Published:Updated:

`உத்தரவை போலீஸ் செயல்படுத்தலைன்னா எனக்கு போன் பண்ணுங்க!' - முகிலனுக்கு உறுதி கொடுத்த நீதிபதி

``சரியாக என்னை தூங்கவிடவில்லை. என் மனநிலை சரியில்லை. அதனால், நல்ல வைத்தியம் எடுத்த பிறகு, நான் எனது வாக்குமூலத்தை சொல்கிறேன்"

முகிலன்
முகிலன்

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட முகிலன், இரவோடு இரவாக கரூர் ஜே.எம்-2 நீதிபதி விஜய்கார்த்திக் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். "எனக்கு மூணு நாளா கொடுமை நடக்குது. சாப்பாடு தரலை. உயிருக்கு உத்தரவாதம் இல்லை. எனக்கு ஏதாவது ஆயி நான் இறக்க நேர்ந்தால், விதையாக மாறுவேன்; ஆயிரம் முகிலன்கள் உருவாவார்கள்" என்று முகிலன் நீதிபதியிடம் தெரிவித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

முகிலனை போலீஸார் அழைத்துச் சென்றனர்.
முகிலனை போலீஸார் அழைத்துச் சென்றனர்.
நா.ராஜமுருகன்

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகிலன். கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகப் போராட்டம், கரூர் மாவட்டத்தில் மணல் பிரச்னை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை என்று சூழலியலைப் பாழாக்கும் சக்திகளுக்கு எதிராகத் தொடர் போராட்டம் நடத்தி வந்தார். இதற்காக, பலமுறை சிறைவாசமும் அனுபவித்தார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 16-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முக்கிய ஆவணங்களை வெளியிட இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், அதற்கு முதல்நாள் இரவே சென்னை ரயில்வே ஸ்டேஷனில் மர்மமான முறையில் காணாமல்போனார். இதுகுறித்து ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்து, சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 'ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முக்கிய ஆவணங்களை வெளியிடப்போய்தான் அவர் காணாமல் போயுள்ளார். அவர் காணாமல்போன விவகாரத்தில் அவர்களின் பங்களிப்பு இருக்கலாம்' என்றும், 'காவல்துறை அவரைக் கடத்தி இருக்கலாம்' என்கிற ரீதியிலும் பரபரப்பு புகார்கள் முன்வைக்கப்பட்டன.

இதற்கிடையில், அவரோடு போராட்டக் களங்களில் பயணித்த குளித்தலையில் வசிக்கும் இளம்பெண், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் முகிலனுக்கு எதிராகப் பதிவு போட்டு பரபரப்பை பற்ற வைத்தார். அதோடு அந்தப் பெண், குளித்தலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் முகிலன் மீது புகார் கொடுக்க, மூன்று பிரிவுகளின் கீழ் முகிலன் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில்தான், முகிலனின் நண்பர் சண்முகம் என்பவர் மூலமாகத் திருப்பதி ரயில்வே ஸ்டேஷனில் முகிலன் கைது செய்யப்பட்டு போலீஸார் அழைத்துச் செல்லப்பட்டதாக முகிலனின் மனைவி பூங்கொடிக்குத் தகவல் சொல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து, சென்னை சி.பி.சி.ஐ.டி போலீஸார், திருப்பதிக்கு விரைந்து, முகிலனை அழைத்து வந்தனர். "எல்லா உண்மைகளையும் நீதிபதியிடம்தான் சொல்வேன்' என்று முகிலன் தெரிவித்ததாகச் சொல்லப்பட்டது.

வேனில் கொண்டு செல்லப்பட்ட முகிலன்
வேனில் கொண்டு செல்லப்பட்ட முகிலன்

இந்நிலையில், "குளித்தலைப் பெண் கொடுத்த பாலியல் வழக்கில் 24 மணி நேரத்தில் முகிலனை கரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்" என்று நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, நேற்று மாலை 4 மணியளவில் கரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீஸார் முகிலனை வேன் மூலம் அழைத்து வந்தனர். போலீஸ் தரப்பில் இன்று காலை முகிலனை ஆஜர்படுத்த இருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், பகலில் ஆஜர்படுத்தினால், முகிலன் தரப்பு முக்கிய தலைவர்களை அழைத்து வந்த விவகாரத்தை பெரிதாக்குவார்கள் என்ற பயத்தால், இரவோடு இரவாக ஆஜர்படுத்தியதாகச் சொல்லப்பட்டது.

கரூர் ஜே.எம் - 2 நீதிபதி (பொறுப்பு) விஜய்கார்த்திக் முன்பு முகிலன் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி முகிலனை வரும் 24-ம் தேதி வரை திருச்சி மத்திய சிறையில் காவலில் வைக்க உத்தரவிட்டார். நீதிபதியிடம் முகிலன், "எனக்குப் பாதுகாப்பில்லை. மூன்று நாள்களாக எனக்கு சாப்பாடு வழங்கவில்லை. மனரீதியாக என்னை மேலும் மேலும் துன்பப்படுத்துகிறார்கள். என் உயிருக்கு ஆபத்து. சரியாக என்னை தூங்கவிடவில்லை. என் மனநிலை சரியில்லை. அதனால், நல்ல வைத்தியம் எடுத்த பிறகு, நான் எனது வாக்குமூலத்தை சொல்கிறேன்" என்று சொல்ல, அதற்கு நீதிபதி சம்மதித்தார். "திருச்சி மத்திய சிறையில் உள்ள உள்மருத்துவமனையிலேயே உங்களுக்கு சிகிச்சை தர உத்தரவிடுகிறேன்" என்றார். ஆனால், முகிலனோ, "வேண்டாம். அங்கே எந்த வசதியும் இருக்காது. அதனால், திருச்சி ஜி.ஹெச்சில் வைத்தியம் எடுக்க உதவ வேண்டும். அதோடு, எனக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதால், எனக்கு வைத்தியம் நடக்கும்போது என் மனைவி பூங்கொடியையும் தோழர்களையும் அனுமதிக்கணும்" என்று சொல்ல, அதற்கு சம்மதித்து உத்தரவிட்டார். ஆனால், முகிலனோ, "கடந்த மூன்று நாள்களாக நீதிபதி உத்தரவிட்ட எதையும் போலீஸார் எனக்கு நிறைவேத்தலை. நீங்க உத்தரவிட்ட உத்தரவுகளையும் திருச்சி சிறையில் எப்படி போலீஸார் செயல்படுத்துவார்கள்னு நம்ப முடியும்?" என்று கேட்டார்.

முகிலன் மனைவி பூங்கொடி
முகிலன் மனைவி பூங்கொடி

அதற்கு நீதிபதி, "எனது செல் நம்பரை வைத்துக்கொள்ளுங்கள். என் உத்தரவை செயல்படுத்தலைன்னா, உடனே போன் செய்யுங்கள்" என்று தெரிவித்தார். உடனே, போலீஸார் முகிலனை மீடியாவிடம் பேசவிடாமல் வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இருந்தாலும், "எனக்குப் பாதுகாப்பில்லை. என்னைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் மர்மமா இருக்கு. எனக்கு இந்த அரசால் ஏதேனும் ஆனால், நான் விதையாக மாறுவேன். ஆயிரம் முகிலன்கள் உருவாவார்கள்" என்று கோஷமிட்டபடி சென்றார். இதனிடையே, கரூர் சீத்தப்பட்டியில் பொதுக்கூட்டத்தில் பேசிய முகிலன் மீது பதியப்பட்ட தேசவிரோத வழக்கில், 'முகிலன் ஜாமீன் வாங்கிக்ப்கொள்ளலாம்' என்று நீதிபதி உத்தரவிட்டார். முகிலனின் மனைவி பூங்கொடியோ, "நல்லதுக்கு காலம் இல்லை. என் கணவரை சுற்றி ஆயிரம் வலைகள் பின்னப்படுது. அவர் நிரபராதி. மக்களுக்காக போராட்டம் நடத்தினால், இதுதான் கதியா" என்று கேள்வி எழுப்பினார்.