Published:Updated:

கரூர்: `சைக்கிளைவிட இதுதான் முக்கியம்!' - கொரோனா நிவாரண நிதி வழங்கிய மாணவன்

சைக்கிள் வாங்க தான் சேமித்த ரூ.5,000 தொகையை கொரோனா நிவாரண நிதி உதவியாக, கோடாங்கிபட்டி கிராமத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் மு.வடநேரேவிடம் வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் ஜோதீஸ்வரன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பதினொன்றாம் வகுப்பு மாணவர் ஒருவர் தான் சைக்கிள் வாங்க சேமித்த பணம் ரூ.5,000-ஐ, கரூர் மாவட்ட ஆட்சியரிடம் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கி, நெகிழ வைத்திருக்கிறார். அங்கே இருந்த மின்சாரத்துறை அமைச்சர், `மாணவன் விரும்பும் சைக்கிளை நான் வாங்கித் தருகிறேன்' என்று அறிவித்து, அந்த மாணவனை ஊக்கப்படுத்தியிருக்கிறார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலின் 2-ம் அலை காரணமாக, மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் பீதியில் உறைந்திருக்கிறார்கள். இந்த நிலையில், தேவையான மருந்துகளை கொள்முதல் செய்யவும், ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்கவும், தமிழக முதல்வர் ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதி வழங்கும்படி, அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நிதி வழங்கும் ஜோதீஸ்வரன்
நிதி வழங்கும் ஜோதீஸ்வரன்
`ஒரு உயிரைக்கூட இழக்கக் கூடாது!' - கரூருக்காக இணையத்தில் நிதி திரட்டும் ஜோதிமணி எம்.பி

அந்த வகையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வெளிநாடு வாழ் தமிழர்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினர், முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்து வருகின்றனர். அந்த வகையில், கரூரைச் சேர்ந்த மாணவர், இருசக்கர வாகனம் வாங்க சேமித்து வைத்திருந்த பணத்தை நிவாரண நிதிக்காக வழங்கியிருக்கிறார்.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோடாங்கிபட்டி கிராமத்தில் வசிப்பவர் ராஜேந்திரன். இவர், கரூரில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் கம்பெனி ஒன்றில் டெய்லராகப் பணியாற்றி வருகிறார். இவரின் மகன் ஜோதீஸ்வரன். இவர், பதினொன்றாம் வகுப்புப் படித்து வருகிறார்.

ஜோதீஸ்வரன் சைக்கிள் வாங்குவதற்காகக் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து வருகிறார். அந்த வகையில், அவர் ரூ.5,000 வரை சேர்த்திருக்கிறார். கொரோனாவின் தாக்கம் குறித்தும், அதைத் தடுக்க அரசு மக்களிடம் நிவாரண நிதி கோரியதையும் அறிந்திருக்கிறார். தான் சேமித்த ரூ.5,000 தொகையை கொரோனா நிவாரண நிதி உதவியாக, கோடாங்கிபட்டி கிராமத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் மு. வடநேரேவிடம் வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

அப்போது அந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அந்த மாணவரின் செயலைப் பாராட்டியதுடன், ``நமக்கு நாமே உதவிக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளும் வகையில் சிறுவனின் செயல் அனைவருக்கும் முன்னுதாரணம். மேலும், இந்த மாணவனின் செயலை ஊக்குவிக்கும் வகையில், எனது சொந்த செலவில் மாணவன் விரும்பும் சைக்கிளை வாங்கி வழங்க இருக்கிறேன்" என்று மேடையிலேயே அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து, மாணவர் ஜோதீஸ்வரனிடம் பேசினோம்.

ஜோதீஸ்வரன்
ஜோதீஸ்வரன்

``நான் ரூ.10,000-ல் சைக்கிள் ஒன்று வாங்க நினைத்தேன். அதற்காக, கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து வந்தேன். அதேநேரம், கொரோனா ஊரடங்கு நேரத்தில் மக்கள் படும் அவதிகளைத் தினம்தோறும் தொலைக்காட்சி வாயிலாகவும் தினசரி செய்தித்தாள்கள் வாயிலாகவும் நான் படித்து தெரிந்து கொண்டேன். நடக்கும் விஷயங்கள் எனக்கு அதிர்ச்சியைத் தந்தன. அதனால், என்னாலான உதவியை செய்ய நினைத்தேன். அதற்காக, எங்கள் ஊரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி குறித்து தெரிந்து கொண்டு, நான் சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை, கரூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தேன்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு