Published:Updated:

கரூர்: `ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முன்வந்த டி.என்.பி.எல் நிறுவனம்!' - மருத்துவக் கல்லூரி டீன்

 பேட்டியளிக்கும் அசோகன்
பேட்டியளிக்கும் அசோகன்

கரூரில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் திரவ வடிவில் பிராணவாய்வு தயாரித்து, அதை உருளைகளில் நிரப்பி வழங்குவதற்கு முன்வந்துள்ளனர்.

கொரோனா பரவலின் இரண்டாவது அலையில், தமிழகம் தத்தளித்து வருகிறது. பல இடங்களில் ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுபாடுகளும், மருத்துவமனைகளில் பெட்கள் தட்டுபாடும் நிலவுகிறது. இதனால், நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறி வருகிறார்கள். இந்த நிலையில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனா பாதித்த நோயாளி ஒருவர் ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் இறந்ததாக, அவரது உறவினர்களால் குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி

"கரூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் கடந்த ஒரு வார காலமாக கொரோனா தொற்றால் 200 கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட போது, கொரோனா வைரஸ் தொற்று முதல் அலை அதிக அளவில் பரவத்துவங்கியது. அதற்காக, 300 படுக்கைகள் கொண்ட கொரோனா நோயாளி பிரிவு துவங்கி சிகிச்சை அளித்து வந்தோம். தற்பொழுது, இரண்டாம் அலை வட மாநிலங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. அங்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை மிகப்பெரிய சவாலான விஷயமாக அங்குள்ள மருத்துவமனைகளுக்கு உள்ளது. ஆனால், கரூரில் இதை எதிர்கொள்ளும் விதமாக 150 ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகள் உள்ளன. இதில், நாளொன்றுக்கு சுமார் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் தேக்க தொட்டி பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஸ்டாலின் பதவியேற்ற 5-வது நிமிடம்... செந்தில் பாலாஜி சொன்னது நடக்கக் கூடாது- பதறும் இயற்கை ஆர்வலர்கள்

இதில், நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 3,000 லிட்டர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் குறைபாடு ஏற்படுவதை கண்டறிய தனி குழு அமைக்கப்பட்டு பிராண வாய்வு வெளி மாவட்ட உற்பத்தி நிலையங்களிலிருந்து தேவைக்கேற்ப கொண்டு வரப்படுகிறது. மேலும், கரூரில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் திரவ வடிவில் பிராணவாய்வு தயாரித்து, அதை உருளைகளில் நிரைப்பி வழங்குவதற்கு முன்வந்துள்ளனர். கரூர் மருத்துவக்கல்லூரி கட்டுப்பாட்டில் உள்ள 130 பிராணவாயு படுக்கைகள் மட்டுமன்றி, கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் மேற்பார்வையில் குளித்தலை தலைமை அரசு மருத்துவமனை, வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனை, மண்மங்கலம் அரசு மருத்துவமனைகளில் சுமார் 400 பிராணவாயு படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஆக்சிஜன்
ஆக்சிஜன்

இதுதவிர, சி.சி.சி என்று சொல்லப்படுகிற கோவிட் - 19 சிறப்பு சிகிச்சை மையம் கரூர் தான்தோன்றிமலையில் உள்ள அரசு கலைக்கல்லூரி மற்றும் புலியூர் செட்டிநாடு அரசு கலைக்கல்லூரி போன்றவற்றில் சுமார் 1500 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தற்போது இரண்டாம் அலை தீவிரத்தை உணர்ந்து புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதனால், நோயின் தீவிரத் தன்மை குறையத் துவங்கும். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறையும். மிக விரைவில் வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்படும். சாதாரண காய்ச்சல் என்று பொதுமக்கள் நம்பி அவர்களாகவே மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால், நோயின் தீவிரம் பல மடங்க அதிகரித்துவிடுகிறது.

இதனால், இறப்பு எண்ணிக்கை அதிரிக்கிறது. காய்ச்சல் அறிகுறி துவங்கிய முதல் வாரத்தில் ஆரம்ப கட்ட சிகிச்சைகள் அளிக்கிறோம். மாறாக, மருத்துவமனைக்கு அறியாமையின் காரணமாக மக்கள் தாங்களாகவே சிகிச்சை எடுத்துக் கொள்ளும் பொழுது, 2 வது வாரத்தில் வைரஸ் அதிகரித்து மூச்சுத் திணறல், நுரையீரல் செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. தமிழகத்தில் சரியான சிகிச்சை முறையை தற்பொழுது அளித்து வருகிறோம். மக்கள் இதில், விழிப்புணர்வோடு இருந்து செயல்பட்டால் கரோனாவை விரட்டி அடிக்கலாம். அதேபோல், ரெம்டிசிவர் மருந்து முதல் வாரத்தில் அளிக்கக்கூடிய மருந்து. கரூர் மாவட்டத்தில் தேவையான அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வப்போது இருப்பு சரிபார்க்கப்பட்டு, தேவையான அளவு மருந்துகள் வாங்கப்படுகின்றன. ஆக்சிஜன் பொறுத்தவரையில் தட்டுபாடு இல்லை.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தயாரிப்பை துவக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா பரிசோதனை முடிவுகள் தாமதமாக வழங்கப்படுகிறதாக தவறான கருத்து உள்ளது. ஆனால், கடந்த ஆண்டு 500 பேர் வரை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்பொழுது, நாளொன்றுக்கு 1500 பேருக்கு பரிசோதனை மேற்கொள்கிறோம். மற்ற மருத்துவ கல்லூரிகளில் சோதனை முடிவுகள் வழங்கப்படுவதை காட்டிலும் மிக விரைவாக கரூரில் வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு