கரூர்: `ரஜினி அரசியலுக்கு வர வேண்டும்!' - 'ஆன்மிக வழி'யில் போராடும் ரசிகர்கள்

கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகேயுள்ள தபால் தந்தி அலுவலகம் முன்பு, ரஜினி ரசிகர்கள் 20-க்கும் மேற்பட்டோர், ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி `அமைதியான ஆன்மீக எழுச்சி' என்ற பெயரில் அறவழிப் போராட்டம் நடத்தினர்.
`ஆண்டவன் எங்கள் தலைவருக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்திருப்பதால், ரஜினி மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும். ரஜினி தன் அரசியல் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்று கரூரில் ரஜினி ரசிகர்கள் ஆன்மிக வழியில் அறவழிப் போராட்டம் நடத்தினர். ரஜினி முன்பு, `ஆன்மிக அரசியல் செய்யப்போகிறேன்' என்று அறிவித்ததைவைத்து அவரது பாணியிலேயே அவரது ரசிகர்கள், `ஆன்மீக வழியில் போராட்டம்' என்று கிளம்பியிருக்கிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்த், , 'வரும் டிசம்பர் 31-ம் தேதி அரசியல் கட்சியை அறிவிப்பேன்' என்று உறுதியாகச் சொன்னார். இதனால், அவரது ரசிகர்கள் உற்சாகமானார்கள். இதற்கிடையில், ஹைதராபாத்துக்கு `அண்ணாத்த' பட ஷூட்டிங்குக்காகச் சென்ற ரஜினிகாந்த் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு காரணமாக, அங்கிருக்கும் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

அதன் பிறகு, மருத்துவர்கள், குடும்ப உறுப்பினர்களின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, 'நான் கட்சி தொடங்கவில்லை, அரசியலுக்கு வரவில்லை' என அறிவித்தார். இதனால், தமிழகத்திலுள்ள அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அது குறித்து, ரஜினி, `ஆண்டவன் தனக்கு உடல்நிலை குறித்து எச்சரிக்கை விடுத்திருப்பதால், நான் அரசியலுக்கு வரவில்லை' என தன்னிலை விளக்கம் அளித்திருந்தார்.
ரஜினியின் இந்த முடிவை அவரது ரசிகர்கள் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளாமலும், அதேசமயம் எதிர்ப்பு தெரிவிக்காமலும் இருந்துவந்தனர். இந்தநிலையில், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகேயுள்ள தபால் தந்தி அலுவலகம் முன்பு, ரஜினி ரசிகர்கள் 20-க்கும் மேற்பட்டோர், ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி 'அமைதியான ஆன்மீக எழுச்சி' என்ற பெயரில் அறவழிப் போராட்டம் நடத்தினர். இது குறித்து, ரஜினி ரசிகர்கள் கூறும்போது,

``தனது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்திருப்பதாகக் கூறியிருக்கிறார், எங்கள் தலைவர் ரஜினிகாந்த். ஆனால், ஆண்டவன் அவருக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்திருப்பதால், அவர் மீண்டும் தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். அதை வலியுறுத்தியே, இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறோம். தொடர்ந்து ரஜினி மனம் மாறி, அரசியல் நிலைப்பாட்டை எடுக்கும்வரை, ஆன்மிக வழியில் எங்களது அறப்போராட்டம் அடுத்தடுத்து தொடரும்" எனத் தெரிவித்தனர். அரசியல் நிலைப்பாடு விவகாரத்தில் ரஜினிகாந்த் விட்டாலும், அவரின் ரசிகர்கள் அவரை விட மாட்டார்கள்போலிருக்கிறது.