Election bannerElection banner
Published:Updated:

கரூர்: `பழ மரத்தால் கொரோனா பரவுது!' - கோழிக் கடைக்காரரை எச்சரித்த ஆணையர்

வெங்கடேஷை எச்சரிக்கும் ஸ்காட் தங்கவேல்
வெங்கடேஷை எச்சரிக்கும் ஸ்காட் தங்கவேல்

தனது வீட்டு முன்பு இருந்த பழமரத்துக்கு வரும் வௌவால்கள், பக்கத்து வீட்டுக்குச் சென்று, கொரோனாவை பரப்புகிறது என்று மரத்தை வெட்டியிருக்கிறார் கோழிக்கடை உரிமையாளர் ஒருவர்.

'எங்க வீட்டுக்கு முன்னாடி உள்ள பழ மரத்துக்கு வரும் வௌவாலால் கொரோனா வருதுனு பக்கத்து வீட்டுக்காரர் வெட்டச் சொன்னார். அதனால்தான், மரத்தை வெட்டினேன்' என்று கூறிய நபருக்கு, நகராட்சி ஆணையர் மூலமாக அபராதம் விதிக்க வைத்ததோடு, வெட்டப்பட இருந்த மற்றொரு மரத்தையும் காப்பாற்றி அசத்தியிருக்கிறார், சமூக ஆர்வலர் ஒருவர்.

வெட்டப்பட்ட பழமரம்
வெட்டப்பட்ட பழமரம்
நா.ராஜமுருகன்

கொரோனா இன்று உலகையே உலுக்கிக்கொண்டிருக்கிறது. அது, இந்திய மக்களையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. வேகமாகப் பரவும் கொரோனாவை முற்றாக ஒழிக்க ஏதுவாக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஆனால், சிலர் சமூக வலைதளங்களில், 'நாய், வௌவால், எலி போன்ற உயிர்களால் கொரோனா வருகிறது' என்றெல்லாம் வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.

வெட்டப்பட்ட பழமரம்
வெட்டப்பட்ட பழமரம்

அப்படி, தனது வீட்டு முன்பு இருந்த பழமரத்துக்கு வரும் வௌவால்கள், பக்கத்து வீட்டுக்குச் சென்று, கொரோனாவை பரப்புகிறது என்று மரத்தை வெட்டிய கோழிக்கடை உரிமையாளரை கண்டித்து, அவருக்கு கரூர் நகராட்சி ஆணையர் மூலமாக அபராதம் விதிக்க வைத்திருக்கிறார், சமூக ஆர்வலர் ஸ்காட் தங்கவேல் என்பவர்.

Vikatan

கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் ராமானூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர், அந்தப் பகுதியில் கோழி கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வீட்டின் முன்பு இரண்டு சிறிய பழ மரங்கள் இருந்தன. அதில் ஒன்றை வெங்கடேசன் வெட்டிச் சாய்த்துள்ளார். அதை அறிந்த, எவர்க்ரீன் பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் ஸ்காட் தங்கவேல், வெங்கடேசன் வீட்டுக்கு விரைந்தார். வெங்கடேசன் இரண்டாவது மரத்தையும் வெட்ட முயல, அவரை தடுத்த ஸ்காட் தங்கவேல், கடுமையாக எச்சரித்தார்.

வெட்டப்பட்ட பழமரம்
வெட்டப்பட்ட பழமரம்
நா.ராஜமுருகன்

அதோடு, கரூர் நகராட்சி ஆணையர் சுதாவுக்கு போன் செய்து, ஸ்பாட்டுக்கு வரவழைத்தார். ஆணையர் சுதா, வெங்கடேசனை கண்டித்ததோடு, வெங்கடேசனுக்கு ரூ. 500 அபராதமும் விதித்தார். அதோடு, 'இனிமேல் இப்படி மரத்தை வெட்டினால், கைது செய்யப்படுவீர்கள். 15 நாள்கள் சிறைத்தண்டனையும் அனுபவிக்க நேரிடும்' என்று எச்சரித்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்தார்.

வௌவால் சுமக்கும் தொற்றுகள், அதை பாதிக்காதது ஏன்? ஆச்சர்யம் தந்த ஆய்வுகள்!

ஸ்காட் தங்கவேலிடம் பேசினோம்.

"தமிழகத்தில் அதிகம் வெயில் அடிக்கும் மாவட்டமாகக் கரூர் மாறியிருக்கிறது. நல்ல சுற்றுச்சூழல் இருக்கணும்னா, ஒரு மாவட்டத்தில் குறைந்தப்பட்சம் 32 சதவிகிதம் காடுகள் இருக்க வேண்டும். ஆனால், கரூர் மாவட்டத்தில் வெறும் 4 சதவிகித காடுகளே உள்ளன. இதனால், இந்த மாவட்டத்தில் மழைப்பொழிவும் குறைவாக உள்ளது. இதனால், மரங்களை வளர்க்கவும், மரம் வெட்டப்படுவதைத் தடுக்கவும் நான் இந்த அமைப்பைத் தொடங்கி நடத்திட்டு வருகிறேன். அதன்காரணமாக, எவர்க்ரீன் பவுண்டேசன் அமைப்பு கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக கரூர் பகுதியைச் சுற்றியுள்ள சின்ன ஆண்டான்கோவில் ரோடு, வையாபுரி நகர், கோவை ஈரோடு, ஜவகர் பஜார், கரூர் மாவட்ட அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மரங்களை வெட்டப்படாமல் பாதுகாத்துள்ளது. இந்த நிலையில், கரூர் நகரப் பகுதியில் தனது வீட்டுக்கு முன்பு உள்ள நகராட்சிக்கு சொந்தமான இரண்டு மரங்களை வெங்கடேசன் வெட்ட முயன்றார். ஒரு மரத்தை வெட்டிச்சாய்த்தும்விட்டார்.

ஸ்காட் தங்கவேல்
ஸ்காட் தங்கவேல்

அதைக் கேள்விப்பட்டு அங்கு போன நான், அவரைக் கடுமையாக எச்சரித்தேன். இதனால், மற்றொரு மரத்தை வெட்டுவதை நிறுத்திய வெங்கடேசன், 'இந்தப் பழமரங்களுக்கு வௌவால்கள் வருவதாகவும், அந்த வௌவால்கள் தங்கள் வீட்டுக்கு வந்து, கொரோனாவை பரப்புகிறது என்று சொல்லி, அந்த மரங்களை பக்கத்து வீட்டுக்காரர் வெட்டச் சொன்னார், அதனால்தான் வெட்டினேன். நானாக வெட்டவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள்' என்று சொன்னார்.

அதனால், ஆணையர் மூலமாக அவருக்கு 500 அபராதம் மட்டும் விதிக்க வைத்து, எச்சரிக்கைசெய்து விட்டுவிட்டோம். பக்கத்து வீட்டுக்காரரையும் ஆணையர் எச்சரித்தார். கரப்பான்பூச்சிக்கு பயந்துகிட்டு வீட்டையே கொளுத்திய கதையாக, வௌவால் மூலமாகக் கொரோனா பரவும் என்று பயந்து மரங்களை வெட்ட நினைத்தது, கொடுமையான விஷயம். மக்களுக்கு உடனடியாகச் செய்ய வேண்டியது, கொரோனா குறித்த தெளிவை ஏற்படுத்தி, அவர்களின் அச்சத்தைப் போக்குவதுதான்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு