Published:Updated:

கரூர்: `இந்திய அளவில் இது புதிய முயற்சி!' - மேஜை வடிவமைப்பில் அசத்திய தொழிலதிபர்

அலங்காரப் பூச்செடி வைக்கும் மேஜையாக
அலங்காரப் பூச்செடி வைக்கும் மேஜையாக

வெளிநாட்டுக் கம்பெனிகள் பலவகைகளில் பயன்படுத்தத்தக்க டேபிள் மேட்டை தயாரித்து, தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்வதைப் பார்த்தேன்.

ஒரே டேபிளை எட்டுவிதமாகப் பயன்படுத்தும் வகையில் கரூர் மாவட்டதைச் சேர்ந்த ஒருவர், டைனிங் டேபிள் ஒன்றை புதிய தொழில்நுட்ப உதவியுடன் கண்டுபிடித்திருப்பது, மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

அலங்காரப் பூச்செடி வைக்கும் மேஜையாக...
அலங்காரப் பூச்செடி வைக்கும் மேஜையாக...

கரூர் மாவட்டம், டி.செல்லாண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர். இவர் அந்தப் பகுதியில் ஸ்ரீ சிவசக்தி இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

கரூர்: டிக்டாக், ஃபேஸ்புக்குக்கு மாற்றாகப் புதிய செயலிகள்! - 10 இளைஞர்களின் புதிய முயற்சி

இவர், ஸ்பேஸ் சேவிங் டெக்னாலஜி மூலம், 8 விதமாகப் பயன்படுத்தும் வகையிலான மல்டிபர்பஸ் மூவபுள் டைனிங் டேபிளைக் கண்டுப்பிடித்து அசத்தியிருக்கிறார். இரும்பு மற்றும் மரப்பலகையைக் கொண்டு, இந்த டேபிளை வடிவமைத்துள்ளார்.

சாப்பாட்டு மேஜையாக பயன்பாடு
சாப்பாட்டு மேஜையாக பயன்பாடு

இதை சாப்பாட்டு மேஜை, புத்தகம் படிக்கும் மேஜை, சமையல் செய்யப் பயன்படுத்தும் மேஜை, லேப்டாப்பை வைத்துப் பயன்படுத்தும் மேஜை, டீபாய், அலங்கார செயற்கை பூச்செடிகளை வைக்கும் மேஜை, சமையல் செய்யும் மேஜை, மசாஜ் செய்யப் பயன்படுத்தும் மேஜை என்று 8 வகையில் பயன்படுத்தலாம் என்கிறார் பன்னீர்.

'இந்திய அளவில் இதுபோன்று மேஜை வடிவமைக்கப்பட்டது இதுதான் முதல்முறை' என்றும் சொல்கிறார் பன்னீர்.

அவரிடம் பேசினோம்.

"1996-ம் ஆண்டு இந்தக் கம்பெனியை ஆரம்பித்தேன். பஸ்பாடி கட்டும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான உதிரிபாகங்கள் செய்து வந்தேன். கடந்த 7 வருடங்களுக்கு முன்பு, பஸ்பாடி கட்டும் தொழில் நலிவடைந்ததால், தொடர்ந்து என்னால் அந்தத் தொழிலை நடத்தமுடியவில்லை. அதனால், எல்.இ.டி வேலை செய்ய ஆரம்பித்தேன். 300 வகையான மாடல்களைச் செய்தேன். அதையும் தமிழகத்தில் அவ்வளவு தூரம் யாரும் செய்யவில்லை.

பன்னீர்
பன்னீர்

இந்த நிலையில், ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு பிரச்னை வந்தபோது, அந்தத் தொழிலும் பாதிச்சது. தொடர்ந்து அதையும் செய்யமுடியலை. ஆனாலும், நான் சோர்ந்து போகலை. 'யாரும் செய்யாத முயற்சியைச் செய்தால், எந்த பிரச்னை வந்தாலும் தொழிலை விடாமல் ரன் பண்ண முடியும்'னு நினைச்சேன். அப்போதான், வெளிநாட்டுக் கம்பெனிகள் பலவகைகளில் பயன்படுத்தத்தக்க டேபிள் மேட்டை தயாரித்து, தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்வதைப் பார்த்தேன்.

மாத்தி யோசி... தொழிலை மதி... சச்சின் சரித்திரம் கற்றுத்தரும் 7 பாடங்கள்! #VikatanOriginals

அந்தப் பாதிப்பில், அதுபோன்ற சாயலில்லாமல் புதுவிதமான டேபிளை நாம் செய்தால் என்னன்னு தோணுச்சு. அதுக்காக, ஸ்பேஸ் சேவிங் டெக்னாலஜி என்ற தொழில்நுட்பத்தை தெரிந்துகொண்டேன். அதை வைத்து, ஆறுமாதம் ஆய்வு செய்து, இந்த மல்டிபர்பஸ் மூவபுள் டைனிங் டேபுளை வடிவமைத்துள்ளேன். புதிதாக வீடு கட்டும்போது டைனிங் ஹால்னு தனியா கட்ட வேண்டியிருக்கிறது. அதிலும் பெரிய மேஜைகளைப் பரப்பி, இடத்தை அடைக்க வேண்டிய சூழல். ஆனால், நான் வடிவமைத்துள்ள இந்த டேபிளை விரித்து, டைனிங் டேபிளாகப் பயன்படுத்திக்கொண்டு, பிறகு அதை மடக்கி, ஒரு ஓரமாக குறைந்த இடத்தில் வைத்துவிடலாம்.

சேர்களை உள்ளே வைத்து...
சேர்களை உள்ளே வைத்து...

இந்த டைனிங் டேபிளுக்கு உள்ளேயே நான்கு சேர்களையும் வைத்து, மடக்கும் வகையில் அமைத்துள்ளேன். ஹோட்டலில் தனித்தனியா ரூம் எடுத்து தங்கும் நண்பர்கள், இந்த டைனிங் மேஜையைக் கொண்டு ஒரே ரூமில் சாப்பிட முடியும். பார்ட்டி நடத்தும் இடங்களில் இந்த டைனிங் டேபிளை கையாள்வது மிகவும் எளிது. அதேபோல், சுபநிகழ்ச்சிகளின்போது, கம்பெனி சார்ந்த மீட்டிங்கின்போது, இந்த டேபிளை உணவருந்தப் பயன்படுத்தலாம்.

இதை தூக்கிக்கொண்டும் செல்ல வேண்டியதில்லை. இந்த டேபிளின் கீழே நான்கு முனைகளிலும் சிறிய ரோலரை செட் செய்துள்ளோம். இதை இழுத்தபடியோ, தள்ளிக்கொண்டே தேவைபடும் இடத்துக்கு எளிதாகக் கொண்டு செல்ல முடியும். இப்போதுதான் இதை அறிமுகப்படுத்தினோம். அதற்குள் நிறைய ஆர்டர்கள் வருது. கொரோனா பிரச்னை முடிந்ததும், இதன் விற்பனையைத் தொடங்கிவிடுவோம். அதேபோல், எளிதாக மடக்கி வைக்கும் பொருட்டு, மடக்கு கட்டிலையும் வடிவமைத்துள்ளோம். அதை தூங்கும்போது விரித்து பயன்படுத்திவிட்டு, எளிதாக மடக்கி வீட்டின் ஓரத்தில் உள்ள சிறிய இடத்தில் வைத்துவிடலாம்.

பன்னீர்
பன்னீர்

டைனிங் டேபிளின் விலை 13,000 ரூபாய். மடக்கு கட்டிலை 7,000 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். கொரோனா ஊரடங்கினால், பல தொழில்கள் நலிவடைந்துவிட்டன. அதை நடத்துபவர்கள் முடங்கிவிடாமல், என்னைப்போல காலத்துக்கு ஏற்ப மாற்றுத் தொழிலை செய்தால், நிமிர்ந்து நிற்கலாம். இந்த டெக்னாலஜியில் அடுத்தடுத்து பல பொருள்களை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறேன்" என்றார் உற்சாகமான குரலில்.

அடுத்த கட்டுரைக்கு