கரூர்: `உன் குறையைப் பாக்கறதுதான் என் வேலையா?' - வி.ஏ.ஓ-வால் கலங்கும் மாற்றுத்திறனாளி

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது. அதற்காக, தனக்கு மாற்று மாற்றுத்திறனாளி அட்டை வழங்கும்படி, கடவூர் தாசில்தாரிடம் மனுக்கொடுத்துள்ளார்.
மாற்றுத்திறனாளி பெரியவர் ஒருவர், அரசு வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய உதவித்தொகையைப் பெற முயன்றிருக்கிறார். அந்தப் பெரியவரிடம், வி.ஏ.ஓ ஒருவர் நடந்துகொண்ட விவகாரம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் உள்ள தெற்கு அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் மனைவி எட்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்குப் பிறந்த நான்கு பிள்ளைகளும், கடந்த 10 வருடங்களுக்கே முன்பே இறந்துவிட்டார்கள். இதனால், ஓட்டைக் குடிசையில் தனியாக வாழ்ந்துவருகிறார் மாரியப்பன்.
70 வயது நிரம்பிய மாரியப்பன், ஒரு மாற்றுத்திறனாளி. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அப்போதைய கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ், மாரியப்பனுக்கு நேரடியாக மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்கியதோடு, தெற்கு அய்யம்பாளையத்தில் பெட்டிக்கடை ஒன்றும் அமைத்து தந்துள்ளார். ஒருகட்டத்தில் அதையும் அவரால், நடத்தமுடியவில்லை. அதோடு, மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டையையும் மாரியப்பன் தொலைத்துவிட்டார்.

'மாற்று அட்டை வழங்கும்படி' கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு, கடந்த இரண்டு வருடங்களாக நடையாய் நடந்திருக்கிறார். இவரது ரேஷன் கார்டையும், முறைகேடாக வேறு குடும்ப கார்டாக மாற்றி, மாரியப்பனுக்கு ரேஷன் கார்டு இல்லாமல் செய்துவிட்டார்கள். ஏற்கெனவே, மாரியப்பனின் இந்த நிலை குறித்து, விகடன் இணையதளத்தில் கட்டுரை எழுதி, அவருக்கு ரேஷன் கார்டு கிடைக்க வழிசெய்தோம். இந்தச் சூழலில், தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது. அதற்காக, தனக்கு மாற்று மாற்றுத்திறனாளி அட்டை வழங்கும்படி, கடவூர் தாசில்தாரிடம் மனுக்கொடுத்துள்ளார். இந்த நிலையில்தான், கடவூர் மேல்பகுதி வி.ஏ.ஓ கார்த்திகேயன், மாரியப்பனை அவமானப்படுத்தி பேசி, மனஉளைச்சலை ஏற்படுத்திவிட்டதாகச் சொல்கிறார்கள்.
மாரியப்பனிடமே பேசினோம்.
"மாற்றுத்திறனாளி அடையாள அட்டை இருந்தால்தான் 1,000 ரூபா உதவித்தொகை கொடுப்பாங்கனு சொன்னாங்க. அதனால், நான் எனக்கு இருந்த மாற்றுத்திறனாளி அட்டையைத் தொலைத்துவிட்டதால், மாற்று அட்டை கேட்டு, தொடர்ந்து முயற்சி செய்தேன். என் ரேஷன் கார்டையும் முறைகேடு பண்ணியதால், என்னால் ரேஷன் பொருளைக்கூட வாங்கமுடியவில்லை. பலநாள்கள் வெறும் முருங்கைகீரையை சுண்டித் தின்னுட்டு, காலத்தை ஓட்டிட்டு வந்தேன்.
விகடன் செய்தியால, எனக்கு புதுரேஷன் கார்டு கிடைக்க இப்போ ஏற்பாடாகியிருக்கு. ஆனால், எனக்கு அடிக்கடி உடம்புக்கு முடியாம போகுது. அதனால், வைத்தியச் செலவுக்கு, அரசு தர்ற அந்த மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை 1,000 கிடைச்சுச்சுன்னா, தேவலாம்னு வி.ஏ.ஓ கிட்ட கேட்டேன். 'அட்டை இல்லாம தரமுடியாது'னு அனுப்பிட்டார். அதனால், கடவூர் தாசில்தார்கிட்ட போய் என் நிலைமையை மனுவா கொடுத்து, மாற்று அடையாள அட்டை கிடைக்க வழிவகை செய்யும்படி கேட்டேன். அதன்பிறகு, என்ன நடந்ததோ, கார்த்திகேயன் கோபமாக என் வீட்டுக்கு வந்தார்.

'நீயெல்லாம் மனுஷனா? நீ ஊனமுற்ற ஆள்னு வெறும் வாய்ல சொல்லி, நான் பணம் கொடுக்க முடியுமா? அதுக்கு அரசு தர்ற அடையாள அட்டை வேணும். நீ ஊனமுற்ற ஆள்னு எப்படி நம்புறது? அடையாள அட்டையை தொலைச்சுட்டே. நான் உனக்கு பணம் தரமுடியாது. நீ ஊனமான ஆளானு உன்வீடு தேடி வந்து பார்க்கிறதுதான் எனக்கு வேலையா'னு இன்னும் மோசமான வார்த்தைகளால் என்னைப் பேசி, என் மனசை ரணப்படுத்தினார்.
எனக்கு உதவியா யாருமில்லனு நெனச்சுதான், ரேஷன் கார்டு விசயத்துல என்னை ஏமாத்தினாங்க. தொலைஞ்சுபோன மாற்றுத்திறனாளி அடையாள அட்டைக்கு மாத்து அட்டை கேட்டு இரண்டு வருஷமா முயற்சி பண்ணியும், அதை எந்த அதிகாரியும் இரக்கப்பட்டு தரலை. இப்போ, வி.ஏ.ஓ என்னை மோசமா பேசுறார். இந்தக் கேவலமான பொழப்புக்கு, பேசாம நாண்டுக்கிட்டு செத்துரலாமானு தோணுது தம்பி" என்றார் வேதனையுடன்.
இதுகுறித்து, கடவூர் மேல்பகுதி வி.ஏ.ஓ கார்த்திகேயனிடம் பேசினோம்.
"யார்கிட்ட மாரியப்பன் போனா என்னங்க... மாற்றுத்திறனாளி அடையாள அட்டை இருந்தா, நான் உடனே பணம் தருவேன்.

அவரை அடையாள அட்டையோடு வரச்சொல்லுங்கள். உடனே பணம் தருகிறேன். மத்தபடி, அவரை கேவலமாக எல்லாம் பேசலை" என்றதோடு முடித்துக்கொண்டார்.