Published:Updated:

`முதல்வருக்கு ஒரு நியாயம், மக்களுக்கு ஒரு நியாயமா?' - கரூர் நகராட்சியால் கொதித்த மக்கள்

குப்பை வாகனத்தை மறித்த மக்கள்
குப்பை வாகனத்தை மறித்த மக்கள்

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், `ஐந்து நிமிடம் சாலையைக் கடக்கும் முதலமைச்சருக்கு, 15 நாள்களாக சாலைகளைச் சுத்தம் செய்த நகராட்சி நிர்வாகம், இப்போது ஏன் மக்கள் சுகாதாரம் குறித்து அக்கறை கொள்ளவில்லை?' எனக் கேள்வி எழுப்பினர்.

கரூர் மாவட்டம், வாங்கப்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலைக்கு செல்லும் வழியிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் கரூர் நகராட்சி நிர்வாகம் முறையாக குப்பைகளை அகற்றாததால் துர்நாற்றம் வீசுவதாகக் கூறி, அப்பகுதி மக்கள் கரூர் நகராட்சிக்கு எதிராக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுதாவிடம் வாக்குவாதம் செய்யும் மக்கள்
சுதாவிடம் வாக்குவாதம் செய்யும் மக்கள்
கரூர்: `இடித்த கோயிலைக் கட்டித் தரலை!' - சுங்கச்சாவடி நிர்வாகத்துக்கு எதிராகப் போராடும் மக்கள்

கரூர் நகராட்சியையொட்டி இருக்கிறது வாங்கப்பாளையம். கரூர் நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதாரத்துறை மேற்பார்வையாளர்கள் முறையாக குப்பைகளை அள்ளுவதற்கு வழக்கமான நடைமுறையை மேற்கொள்ளாமல், ஊழியர்களுக்கு தினம் ஒரு பகுதியாகக் குப்பை அள்ள பணி வழங்குவதால், தங்கள் பகுதியில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசும் அவலம் ஏற்பட்டிருப்பதாக அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்திவந்தனர்.

நகராட்சி நிர்வாகத்துக்கு இது குறித்து தொடர்ந்து புகார் மனுக்களை அனுப்பிவந்தனர். ஆனால், நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்காமல், தங்கள் பகுதியை மோசமாக மாற்றிவிட்டதாக புகார் தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதி வழியாக வந்த நகராட்சிக் குப்பை அள்ளும் வாகனத்தையும் பொதுமக்கள் சிறைப் பிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். வாங்கப்பாளையம் மக்கள் மட்டுமன்றி, காதப்பாறை ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்களும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நகராட்சி ஆணையர் சுதா
நகராட்சி ஆணையர் சுதா

இதனால், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த கரூர் நகராட்சி ஆணையர் சுதா வருகை புரிந்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தபோது, பொதுமக்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில், `ஐந்து நிமிடம் சாலையைக் கடக்கும் முதலமைச்சருக்கு, 15 நாள்களாக சாலைகளைச் சுத்தம் செய்த நகராட்சி நிர்வாகம், இப்போது ஏன் மக்கள் சுகாதாரம் குறித்து அக்கறை கொள்ளவில்லை?' எனக் கேள்வி எழுப்பியதால், பதில் சொல்ல முடியாத ஆணையர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். தொடர்ந்து, நகராட்சித் தரப்பில், தங்கள் பகுதியிலுள்ள குப்பையை அள்ள உத்தரவாதம் கொடுத்ததால், குப்பை வாகனத்தை மறித்த மக்கள், வாகனத்தைப் போக அனுமதித்தனர். போராட்டத்தையும் கைவிட்டனர்.

இது குறித்து, முன்னாள் கரூர் நகர்மன்றத் தலைவர் கவிதா கணேசன், ``நகராட்சியின் அலட்சியமே, இந்தப் பிரச்னைக்குக் காரணம். குப்பைகளை அள்ளாமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியப்போக்காக நடந்துகொள்கிறது. பலமுறை மக்கள் கோரிக்கை வைத்தும், ஆணையர் குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான், இன்று மக்கள் சாலைமறியல், குப்பை வாகனத்தை சிறைப்பிடித்தல் என்று போராட்டம் நடத்தினாங்க.

சுதாவிடம் வாக்குவாதம் செய்யும் மக்கள்
சுதாவிடம் வாக்குவாதம் செய்யும் மக்கள்

முதல்வருக்காக 15 நாள்களாக இந்தச் சாலைப் பகுதியைச் சுத்தம் செய்த நகராட்சி நிர்வாகம், இப்போது மக்களுக்காக ஒரு தடவைகூட குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், முதல்வருக்கு ஒரு நியாயம், மக்களுக்கு ஒரு நியாயமா?" என்று கேள்வி எழுப்பினார்.

அடுத்த கட்டுரைக்கு