Published:Updated:

`இன்னும் 10 நாளில் சாந்திக்கு பிரசவம்!' - முதல்வரிடம் உதவிகேட்டு கோரிக்கை வைத்த ஜோதிமணி எம்.பி

ஜோதிமணி எம்.பி
ஜோதிமணி எம்.பி

விராலிமலை மலைக்குடிப்பட்டியைச் சேர்ந்த சாந்தி, அரவக்குறிச்சி தென்னிலை பகுதியைச் சேர்ந்த சந்தியா இருவரும் கர்ப்பிணிப் பெண்கள். குறிப்பாக, சாந்திக்கு பிரசவத்திற்கு இன்னும் 10 நாள்களே உள்ளன.

`கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் வசிக்கும் தமிழர்களை, அவரவர் சொந்த ஊர்களுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் வெளிமாநிலங்களில் இருந்துகொண்டு அல்லாடுகிறார்கள்' என்று கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

முதல்வருக்கு ஜோதிமணி எழுதிய கடிதம்
முதல்வருக்கு ஜோதிமணி எழுதிய கடிதம்
நா.ராஜமுருகன்

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், இன்று உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் அதன் வீரியத்தைக் கட்டுப்படுத்த, வரும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் எல்லா மாவட்ட எல்லைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்க மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுகிறார்கள்.

`செந்தில் பாலாஜியின் தொகுதி நிதியைப் பயன்படுத்தாதது ஏன்?' - அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம்

இந்த நிலையில், பிழைப்புக்காக வெளிமாநிலங்களுக்கும், வெளிமாவட்டங்களுக்கும் சென்ற தமிழர்கள், அங்கே வேலை கிடைக்காமல், உண்ண உணவு கிடைக்காமல் அல்லாடி வருகிறார்கள். பலர் நடந்தே சொந்த ஊருக்குச் செல்லும் கொடுமையும் நடந்துவருகிறது.

முதல்வருக்கு ஜோதிமணி எழுதிய கடிதம்
முதல்வருக்கு ஜோதிமணி எழுதிய கடிதம்
நா.ராஜமுருகன்

இன்னும் பலர், சமூக வலைதளங்கள் மூலமாக, 'எங்களை தமிழகத்துக்கு அழைத்துப்போங்கள்' என்று கண்ணீரோடு, தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தும்வருகிறார்கள்.

இதுகுறித்து, கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

'தமிழக முதல்வருக்கு, வணக்கம். எனது கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நூற்றுக்கணக்கான சகோதர, சகோதரிகள் கேரளா, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளனர். இவர்கள், தொழில் நிமித்தமாக அந்த மாநிலங்களுக்குச் சென்றவர்கள். ஊரடங்கு தொடர்ச்சியாக நீடிக்கும் நிலையில், இவர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி குடும்பத்துடன் இருக்க தொடர்ந்து முயற்சி எடுத்துவருகிறார்கள். ஆனால், தமிழக எல்லைகள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதால், அதற்கான வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

உதாரணமாக, விராலிமலை மலைக்குடிப்பட்டியைச் சேர்ந்த சாந்தியும் அரவக்குறிச்சி தென்னிலை பகுதியைச் சேர்ந்த சந்தியாவும் கர்ப்பிணிப் பெண்கள். அவர்களின் குடும்பத்துப் பெரியவர்கள், தமிழகத்தில் உள்ளனர். குறிப்பாக, சாந்தியின் பிரசவத்துக்கு இன்னும் 10 நாள்களே உள்ளன. அவர்களின் குடும்பத்தினர், பெண்கள் துணை இல்லாமல் கணவருடன் கர்நாடகாவில் உள்ளனர்.

ஜோதிமணி
ஜோதிமணி

இதனால், குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர். கர்ப்பிணிப் பெண்கள் உடனடியாக ஊருக்கு வரவேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்களை உடனடியாக தமிழகம் அழைத்துவர வேண்டும்.

இதேபோல, ஆயிரக்கணக்கானவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலைக்குச் சென்று, தற்போது ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் சிக்கித்தவிக்கிறார்கள். இந்த நெருக்கடியான நேரத்தில் தனது மாநிலத்தில், தனது ஊரில், குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைப்பது மிகவும் நியாயமானதே. அவர்களை ஊரடங்கு முழுவதும் வெளிமாநிலங்களில் இருங்கள் என்று விட்டுவிட முடியாது.

அவர்கள் நம் மக்கள். அவர்களைப் பாதுக்காப்பாக அழைத்து வருவது தமிழக அரசின் பொறுப்பும், கடமையும் ஆகும். ஆகவே, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து சென்று, வெளிமாநிலங்களில் சிக்கித் தவிப்பவர்களை தமிழ்நாடு அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் பேசி, உடனடியாக வாகன வசதி செய்து அழைத்துவர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு