Published:Updated:

108 ஆம்புலன்ஸில் பிரசவம்; மருத்துவ உதவியாளருக்கு குவியும் பாராட்டு!

108 ஆம்புலன்ஸில் பிரசவம்
108 ஆம்புலன்ஸில் பிரசவம்

அபிநயாவுக்கு பிரசவ வலி அதிகமாகவே, வாகனத்தை ஓரமாக நிறுத்தி, 108 அவசர ஊர்தி மருத்துவ உதவியாளர் கோவிலன் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். அபிநயாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

பிரசவ வலியுடன் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறக்க, அந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளருக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.

கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரம்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே இருக்கிறது அந்தரப்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் அபிநயா. நிறைமாத கர்ப்பிணியான இவரை பிரசவத்துக்காக அருகில் உள்ள கள்ளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், அவரது உறவினர்கள் சேர்த்திருந்தனர். இந்நிலையில், அந்தப் பெண்ணுக்குத் திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால், அங்கிருந்த மருத்துவர்களின் அறிவுரையின் பெயரில் மேல் சிகிச்சைக்காக, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 அவசர ஊர்தி மூலம் அபிநயா அனுப்பிவைக்கப்பட்டார். அந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை பைலட் மணிவேல் இயக்கினார்.

அந்த 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளராக கோவிலன் என்பவர் சென்றார். இந்நிலையில், அபிநயாவுக்கு கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மணவாசி சுங்கசாவடி அருகே ஆம்புலன்ஸ் வந்தபோது பிரசவ வலி அதிகமாகவே, வாகனத்தை ஓரமாக நிறுத்தி, 108 அவசர ஊர்தி மருத்துவ உதவியாளர் கோவிலன் அப்பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தார்.

108 ஆம்புலன்ஸில் பிரசவம்
108 ஆம்புலன்ஸில் பிரசவம்
கரூர்: நடுவழியில் பெண்ணுக்கு பிரசவ வலி, பிரசவம் பார்த்த உதவியாளர்... ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை!

அந்த இடத்திலேயே, அவசர ஊர்தியில் அபிநயாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்தத் தகவல் அவரின் உறவினர்களுக்கும், மருத்துவர்களுக்கும் தெரிவிக்கப்பட, அனைவரும் மகிழ்ந்தனர். பின்னர், தாயையும் சேயையும் நலமுடன் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்த 108 அவசர ஊர்தி பைலட் மணிவேல் மற்றும் மருத்துவ உதவியாளர் கோவிலனுக்கு, கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பாராட்டு தெரிவித்தனர். அதோடு, அபிநயாவின் உறவினர்களும் மருத்துவ உதவியாளர் கோவிலனுக்கு நெகிழ்ச்சியோடு நன்றியும், பாராட்டுகளும் தெரிவித்துக்கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு