Published:Updated:

`தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் மட்டும் குடமுழுக்கு!'- திருமண விழாவில் முதல்வருக்குப் பறந்த கடிதங்கள்

முதல்வருக்கு கடிதம் அனுப்பிய திலீபன், தேன்மொழி
முதல்வருக்கு கடிதம் அனுப்பிய திலீபன், தேன்மொழி

மணமகன் திலீபனும் மணமகள் தேன்மொழியும் தமிழில் மட்டும் குடமுழுக்கு செய்ய வலியுறுத்தி, அஞ்சல் அட்டையின் மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை கடிதம் அனுப்பினர்.

'தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் மட்டும் நடத்த வேண்டும். சம்ஸ்கிருதத்திலும் நடத்த வேண்டும் என்பதை ரத்து பண்ண வேண்டும்' என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் திருமண மண்டபத்தில் இருந்த திருமண ஜோடி உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோர், அஞ்சல் அட்டையில் கோரிக்கை கடிதம் அனுப்பிய சம்பவம், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.

கோரிக்கை எழுதும் மக்கள்
கோரிக்கை எழுதும் மக்கள்

தஞ்சை நகரில் அமைந்திருக்கும் பிரகதீஸ்வரர் ஆலயம் என்கிற பெரிய கோயில், ராஜராஜ சோழனால் கட்டப்பட்டு 1,000 வருடங்களையும் கடந்து கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. இந்தியா மட்டுமல்ல, உலக அளவிலான சுற்றுலாப் பயணிகளையும் ஆச்சர்யப்பட வைத்துக்கொண்டிருக்கும் இந்தப் பெரிய கோயிலின் குடமுழுக்கு விழா வரும் 5-ம் தேதி கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோரிக்கை எழுதும் மக்கள்
கோரிக்கை எழுதும் மக்கள்

இந்தச் சூழலில், குடமுழுக்கு தேதி அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து, 'தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கைத் தமிழில் நடத்த வேண்டும். இல்லையென்றால், போராட்டம் வெடிக்கும்' என்று தமிழ் ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். ஆனால், ஆரம்பத்தில் தமிழக அரசு, அதற்கு செவிசாய்க்கவில்லை. இந்து சமய அறநிலையத்துறையும், 'சம்ஸ்கிருதத்தில் மட்டுமே குடமுழுக்கு நடைபெறும்' என்று உறுதியாகச் சொன்னார்கள். இந்தச் சூழலில்தான், தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த வலியுறுத்தி பெ.மணியரசன் தலைமையிலான தமிழ் ஆர்வலர்கள், தஞ்சையில் கடந்த மாதம் கோரிக்கை மாநாட்டை நடத்தினார்கள்.

Vikatan

அதோடு, இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்கள். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 'தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை சம்ஸ்கிருதம் மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் நடத்த வேண்டும்' என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவு தமிழ் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி தந்தாலும், முழு திருப்தியைத் தரவில்லை. 'தமிழ் மன்னன் கட்டிய பெரிய கோயிலின் குடமுழுக்கைத் தமிழ் மொழியில் மட்டுமே நடத்த வேண்டும்' என்று கோரிக்கை வைத்ததோடு, போராட்டங்களிலும் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

 கோரிக்கை எழுதப்பட்ட அஞ்சல் அட்டை
கோரிக்கை எழுதப்பட்ட அஞ்சல் அட்டை

அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில்தான், கரூரில் நடைபெற்ற திருமண நிகழ்வில் மணமகன் திலீபனும் மணமகள் தேன்மொழியும் தமிழில் மட்டும் குடமுழுக்கு செய்ய வலியுறுத்தி, அஞ்சல் அட்டையின் மூலம் தமிழகம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை கடிதம் அனுப்பினர். தொடர்ந்து, அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 400 பேரும் அஞ்சல் அட்டை மூலம், முதல்வருக்கு கோரிக்கை கடிதத்தை அனுப்பி அசத்தியிருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், ஆசிரியர் மிசா.ராமசாமி, சாமன்ய மக்கள் நலக் கட்சி சண்முகம், சமூக செயற்பாட்டாளர்கள் பொன்னரசு, பழனிசாமி, ரகுமான், சக்திவேல் ஆகியோருடன் இணைந்து கையொப்பமிட்டு, 'இதற்காகத் தொடர்ந்து செயல்படுவது' என மணமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதுகுறித்து, மணமகன் திலீபனிடம் பேசினோம்.

கோரிக்கை எழுதும் மக்கள்
கோரிக்கை எழுதும் மக்கள்

"எங்கள் ஊர் தமிழ் ஆர்வலர்கள் நிறைந்த ஊர். அதனால், எனக்கும் சிறுவயது முதல் தமிழ்மீது பற்று அதிகம் ஏற்பட்டது. தவிர, எங்கள் ஊரில் உள்ள மணிமுத்தீஸ்வரர் ஆலயத்தில் 2002-ம் வருடம் தமிழக அரசின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, சிவாச்சாரியார்கள், மட அதிபர்களை வைத்து, தமிழில் குடமுழுக்கு நடத்தி வரலாற்றைப் படைத்தோம். அதனால், உலக மக்களுக்கே வியப்பை ஏற்படுத்திகிற தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கையும் தமிழில் நடத்த வேண்டும் என்று எங்கள் ஊர் மக்கள் கோரிக்கை வைக்க நினைத்தார்கள். தங்கள் கோரிக்கையை எங்கே, எப்படி, யாருக்கு அனுப்புவது என்பதில் அவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில், எனக்கும், தேன்மொழிக்கும் எங்கள் ஊர் தமிழ் திருமண மன்றத்துல திருமணம் நடந்துச்சு. அதனால், இந்த நிகழ்வையே கோரிக்கை வைக்கும் களமாக மாற்றி, நான், தேன்மொழி உட்பட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் அஞ்சல் அட்டை மூலமாக முதல்வருக்கு கோரிக்கை வைத்தோம். 5-ம் தேதிதான் குடமுழுக்கு. முதல்வர் நினைத்தால், கடைசி நிமிடத்தில்கூட தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று உத்தரவிடலாம். அதனால், எங்க கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

பின் செல்ல