Published:Updated:

கரூர்: `முதலில் மருத்துவமனைக்கு ஆக்சிஜன்; அடுத்து ஏழை மக்களுக்கு உணவு!' - ஜோதிமணி எம்.பி

மருத்துவமனையில் ஜோதிமணி
மருத்துவமனையில் ஜோதிமணி ( நா.ராஜமுருகன் )

மொத்தம் 11 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அவசர சிகிச்சை மற்றும் ஐ.சி.யு பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு அவசர தேவைக்காக ஒப்படைத்தார்.

ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகளை கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி வழங்கினார். அடுத்த முயற்சியாக, ஊரடங்குக் காலத்தில் வேலை இழந்து நிற்கும் எளிய மக்களுக்கும், ஆதரவற்ற மக்களுக்கும் உணவுத் தேவையை நிவர்த்தி செய்யும் முயற்சியில் இறங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் ஜோதிமணி
மருத்துவமனையில் ஜோதிமணி
நா.ராஜமுருகன்

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் கடுமையாக உள்ளது. அதைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது. அதற்காக, தமிழக முதல்வர் ஸ்டாலின், மக்களிடம் முதல்வர் நிவாரண நிதிக்கு உதவி கோரியுள்ளார்.

இந்நிலையில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது கரூர் தொகுதியில் ஆக்சிஜன் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் மருத்துவ வசதிகளை மேற்கொள்வதற்காக, சமூக வலைதளங்கள் மூலமாக நிதி கோரினார். அதற்கென ஓர் இயக்கத்தைத் தொடங்கி நிதி திரட்டும் பணியில் கடந்த இரண்டு வார காலமாகக் கவனம் செலுத்தி வந்தார்.

மருத்துவ உதவி
மருத்துவ உதவி
நா.ராஜமுருகன்
`ஒரு உயிரைக்கூட இழக்கக் கூடாது!' - கரூருக்காக இணையத்தில் நிதி திரட்டும் ஜோதிமணி எம்.பி

அந்த வகையில், 198 பேர் வழங்கிய நன்கொடையில் கிடைத்த ரூ.10,20,000 தொகையைக் கொண்டு, ஒரே நேரத்தில் 20 கொரோனா நோயாளிகளுக்குப் பயன்படக்கூடிய 10 ஆக்சிஜன் செறிவூட்டிகளை, தனக்குத் தெரிந்த டெல்லியில் உள்ள நண்பர்கள் மூலம் வரவழைத்து, அவசர காலத்துக்குப் பயன்படும் வகையில், கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கியுள்ளார். மேலும், `மாற்றம்' தொண்டு நிறுவனம் மூலம் கூடுதலாக ஒரு ஆக்சிஜன் செறிவூட்டியைப் பெற்று, மொத்தம் 11 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அவசர சிகிச்சை மற்றும் ஐ.சி.யு பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு அவசர தேவைக்காக ஒப்படைத்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஜோதிமணி, ``சமூக வலைதளங்கள் மூலமாக, இக்கட்டான சூழ்நிலையில் தற்போது மிகப்பெரிய தேவையாக உள்ள ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் நிதி திரட்டப்பட்டது. இந்த இயக்கத்தின் மூலம் ரூ.10,20,000 நிதி திரட்டப்பட்டு, மருத்துவ உபகரணங்களை வாங்கி மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் ஒப்படைத்திருக்கிறோம். கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் விராலிமலை, இலுப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இதேபோன்று வழங்கப்பட்டுள்ளது.

 ஜோதிமணி
ஜோதிமணி
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், தினக்கூலிகளாக உள்ள ஏழை, எளிய மக்கள் உணவுக்காகத் தள்ளாட வேண்டிய நிலை ஏற்படும். எனவே, அடுத்தகட்ட முயற்சியாக அவர்களுக்கு உணவு வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு