Published:Updated:

``ஆழ்துளைக் கிணறுகள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.1,111 பரிசு'' - களமிறங்கியது குளித்தலை அமைப்பு

திருச்சி விவகாரம்
News
திருச்சி விவகாரம் ( நா.ராஜமுருகன் )

'ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் இருப்பதை போட்டோ ஆதாரத்துடன் பகிர்ந்தால், அவர்களுக்கு ரூபாய் 1,111 பரிசு வழங்குவதோடு, அவர்களுக்கு 'சமூகத்தின் பாதுகாவலன்' என்ற விருதையும் வழங்கி கௌரவிப்போம்'

திருச்சி மாவட்டம், நடுக்காட்டுப்பட்டியில் 300 அடி ஆழ்குழாய்க்கிணற்றில் தவறி விழுந்த சுர்ஜித் வில்சனை மீட்க, ரிக் இயந்திரம் மூலம் ஆழ்துளை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், கரூர் மாவட்டம், குளித்தலையைச் சேர்ந்த விருட்சம் இந்தியா அறக்கட்டளை என்ற அமைப்பு, 'ஆழ்குழாய்க் கிணறுகள் மூடப்படாமல் இருப்பதை போட்டோ ஆதாரத்துடன் பகிர்ந்தால், அவர்களுக்கு ரூபாய் 1,111 பரிசு வழங்குவதோடு, அவர்களுக்கு 'சமூகத்தின் பாதுகாவலன்' என்ற விருதையும் வழங்கி கௌரவிப்போம்" என்று அறிவித்திருப்பது, பலத்த பாராட்டை பெற்றுவருகிறது.

விருட்சம் இந்தியா அறக்கட்டளை செயல்பாடு
விருட்சம் இந்தியா அறக்கட்டளை செயல்பாடு
நா.ராஜமுருகன்

சிறுவன் சுர்ஜித் வில்சன் 300 அடி ஆழ்குழாய்க் கிணற்றில் விழுந்து இன்றோடு நான்கு நாள்கள் ஆகின்றன. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் அதிகாரிகள், சிறுவனை மீட்கும் மீட்புப்பணியை முடுக்கிவிட்டிருக்கிறார்கள். தமிழகம் முழுக்க மட்டுமன்றி, இந்த சோக சம்பவத்தைக் கேள்விப்பட்ட மற்ற மாநில மக்களும், 'சிறுவனை பத்திரமாக மீட்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். பலரும் சிறுவன், பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்துவருகிறார்கள். துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ், 'இதுபோல் காலியாக இருக்கும் ஆழ்குழாய் கிணறுகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அறிவித்துள்ளார்.

விருட்சம் இந்தியா அறக்கட்டளை செயல்பாடு
விருட்சம் இந்தியா அறக்கட்டளை செயல்பாடு
நா.ராஜமுருகன்

இந்நிலையில், கரூர் மாவட்டம், குளித்தலையில் இயங்கி வரும், 'விருட்சம் இந்தியா அறக்கட்டளை' என்ற தனியார் அமைப்பு, 'மூடப்படாமல் உள்ள ஆழ்குழாய்க் கிணறுகள் பற்றிய தகவல்களைத் தகுந்த போட்டோ ஆதாரத்துடன் எங்களுக்கு தகவல் கொடுத்தால், உடனே சம்பந்தப்பட்டவர்களுக்கு 1,111 ரூபாய் பரிசு வழங்கப்படும். அதோடு, அவர்களை எங்க அமைப்பு சார்பில் பாராட்டி, சான்றிதழ், சீல்டு வழங்குவதோடு, அவர்களுக்கு எங்கள் அமைப்பு சார்பில், 'சமூகத்தின் பாதுகாவலன்' என்ற விருதையும் வழங்குவோம்' என்று அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு, கரூர் மாவட்ட சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுபற்றி, 'விருட்சம் இந்தியா அறக்கட்டளை'யின் நிறுவனத் தலைவர் ராஜமாணிக்கத்திடம் பேசினோம். "நாங்க இந்த அமைப்பை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் ஆரம்பிச்சோம். இதன்மூலமாக, மரக்கன்றுகள் நடுவது, நெகிழி ஒழிப்பது பற்றி கல்லூரி மாணவர்களைக் கொண்டு விழிப்புணர்வு பேரணி நடத்துவது என்று செயல்பட்டுக்கிட்டு வந்தோம். அதோடு, தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக 250 மக்களுக்கு சந்தன மரக்கன்றுகள் கொடுத்தோம். ஆயிரக்கணக்கான பனைவிதைகளையும் விதைத்துள்ளோம். இந்நிலையில்தான், கடந்த 25-ம் தேதி திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் சுர்ஜித் வில்சன் விழுந்த தகவல் கேட்டு அதிர்ச்சியானோம். அவனை மீட்க தமிழக அரசும் அதிகாரிகளும் கடுமையா போராடிக்கிட்டு இருக்காங்க.

ராஜமாணிக்கம்
ராஜமாணிக்கம்
நா.ராஜமுருகன்

அந்த ஆழ்குழாய்க் கிணற்றை மூடாமல் வைத்திருந்ததுதான், சுர்ஜித் உள்ளே விழ காரணமாயிட்டு. ஒவ்வொருமுறையும் இதுபோல் ஆழ்குழாய்க் கிணறுகளில் குழந்தைகள் விழும்போதும், அதைப்பற்றி பதைபதைப்பாகப் பேசிவிட்டு அப்புறம் மறந்துர்றோம். அதுக்குக் காரணமான, நமது அலட்சியத்தை அப்படியே தொடர்வதுதான் வேதனை. அதனால், 'கடைசி சம்பவமாக சுர்ஜித் சம்பவமே இருக்கட்டும்'னு நினைச்சு, இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம்.

இதன்மூலம், தமிழகத்தில் எங்கு ஆழ்குழாய்க் கிணறுகள் பயன்படுத்தபடாமல், மூடப்படாமல் இருந்தால், அதைப் பற்றி உடனே எங்க அமைப்புக்குத் தகவல் கொடுக்கலாம். தகுந்த போட்டோ ஆதாரத்துடன் அதுபற்றிய தகவலை அனுப்ப வேண்டும். எங்க அமைப்பு உடனே ஸ்பாட்டுக்குப் போய் பார்த்து ஆய்வு செய்யும். அப்படி ஆழ்குழாய்க் கிணறு மூடப்படாமல் இருந்தால், அந்தத் தகவலை கொடுத்தவருக்கு அந்த ஸ்பாட்டிலேயே ரூபாய் 1,111 வழங்கப்படும்.

விருட்சம் இந்தியா அறக்கட்டளை செயல்பாடு
விருட்சம் இந்தியா அறக்கட்டளை செயல்பாடு
நா.ராஜமுருகன்

தவிர, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம், அப்போதே அந்த ஆழ்குழாய் கிணற்றை மூட நடவடிக்கை எடுக்கப்படும். எங்க அமைப்பு மூலம் நடத்தப்படும் நிகழ்ச்சியில் வைத்து, தகவல் கொடுத்தவருக்கு பாராட்டுச் சான்றிதழ், சீல்டு கொடுப்பதோடு, 'சமூகத்தின் பாதுகாவலன்' என்ற விருதையும் கொடுத்து, கௌரவிப்போம். வரும் முன் காப்போம்ங்கிற அடிப்படையில் இந்த முயற்சியை இன்றுமுதல் தொடங்கியுள்ளோம். இதன்மூலம், மக்களிடம் போதிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த முடியும்னு நம்புகிறோம்" என்றார்.