளாக உருவாக்கியிருக்கார். அதற்கு, தலைமை ஆசிரியையும் மற்ற ஆசிரியர்களும் பெரிய உதவி பண்றாங்க. தனபால் சார் எனக்குப் போதிய பயிற்சியை அளித்ததால், என்னால எளிதாக அந்தப் போட்டியை அணுக முடிந்தது.

முதல் சுற்றில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்டாங்க. எங்க பள்ளியில் இருந்து நான் மட்டுமே அடுத்த சுற்றுக்குத் தேர்வானேன்.

 சிவரஞ்சனி
சிவரஞ்சனி
நா.ராஜமுருகன்

இரண்டாவது சுற்றில் விண்வெளி, பொது அறிவு பற்றிக் கேள்வி கேட்டாங்க. சிறப்பா பதில் அளித்ததால, மூன்றாவது சுற்றுக்குத் தேர்வானேன். அதில் முழுக்க முழுக்க விண்வெளி குறித்தே கேள்விகள் கேட்டாங்க. அதிலும் சிறப்பா பதில் அளித்தேன். அதனால தேர்வானேன்.

தென்னிந்திய அளவுல கலந்துகிட்ட 15,000 பேர்ல 6-ம் இடம் வரமுடிந்தது. கரூர் மாவட்டத்தில் தேர்வான அரசுப் பள்ளி மாணவி நான் ஒருவர் மட்டுமே. இஸ்ரோ செல்லும் தேதியை விரைவில் அறிவிப்பதாகச் சொல்லியிருக்காங்க. அங்க ராக்கெட் ஏவும் நேரத்தில் எங்களை அழைச்சு, அந்த அற்புதக் காட்சியைப் பார்க்கும் வாய்ப்பை வழங்க இருக்காங்க. அந்தத் தேதி எப்போ வரும்னு எனக்குப் படபடப்பா இருக்கு. வருங்காலத்தில் அப்துல் கலாம் ஐயா மாதிரி ஒரு சிறந்த விஞ்ஞானி ஆவதே லட்சியம்" என்றார்.

சிறகுகள் பறக்கட்டும் வானம் நோக்கி!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு