Published:Updated:

கரூர்: 'பட்டாசு வெடித்துக் கொண்டாடிய பா.ஜ.க-வினர்!' - கடுகடுத்த ஆட்சியர்

காவலர்களிடம் வாக்குவாதம் செய்யும் பா.ஜ.க-வினர்
காவலர்களிடம் வாக்குவாதம் செய்யும் பா.ஜ.க-வினர் ( நா.ராஜமுருகன் )

போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நின்றதைக் கண்டு கோபமானதோடு, காவல்துறை அதிகாரிகளை அழைத்து உடனடியாக பா.ஜ.க-வினரை அங்கிருந்து அப்புறப்படுத்த வாய்மொழி உத்தரவிட்டார்.

பா.ஜ.க-வின் தமிழகத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதற்குப் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க நிர்வாகிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், கரூர் எஸ்.பி-யுடன் பா.ஜ.க-வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, 41 ஆண்கள், நான்கு பெண்கள் என 45 பா.ஜ.க-வினர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காவலர்களிடம் வாக்குவாதம் செய்யும் பா.ஜ.க-வினர்
காவலர்களிடம் வாக்குவாதம் செய்யும் பா.ஜ.க-வினர்
நா.ராஜமுருகன்

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியும், கரூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவருமான அண்ணாமலை, நடந்து முடிந்த தேர்தலில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார். ஆனாலும், தமிழகத்தில் நான்கு தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றியது. இந்தநிலையில், தமிழகத்தில் பா.ஜ.க தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி கிடைக்க, தமிழக பா.ஜ.க துணைத் தலைவராக இருந்த அண்ணாமலைக்கு நேற்று மாநிலத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்தநிலையில், உற்சாகமனார்கள் கரூர் மாவட்ட பா.ஜ.க தொண்டர்கள். அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவர் சிவசாமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் கூடி பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், அண்ணாமலை மாநிலத் தலைவராக அறிவிக்கப்பட்டதற்கு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இனிப்பு வழங்கும் பா.ஜ.க-வினர்
இனிப்பு வழங்கும் பா.ஜ.க-வினர்
நா.ராஜமுருகன்

இந்தநிலையில், வேறு வேலையாக அந்த வழியாக வந்த கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர், பா.ஜ.க-வினர் சாலையின் குறுக்கே பட்டாசு வெடித்து, போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நின்றதைக் கண்டு கோபமானதோடு, காவல்துறை அதிகாரிகளை அழைத்து உடனடியாக பா.ஜ.க-வினரை அங்கிருந்து அப்புறப்படுத்த வாய்மொழி உத்தரவிட்டார். கரூர் நகர டி.எஸ்.பி பொறுப்பு சீனிவாசன், பா.ஜ.க-வினரை கலைந்து செல்ல அறிவுறுத்தினார். ஆனால், அவர்களோ `மற்ற கட்சியினர் கரூரில் கொண்டாட்டத்தில் ஈடுபடும்போது, பா.ஜ.க-வினருக்கு மட்டும் அனுமதி மறுப்பது ஏன்?' என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

`திமுக ஆட்சியில் அணில்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதா?’ செந்தில் பாலாஜியை விமர்சிக்கும் அண்ணாமலை

அதோடு, போலீஸாருக்கும் பா.ஜ.க-வினருக்கும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. விஷயம் தெரிந்து சம்பவ இடத்துக்கு தந்த கரூர் எஸ்.பி சுந்தரவடிவேல் தள்ளுமுள்ளுவைக் கட்டுப்படுத்த பா.ஜ.க-வினரைக் கைதுசெய்ய உத்தரவிட்டார். இதனால், போலீஸ் வாகனத்தில் பா.ஜ.க-வினரை ஏற்ற முயன்றபோது, கரூர் எஸ்.பி-யுடன் பா.ஜ.க-வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கைது நடவடிக்கை கைவிடப்பட்டதால், பா.ஜ.க-வினர் கலைந்து சென்றனர். இந்தநிலையில், பொதுமக்களுக்கு இடைஞ்சல் தந்ததாக, 41 ஆண்கள், நான்கு பெண்கள் என்று மொத்தம் 45 பா.ஜ.க-வினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செய்தியாளர்களைச் சந்தித்த கரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் சிவசாமி, ``ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்படுகிறார்கள்.

காவலர்களிடம் வாக்குவாதம் செய்யும் பா.ஜ.க-வினர்
காவலர்களிடம் வாக்குவாதம் செய்யும் பா.ஜ.க-வினர்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை, கள்ளச்சாராயம், சந்துக் கடை மது விற்பனை ஆகியவை வரம்பின்றி நடைபெற்று வருவதைத் தடுக்காமல், கரூர் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து காவல்துறை உயரதிகாரியாக பதவி வகித்து, தற்போது பாரதிய ஜனதா கட்சியின் தலைமையை ஏற்றுள்ள இளம் தலைவர் அண்ணாமலைக்கு மாநிலத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதற்காக, எளிமையான முறையில் கொண்டாடிவருகிறோம் அதைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்தார். பா.ஜ.க-வினரை மாவட்ட ஆட்சியர் அப்புறப்படுத்தச் சொன்ன விவகாரம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு