Published:Updated:

கரூர்: `117 வருட கட்டடத்தை இடிச்சுட்டாங்க!' - கமிஷனுக்காக செய்தாரா நகராட்சி கமிஷனர்?

இடிக்கப்பட்ட பள்ளிக் கட்டடம்
இடிக்கப்பட்ட பள்ளிக் கட்டடம் ( நா.ராஜமுருகன் )

இந்தப் பள்ளியில் படித்தவர்கள்தாம், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி நாகப்பன், நீரியல் விஞ்ஞானி வ.செ.குழந்தைசாமி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உள்ளிட்டோர்.

``கரூர் நகரத்தில் சொல்லிக்கொள்ளும்படி இருந்த 117 வருடம் பழைமையான பள்ளிக் கட்டடத்தை நகராட்சி ஆணையர், சுயலாபத்துக்காக நொடியில் இடித்து தரைமட்டமாக்க வைத்துவிட்டார். அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம்" என்றும் கொதிக்கிறார், நாம் தமிழர் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் நன்மாறன்.

இடிக்கப்பட்ட பள்ளி கட்டடம்
இடிக்கப்பட்ட பள்ளி கட்டடம்
நா.ராஜமுருகன்
கரூர்: ஒரு மழைக்கு ஒரே மாதத்தில் உடைந்த கரைகள்!' - தூர்வாரியதில் முறைகேடு

கரூர் நகரில் இயங்கி வருகிறது, நகராட்சி மேல்நிலைப் பள்ளி. 1884-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி, நூற்றாண்டைக் கடந்து, பாரம்பர்யச் சின்னமாக புகழில் விஞ்சி நிற்கிறது. இந்தப் பள்ளியில் படித்தவர்கள்தாம், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி நாகப்பன், நீரியல் விஞ்ஞானி வ.செ.குழந்தைசாமி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருக்கும் கந்தசாமி உள்ளிட்டோர்.

இடிக்கப்படுவதற்கு முன்பு...
இடிக்கப்படுவதற்கு முன்பு...
நா.ராஜமுருகன்

இந்தப் பள்ளி வளாகத்தில், 1903-ம் ஆண்டு கட்டப்பட்டு, எட்டு கிளாஸ் ரூம்களையும், இயற்பியல், வேதியியல் ஆய்வகங்களையும் கொண்டதாகச் செயல்பட்டு வந்த கட்டடத்தை, நகராட்சி இடித்துவிட்டதாக நாம் தமிழர் கட்சியினர் அதிரடியாகக் குற்றம்சாட்டுகிறார்கள்.

இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் நன்மாறன் நம்மிடம், "கரூர் மாவட்டத்தில் உள்ள அடையாளச் சின்னங்களில் ஒன்று, இந்தப் பள்ளி. நானும் இந்தப் பள்ளியில்தான் படித்தேன். இடிக்கப்பட்ட அந்தக் கட்டடத்தின் சுவர்கள் ஒவ்வொன்றும் மூன்று அடி அகலம் கொண்டது. சுண்ணாம்பு, முட்டை, கடுக்காய், வெல்லம், செங்கல் என்று பலமாகக் கட்டப்பட்ட கட்டடம் அது. அது பெரிதாக சிதிலமடையவில்லை. அதை ரூ. 3 லட்சம் வரை செலவழிச்சு, லேசாக புனரமைச்சாலே, இன்னும் ஒரு நூற்றாண்டு தாங்கி நிற்கும் தன்மைகொண்டது.

ஆனால், கரூரில் உள்ள ஒரு தனியார் வங்கியும், ஒரு சமூக அமைப்பு ஒன்றும் புதிதாகக் கட்டடம் கட்ட ரூ. 3 கோடி தர்றாங்க. அதுல வர்ற கமிஷனுக்கு ஆசைப்பட்டு, கரூர் நகராட்சி கமிஷனர் சுதா, அடையாளச் சின்னமாக விளங்கும் இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தில் புதுக்கட்டடத்தைக் கட்ட முயற்சி பண்ணினாங்க.

நன்மாறன்
நன்மாறன்
நா.ராஜமுருகன்

அதைக் கேள்விப்பட்ட நாங்க போய் தடுத்தோம். அதோட, புதுக்கட்டடம் கட்ட பள்ளி வாளத்திலேயே இருக்கும் காலி இடத்தைப் பயன்படுத்திக்கலாம். இல்லைன்னா, பள்ளி வளாகத்தில் உள்ள பயன்பாட்டில் இல்லாத வ.உ.சி ஹாஸ்டல், பல வருடங்களாக சிதிலமடைஞ்சு பூட்டிக்கிடக்கும் டயமண்ட் ஜூப்ளி ஹால் உள்ளிட்ட கட்டடங்களை இடித்துவிட்டு, அதில் ஏதாவது ஒரு இடத்தில் புது கட்டடத்தைக் கட்டலாமேனு சொன்னோம். ஆனால், அதைக் காதில் வாங்காம, இந்த 117 வருடம் பழைமையான கட்டடத்தையே இடிக்க நினைச்சாங்க.

அதனால், இதற்கு ஸ்டே வாங்க, கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு போட்டோம். கடந்த திங்கள் கிழமை 9-வது மனுவாக விசாரணைக்கு வர இருந்துச்சு. ஆனால், அதற்குள் முந்திக்கொண்ட நகராட்சி நிர்வாகத்தினர், சனிக்கிழமையே இந்தக் கட்டடத்தை இடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இதனால், கோர்ட், 'கட்டடத்தை இடிக்க உரிய அனுமதி வாங்கினீர்களா, தமிழ்நாடு ஹெரிடேஜ் பில்டிங் மெயின்டனன்ஸ் கமிட்டியிடம் அனுமதி வாங்கினீர்களா, கோர்ட் சொல்லி கரூரில் இடிக்கச் சொன்ன மற்ற கட்டடங்களை இப்படி இடித்திருக்கிறீர்களா, இந்தக் கட்டடத்தை மட்டும் அவசரம் அவசரமாக இடித்ததன் உள்நோக்கம் என்ன என்று பல கிடுக்கிப்பிடி கேள்விகளைக் கேட்டு, கரூர் நகராட்சி நிர்வாகத்தை, வரும் ஆகஸ்டு 6-ம் தேதிக்குள் பதில் அறிக்கை தாக்கல் செய்ய சொல்லியிருக்கிறது.

இடிக்கப்படுவதற்கு முன்பு...
இடிக்கப்படுவதற்கு முன்பு...
நா.ராஜமுருகன்

இடிக்கப்பட்ட கட்டடத்தைப் போய் பார்த்தோம். மிகவும் கஷ்டப்பட்டுதான் இடித்திருக்கிறார்கள். காரணம், அவ்வளவு பலமா இருந்திருக்கு. இதை நாங்க சும்மா விடப்போவதில்லை. கரூர்மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பாரம்பர்ய விஷயங்களாக காண்பிக்க வேண்டிய கட்டடத்தை இப்படி இடித்து தரைமட்டமாக்கியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கரூர் நகராட்சி கமிஷனர் மீது, இதுசம்பந்தமாக தனியாக வழக்கு தொடுக்க இருக்கிறோம்" என்றார்.

இதுகுறித்து, கரூர் நகராட்சி கமிஷனர் சுதாவிடம் பேசினோம். "பாரம்பர்யக் கட்டடம்தான். அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அது பலம்குறைந்துவிட்டது. அதைப் புனரமைச்சாலும், ஸ்ட்ராங்காக இருக்காது. பள்ளியின் பாரம்பர்ய சின்னத்தின் எச்சமாகப் பள்ளியில் மற்றொரு கட்டடம் உள்ளது. இடிக்கப்பட்டக் கட்டடத்தை உரிய அனுமதி வாங்கித்தான் இடித்தோம். தனியார் வங்கி புதிய கட்டடம் அமைக்க 3 கோடி வரை நிதி தர்றாங்க. அதை வீணாக்க முடியுமா? நாங்க கட்டடத்தை இடிக்க 6 மாதத்துக்கு முன்பே புரொபசல் பண்ணிட்டோம்.

சுதா (கரூர் நகராட்சி கமிஷனர்)
சுதா (கரூர் நகராட்சி கமிஷனர்)
நா.ராஜமுருகன்

ஆனா, அப்ப எல்லாம் சும்மா இருந்துவிட்டு, இப்போ கட்டடத்தை இடிக்க முற்படும் சமயத்தில் சிலர் கோர்ட்டுக்கு போயிருக்காங்க. நாங்க சட்டபடிதான் செயல்படுகிறோம். அதேபோல், நான் கமிஷனுக்காக இப்படி செய்றேன்னு சொல்றது அபத்தம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு