Published:Updated:

`இந்தத் தெம்பு, இந்த நிறைவு போதும் சார்!' -முதல்முறையாக பிறந்தநாள் கொண்டாடிய கரூர் லோகநாதன்

மரக்கன்றைத் தொட்டுக் கொடுக்கும் லோகநாதன்
மரக்கன்றைத் தொட்டுக் கொடுக்கும் லோகநாதன்

'சொந்தமா பத்தடி தூரம் நகர முடியாத எனக்கு, சொந்தமா வீடு கட்டி, அதுல வாழணும்'ங்கிற ஆசை வந்ததெல்லாம் வீண் ஆசைன்னே தோணுச்சு. ஆனா, எனக்கு புது வீடு கட்டித் தரவும் முயற்சி எடுத்திருக்காங்க.

``நான் பிறந்ததில் இருந்து இப்போதுதான் முதல்முறையா பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறேன். இதெல்லாம் நடக்கும்ன்னு கனவுலகூட நினைச்சுப்பார்க்கலை" என நெகிழ்கிறார் லோகநாதன்.

லோகநாதன்
லோகநாதன்

தன்னம்பிக்கை மனிதர் லோகநாதன்:

லோகநாதன், கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்தில் உள்ள வீரமாபாளையத்தைச் சேர்ந்தவர். திடகாத்திர உடம்போடு இருந்த இவர், திருச்சியில் வசித்தபோது, பக்கத்து வீட்டு மனிதருக்கு உதவப் போய், மின்சாரம் தாக்கி விபத்துக்குள்ளானார்.

`உறவுகள் உதாசீனப்படுத்துறதுதான் வாழணுங்கிற ஆசையைத் தூண்டுது’ - தன்னம்பிக்கை மனிதர் லோகநாதன்!

இடுப்புக்குக்கீழ் உடல் உறுப்புகள் செயலிழந்து போக, கடந்த எட்டு வருடங்களாக படுத்த படுக்கையாக இருக்கிறார். சொந்த அண்ணனும் கண்டுகொள்ளாமல் போக, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சில நல்ல உள்ளங்களின் உதவிகளோடு வாழ்க்கையை நகர்த்திவருகிறார்.

 மரக்கன்று நடும்போது...
மரக்கன்று நடும்போது...

இவரைப் பற்றி, விகடன் இணையதளத்தில் கடந்த 1 -ம் தேதி, 'உறவுகள் உதாசீனப்படுத்துறதுதான் வாழணும்ங்கிற ஆசையைத் தூண்டுது' - தன்னம்பிக்கை மனிதர் லோகநாதன்! என்ற தலைப்பில் கட்டுரை பதிந்தோம். அந்தக் கட்டுரை லோகநாதனுக்கு அரசு மற்றும் தனியார் அமைப்புகளிடமிருந்து ஏராளமான உதவிகளைப் பெற்றுத்தந்தது.

கரூரைச் சேர்ந்த ஒன்ஸ்டெப் அறக்கட்டளை உள்ளிட்ட சில அமைப்புகள், லோகநாதனின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, அவரது இடத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பில் வீடு கட்டித் தர முன்வந்தார்கள். அதையும் பதிவு செய்திருந்தோம். இந்த நிலையில், லோகநாதனுக்கு 25 - வது பிறந்த தினம் வரவே, அவரது வாழ்நாளில் முதன்முறையாக பிறந்தநாள் விழா கொண்டாட வைத்து, நெகிழவைத்திருக்கிறார்கள்.

கேக் வெட்டும் லோகநாதன்
கேக் வெட்டும் லோகநாதன்

கரூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவலர்களான கஜேந்திரன் மற்றும் சுந்தரி இருவரும், கேக் வாங்கி வந்து, கேக் வெட்ட வைத்து, பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லி, லோகநாதனை நெக்குருகவைத்தார்கள். அதோடு, லோகநாதனுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி, மளிகைச் சாமான்களையும் வழங்கினார்கள்.

இன்னொரு பக்கம், நரேந்திரன் கந்தசாமி என்பவர் கொடுத்த மகிழ மரக்கன்றை, லோகநாதன் தொட்டுக் கொடுத்த பிறகு, அவரின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், அவருக்காகக் கட்டப்பட்டு வரும் புது வீட்டுக்கு அருகில் நட்டார்கள்.

லோகநாதனிடம் பேசினோம்.

"எல்லாம் முடிந்தது. இனி வாழ்க்கையில் என்ன இருக்கிறதுனு நினைச்சு, ஒவ்வொருநாளும் உள்ளூர புழுங்கிகிட்டு இருந்தேன். என்னைச் சுற்றி இருந்த உறவுகள், என்னைக் கிள்ளுக்கீரையாக நினைத்தபோது, இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிலர் தயவில், கடந்த 8 வருடங்களை பாலைவனத்தில் நடப்பது போல் அவ்வளவு கஷ்டப்பட்டு வாழ்ந்து கடந்தேன். இந்த நிலையில்தான், விகடனில் என்னைப் பற்றி எழுதி, எனக்காக பல உறவுகள், உதவிகளைப் பெற்றுத் தந்தீர்கள்.

லோகநாதனுக்காக கட்டப்படும் வீடு
லோகநாதனுக்காக கட்டப்படும் வீடு

'சொந்தமா பத்தடி தூரம் நகர முடியாத எனக்கு, சொந்தமா வீடு கட்டி, அதுல வாழணும்'ங்கிற ஆசை வந்ததெல்லாம் வீண் ஆசைன்னே தோணுச்சு. ஆனா, எனக்கு புது வீடு கட்டித் தரவும் முயற்சி எடுத்திருக்காங்க. நடப்பவை எல்லாம் கனவா, நினைவானு ஒவ்வொரு நொடியும் ஆனந்தக் கூத்தாடிக்கிட்டு இருக்கிறேன்.

என்னை, 25-வது பிறந்தநாள் விழா கொண்டாட வைத்து, மொத்த வாழ்நாளுக்கும் தேவையான மகிழ்ச்சியைத் தந்திருக்காங்க. இந்தத் தெம்பு, இந்த நிறைவு போதும் சார், கரடுமுரடா கண்முன்னால கிடக்கிற வாழ்க்கையை சிறப்பா வாழ்ந்து முடிச்சிருவேன் சார்" என்றார், நா தழுதழுக்க!

பிறந்தநாள் வாழ்த்துகள் லோகநாதன்!

அடுத்த கட்டுரைக்கு