கரூர்: இருசக்கர வாகனத்தில் நெளிந்த பாம்பு! - பீதியில் உறைந்த வாகன உரிமையாளர்

சொந்த வேலையாக கரூர் நகர பகுதியில் உள்ள கடைவீதி காமராஜர் சிலை முன்பு வந்தபோது, அவரது வாகனத்தில் ஏதோ ஊர்வது போல உணர்ந்திருக்கிறார். இதனால், தனது வாகனத்தை நிறுத்தி பார்த்தபோது, தனது வாகனத்தில் பாம்பு ஒன்று ஊர்வதைக் கண்டு அதிர்ந்து போனார்
கரூர் கடைவீதியில் தனது வாகனத்தில் வந்தபோது, வாகனத்தில் பாம்பு நெளிந்ததைக் கண்டு வாகன ஓட்டுநர் பீதியில் உறைந்த சம்பவம், பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

கரூர் மாவட்டம், பள்ளப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாயகம். இவரின் மகன் கிங் (வயது 36).
இவர் தனது இருசக்கர வாகனத்தில் இன்று சொந்த வேலையாக கரூர் நகர பகுதியில் உள்ள கடைவீதி காமராஜர் சிலை முன்பு வந்தபோது, அவரது வாகனத்தில் ஏதோ ஊர்வது போல உணர்ந்திருக்கிறார்.

இதனால், தனது வாகனத்தை நிறுத்தி பார்த்தபோது, தனது வாகனத்தில் பாம்பு ஒன்று ஊர்வதைக் கண்டு அதிர்ந்து போனார். இதனால், பதறிய கிங் தனது இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தார்.
அதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படை வீரர்கள், கிங்குக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை ஆராய்ந்தனர். இறுதியில், கிங்கின் இருசக்கர வாகனத்தில் இருந்த கொம்பேறிமூக்கன் என்ற பாம்பை லாவகமாகப் பிடித்து, சாக்கில் போட்டு, அதை வனத்துறைக்கு கொண்டு சென்றனர். இளைஞர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் பாம்பு இருந்ததைக் கேள்விப்பட்ட பொதுமக்கள், அங்கே குழுமினர்.

வாகனத்தில் இருந்த பாம்பை தீயணைப்புத்துறை வீரர்கள் பிடித்தபிறகே, கிங் மற்றும் பொதுமக்கள் பெருமூச்சுவிட்டனர். கரூர் நகரத்தின் முக்கிய கடை வீதியில் பாம்பு ஒன்று இருசக்கர வாகனத்தில் பிடிக்கப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது