Published:Updated:

``பரதநாட்டியக் கலைஞர் ஜாகிர் உசேன் என்னிடம் அத்துமீறினார்!" - கரூர் இசைப்பள்ளி ஆசிரியை புகார்

ஜாகிர் உசேன்

பிரபல பரதநாட்டியக் கலைஞரான ஜாகிர் உசேன் மீது, கரூர் இசைப்பள்ளியில் பணியாற்றிவரும் ஆசிரியை ஒருவர், பாலியல்ரீதியாக அத்துமீறியதாகக் குற்றம்சாட்டி புகார் அனுப்பியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

``பரதநாட்டியக் கலைஞர் ஜாகிர் உசேன் என்னிடம் அத்துமீறினார்!" - கரூர் இசைப்பள்ளி ஆசிரியை புகார்

பிரபல பரதநாட்டியக் கலைஞரான ஜாகிர் உசேன் மீது, கரூர் இசைப்பள்ளியில் பணியாற்றிவரும் ஆசிரியை ஒருவர், பாலியல்ரீதியாக அத்துமீறியதாகக் குற்றம்சாட்டி புகார் அனுப்பியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
ஜாகிர் உசேன்

பிரபல பரதநாட்டியக் கலைஞரான ஜாகிர் உசேன், ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டியது அப்போது விவாதமானது. அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறையில் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞராக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில், அவர்மீது கரூர் மாவட்ட இசைப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், அதிரடியாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இந்தச் சம்பவம் குறித்து, அந்த ஆசிரியை, தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் காந்திக்குப் புகார்க் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், ``நான் ஒரு பாரம்பர்ய இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். கரூர் அரசு இசைப் பள்ளியில் பணிபுரிந்துவருகிறேன். கடந்த பிப்ரவரி மாதம், 28-ம் தேதி கலையியல் அறிவுரைஞர் ஜாகிர் உசேன், எங்கள் பள்ளிக்கு ஆய்வுக்கு வந்திருந்தார். அப்போது, தலைமை ஆசிரியர் என்னை மட்டும் உள்ளே வரச்சொல்லி, கதவை மூடினார். அங்கு, என் உடல்மீது கைவைத்து, 'இப்படி நடனமாட வேண்டும்' என்று சொல்லி, மிகவும் அநாகரிகமாக நடந்துகொண்டார். இந்த நிகழ்வு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. மேலும், ஏப்ரல் மாதம் மூன்று நாள் பயிலரங்கம் நடத்தப்போவதாகவும், அங்கு உங்களுக்கெல்லாம் வகுப்பும் எடுக்க வேண்டும் எனவும் கூறி ஆசிரியைகளைத் தரக்குறைவாகப் பேசினார். அதன் பிறகு, கதவைத் திறந்து வெளியேறிவிட்டேன்.

கரூர்
கரூர்

இந்தச் சம்பவம் மனதை வேதனைப்படுத்தியது. அதற்குப் பிறகு, நாம் உயிர்வாழ வேண்டுமா என்று எண்ணி, தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றியது. நடந்த விஷயங்களைக் கடிதத்தின் வாயிலாக என்ன கூற முடியுமோ அவற்றை மட்டும் தங்கள் கவனத்துக்குப் பணிந்து அனுப்பியுள்ளேன்' என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தச் சம்பவம் குறித்து, நாளை தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் காந்தி விசாரணை நடத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தச் சம்பவம் குறித்து பா.ஜ.க-வைச் சேர்ந்த வானதி சீனிவாசன் உள்ளிட்டவர்கள், கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வானதி சீனிவாசன் தனது ஃபேஸ்புக் பதிவில், 'பரதநாட்டியக் கலைஞர் ஜாகீர் உசேன் மீது கரூர் ஆசிரியையின் குற்றச்சாட்டு பற்றி உடனடி விசாரணை மற்றும் நடவடிக்கை தேவை. பாலியல்ரீதியான கொடுமைகளை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது' என்று முதல்வரை டேக் செய்து குறிப்பிட்டுள்ளார். இது குறித்து, ஜாகிர் உசேன் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism