Published:Updated:

`சாப்பாட்டுக்கே வழியில்லை; ஈழத் தமிழர்களைப் புறக்கணிக்கிறாங்க!’- கொதிக்கும் நாம் தமிழர் கட்சியினர்

அகதிகள் முகாமில் உதவிகள் வழங்கும் நாம் தமிழர் கட்சியினர்
அகதிகள் முகாமில் உதவிகள் வழங்கும் நாம் தமிழர் கட்சியினர் ( நா.ராஜமுருகன் )

'இருவரும் ஈழத்தமிழர்களுக்கு உதவவில்லை;அவர்களுக்கு வாக்குரிமை இல்லாததால், இருவரும் புறக்கணித்துவிட்டனர்' என்று நாம் தமிழர் கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்கள்.

"கரூரில் உள்ள 450 ஈழத்தமிழர்கள் குடும்பங்களில் உள்ள யாருக்கும் ஓட்டுரிமை இல்லை. அதனால், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், தி.மு.க அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியும் அவர்களுக்கு உதவவில்லை. தங்கள் கட்சியினரின் லிஸ்ட்டை வச்சுக்கிட்டு உதவிகிட்டு இருக்காங்க. வடமாநில ஆள்களுக்குக்கூட உதவுகிறார்கள். ஆனால், தொப்புள்கொடி உறவான ஈழத்தமிழர்களுக்கு அவர்கள் உதவாமல் தவிர்ப்பது, மனதுக்கு வேதனையாக இருக்கிறது" என்று குற்றம் சாட்டிப் பேசுகிறார், நாம் தமிழர் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் நன்மாறன்.

அகதிகள் முகாமில் உதவிகள் வழங்கும் நாம் தமிழர் கட்சியினர்
அகதிகள் முகாமில் உதவிகள் வழங்கும் நாம் தமிழர் கட்சியினர்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம் ராயனூரில் இருக்கிறது, இலங்கை அகதிகள் முகாம். இங்கு, சுமார் 450 ஈழத்தமிழர் குடும்பங்கள் உள்ளன. 1,200 பேர் வசித்துவருகிறார்கள். கூலி வேலைகளுக்குப் போய்வந்த அவர்களின் வாழ்வாதாரம், கொரோனாவையொட்டி அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளது.

`எங்களைத் தாக்குகிறார்கள்’ -எஸ்.பிக்கு சென்ற புகார்; கரூர் நிவாரண பணியில் மோதும் அ.தி.மு.க, தி.மு.க

இந்த நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது பெயரில் எம்.ஆர்.வி டிரஸ்ட் என்ற அறக்கட்டளையை ஆரம்பித்து, ஐந்தரைக் கோடி மதிப்பில் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு அரிசி, மளிகை சாமான்கள், காய்கறிகள் உள்ளிட்ட உதவிகளை வழங்கிவருகிறார்.

அகதிகள் முகாமில் உதவிகள் வழங்கும் நாம் தமிழர் கட்சியினர்
அகதிகள் முகாமில் உதவிகள் வழங்கும் நாம் தமிழர் கட்சியினர்
நா.ராஜமுருகன்

'போன் செய்தால் போதும், உதவிகள் தேடி வரும்' என்று அறிவித்திருக்கிறார். அதேபோல், அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, ஏழு கோடி மதிப்பீட்டில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் குடும்பங்களுக்கு அரிசி, மளிகை சாமான்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கிவருகிறார். அதோடு, தினமும் 5,000 பேர்களுக்கு சாப்பாடு வழங்கிவருகிறார். 'ஆனால், இருவரும் ஈழத்தமிழர்களுக்கு உதவவில்லை; அவர்களுக்கு வாக்குரிமை இல்லாததால், இருவரும் புறக்கணித்துவிட்டனர்' என்று நாம் தமிழர் கட்சியினர் அதிரடியாக குற்றம் சாட்டுகிறார்கள். ராயனூர் அகதிகள் முகாமில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு, தங்கள் கட்சி சார்பில் ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் நிவாரணப் பொருள்களை வழங்கியிருக்கிறார்கள்.

இந்த உதவிகளை மேற்பார்வையிட்டு செய்து முடித்த நாம் தமிழர் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர், வழக்கறிஞர் நன்மாறனிடம் பேசினோம்.

" 'இது அம்மாவின் அரசு, எல்லாருக்குமான அரசு'னு முதல்வர் பேசுறார். 'ஒன்றிணைவோம் வா'னு மு.க.ஸ்டாலின் தி.மு.க-வினரை மக்களுக்கு உதவிகள் செய்ய முடுக்கிவிடுகிறார். அவர்கள் வடமாநில மக்களுக்கு கூட உதவுகிறார்கள். ஆனால், வாக்குரிமை இல்லாத காரணத்தினால், ஈழத்தமிழர்களை அவர்கள் புறக்கணிக்கிறார்கள். அந்த மக்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் அல்லாடிவருகிறார்கள். கரூர் மாவட்டத்தில், ராயனூரில் வசிக்கும் மக்கள் சாப்பாட்டுக்கே சிரமப்படுகிறார்கள். போக்குவரத்துத் துறை அமைச்சரும், தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியும் அவர்களுக்கு உதவவில்லை. அ.தி.மு.க வாக்காளர் லிஸ்ட் வைத்துக்கொண்டு எம்.ஆர்.விஜயபாஸ்கரும், தி.மு.க வாக்காளர்கள் லிஸ்ட்டைக் கொண்டு செந்தில் பாலாஜியும் உதவிகள் வழங்கிவருகிறார்கள்.

நன்மாறன்
நன்மாறன்
நா.ராஜமுருகன்

ஆனால், நாங்கள் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பில் ராயனூர் அகதிகள் முகாமில் வசிக்கும் மக்களுக்கு உதவிகள் வழங்கினோம். அங்குள்ள மக்கள், அமைச்சர் தரப்புக்கும் தி.மு.க தரப்புக்கும் போன் பண்ணி உதவிகள் கேட்டிருக்காங்க. நேராகவும் போய் பார்த்து உதவிகள் கோரியிருக்காங்க. ஆனால், மழுப்பலா பதில் சொல்லி அவர்களை அனுப்பிட்டாங்களாம். அகதிகள் முகாமில் நாங்க உதவி செய்யப்போறோம்ங்கிறதை அறிவிச்சாலாவது, அதைப் பார்த்து அவர்கள் உதவி பண்ணுவாங்கனு ஒரு வாரத்துக்கு முன்னாடியே அகதிகளுக்கு நாங்க உதவி செய்யப் போறதைப் பத்தி அறிவிப்பு செய்தோம். ஆனால், அப்படியும் அவங்கள் அந்த மக்களுக்கு உதவலை. ஈழமக்களுக்காக அது பண்ணினோம், இது பண்ணினோம்னு திராவிடக் கட்சிகள் வெற்றுக்கூச்சல் போடுகின்றன. ஆனால், அந்த மக்களுக்கு சாப்பாடுகூட கொடுக்க திராவிடக் கட்சி பிரதிநிதிகளுக்கு மனசில்லை என்பதுதான் உண்மை" என்றார், வேதனையோடு.

இதுகுறித்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஐயபாஸ்கர் தரப்பில் பேசினோம். ``அந்த மக்களுக்கு கண்டிப்பாக உதவிகள் செய்வோம். அதற்கான வேலைகள் நடந்துகிட்டிருக்கு.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்
எம்.ஆர்.விஜயபாஸ்கர்
நா.ராஜமுருகன்

நாம் தமிழர் கட்சியினர் அதற்குள் இதை அரசியலாக்குகின்றனர்" என்றார்கள். தி.மு.க தரப்பிலும் இந்த பதிலையே சொல்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு