Published:Updated:

`நடமாடும் கழிப்பறை; மனிதக் கழிவில் இயற்கை உரம்!' - கரூர் பள்ளி மாணவர்களின் அசத்தல் ஐடியா

``நடமாடும் கழிவறைகள் ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன. ஆனால், நடமாடும் கழிவறைகளைக் கொண்டு, மனிதக் கழிவுகளை உரமாக மாற்றக்கூடிய இந்தப் புதிய யோசனை இக்கண்டுபிடிப்பின் மிக முக்கிய அம்சமாகும்."

`திருவிழா, மாநாடு, திருமண நிகழ்வு நடக்கும் இடங்கள் என்று மக்கள் கூடும் இடங்களில் நடமாடும் கழிப்பறை அமைத்து, மனிதக் கழிவுகளை இயற்கை உரமாக மாற்ற முடியும்' என்று தங்களது அசத்தல் ஐடியா வடிவமைப்பு மூலம் தம்ஸ்அப் காட்டுகிறார்கள், கரூரைச் சேர்ந்த மூன்று மாணவர்கள்.

நடமாடு கழிப்பறை மாதிரி
நடமாடு கழிப்பறை மாதிரி

கரூரியில் இயங்கி வரும் ஸ்ரீசங்கரா வித்யாலயா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் ரேதினா, அனுஷிவானி மற்றும் மாணவன் நிதிஷ் ஆகிய மூவரும் சேர்ந்து, மனிதக் கழிவுகளை இயற்கை உரமாக மாற்ற உதவக்கூடிய, நடமாடும் கழிப்பறையை வடிவமைத்திருக்கிறார்கள். தங்களது, வழிகாட்டி ஆசிரியர் ராஜசேகரன் உதவியோடு, இந்த வடிவமைப்பை சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த அறிவியல் கண்டுபிடிப்பு, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, மற்றும் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, பள்ளிக்கல்வித்துறை இணைந்து ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு நடத்தும் இன்ஸ்பயர் மானக் போட்டியில் சிறந்த படைப்பாக 2020-ல் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு, ரூபாய் 10,000 ஊக்கத்தொகையைப் பரிசாகப் பெற்றுள்ளது. அதோடு, இந்தக் கண்டுபிடிப்பு, ஸ்வச் சாரதி (SSF) என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழும் தேர்வு செய்யப்பட்டு, ரூபாய் 5,000 உதவித்தொகை பெற்றுள்ளது. மேலும், வில்லேஜ் ஹேக்கத்தான் 2021 என்ற விவசாயத்துக்கு உதவி செய்யக்கூடிய கண்டுபிடிப்புகள் தொடர்பான கட்டுரைப் போட்டியிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மாணவ, மாணவிகள்
மாணவ, மாணவிகள்
மனு கொடுக்க வரும் மாற்றுத்திறனாளிகள்; இலவச  ஆட்டோ ஏற்பாடு செய்த ஆட்சியர்! - கரூர் நெகிழ்ச்சி

இது தொடர்பாக, இந்தக் கழிவறையை வடிவமைத்த மாணவர்கள் மூவரிடமும் பேசினோம்.

``பொதுவாக, கோயில் திருவிழாக்கள், கட்சி பொதுக்கூட்டங்கள் மற்றும் வாரச் சந்தைகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடக் கூடிய பொது இடங்களில் போதிய கழிப்பறை வசதிகள் இருப்பதில்லை. சில தினங்களுக்காக அல்லது குறுகிய காலத்துக்காக நிரந்தர கழிப்பறைகளை அமைப்பதிலும் நடைமுறை சிக்கல்களும், பராமரிப்பு அசௌகர்யங்களும் உள்ளன. பொதுமக்கள் கழிப்பறை இல்லாத காரணத்தால், பொது இடங்களில் இயற்கை உபாதைகளைக் கழிக்கின்றனர். இதனால், பல்வேறு சுற்றுச்சூழல் மாசுபாடும், நோய் பரவும் அபாயமும் ஏற்படுகின்றன. நீர், நிலம் மற்றும் காற்று ஆகியவை மாசுபாடு அடைகின்றன.

கழிப்பறை என்பது குழந்தைகள், நோயாளிகள் மற்றும் வயதானவர்களுக்கு அடிக்கடி தேவைப்படும் ஒரு முக்கிய அம்சமாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், பெண்கள் மாதவிடாய் காலங்களில் தூய்மையான கழிவறைகள் இல்லாத காரணத்தால், பல்வேறு சிக்கல்களுக்கும் ஆளாகின்றனர். இன்னொரு பக்கம், பொதுவாக விவசாயத்துக்கு அதிக அளவில் செயற்கை உரங்கள் மற்றும் செயற்கை பூச்சி மருந்துளை நாம் உபயோகிக்கிறோம். அதனால், மனிதகுலத்துக்கு ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களுக்குக் காரணமாக செயற்கை உரங்கள் இருக்க, சமீப காலமாக இயற்கை விவசாயத்தின் மீது நமது கவனம் திரும்பியுள்ளது. பொதுவாக, மண்புழு உரம் என்பது நாம் உபயோகிக்கக்கூடிய இயற்கை உரமாகும். அதைப்போன்று, மனிதக் கழிவுகளை இயற்கை உரமாக மாற்றுவதன் மூலம், அதிக சத்துள்ள இயற்கை உரம் நமக்குக் கிடைக்கும்.

நடமாடும் கழிப்பறை மாதிரி
நடமாடும் கழிப்பறை மாதிரி
இரண்டரை வயதில் அபார நினைவாற்றல்; சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சிறுமி!

இது, பல வெளிநாடுகளில் சிறந்த இயற்கை உரமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதைப் பற்றிய போதிய விழிப்புணர்வு நம் நாட்டில் இல்லை. அதே நேத்தில், நம் நாடான இந்தியா மக்கள் தொகையில் இரண்டாமிடத்தில் உள்ளது. அதனால், மனிதக் கழிவுகளை உரமாக மாற்றினால், நமது இயற்கை உரத் தேவையானது வெகுவாகப் பூர்த்தி செய்யப்படும். அதற்காகத்தான், இந்த நடமாடும் இயற்கை கழிப்பறையை கண்டுபிடித்துள்ளோம்" என்றார்கள்.

தொடர்ந்து பேசிய, மாணவர்களின் வழிகாட்டி ஆசிரியரான ராஜசேகரன், ``பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில் இத்தகைய நடமாடும் கழிவறைகளை அமைப்பதன் மூலம், குறிப்பிட்ட காலத்தில் அதிக அளவு மனிதக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, அவற்றை ஓரிடத்தில் உரமாக மாற்றி, நம் விவசாயிகளுக்கு இயற்கை உரமாக அளிக்க முடியும். இதனால், செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் பக்க விளைவுகள் முற்றிலும் தவிர்க்கப்படும். மேலும், விவசாயிகளுக்கும் இத்தகைய உரம் நல்ல லாபம் தரக்கூடியதாக இருக்கும்.

ராஜசேகரன்
ராஜசேகரன்

அதோடு, இதில் கார்பன் அளவு மிக அதிகமாக இருப்பதால், மண்ணில் சத்துகள் நீண்ட நாள்களுக்கு பாதுகாக்கப்பட்டு, மண்ணும் வளமோடு இருக்கும். இத்தகைய நடமாடும் கழிவறைகள் ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன. ஆனால், நடமாடும் கழிவறைகளைக் கொண்டு, மனிதக் கழிவுகளை உரமாக மாற்றக்கூடிய இந்தப் புதிய யோசனை இக்கண்டுபிடிப்பின் மிக முக்கிய அம்சமாகும். நடமாடும் இந்தக் கழிவறை மாதிரியை மிகத் தத்ரூபமாக வடிவமைத்துள்ளார், எங்கள் பள்ளியைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் கார்த்திகேயன்.

இதில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி கழிவறைகள் இந்திய மற்றும் மேற்கத்திய பாணியில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புக் கழிப்பறை, குழந்தைகளுக்கு ஏற்ற கழிப்பறையும் அமைக்கப்பட்டுள்ளது. தவிர, இப்பேருந்து மேற்கூரை பகுதி மழைநீரை சேகரிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், இப்பேருந்து முழுக்க முழுக்க சூரிய சக்தியில் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு, சானிட்டரி நாப்கின் எரிப்பான் இந்தப் பேருந்தில் உள்ள மிக முக்கிய அம்சமாக உள்ளது.

மழைநீர் சேமிப்பு மாதிரி அமைப்பு
மழைநீர் சேமிப்பு மாதிரி அமைப்பு
105 ஆண்டுகளில் முதல் பெண் தலைவர்; இந்திய உயிரியல் நிறுவனத்தில் சாதனை படைத்த த்ரிதி பானர்ஜி யார்?

மேலும், மாணவ, மாணவிகள் கரூரில் இயங்கி வரும் பேருந்து வடிவமைக்கும் இடத்துக்குச் சென்று, இதன் சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வு செய்துள்ளனர். அவர்களின் ஆய்வின் முடிவில், இது சாத்தியம் எனவும், எவ்வாறு வடிவமைப்பது எளிது என்றும் மாணவர்கள் விவரமாக ஆய்வுசெய்து கண்டறிந்துள்ளனர். மேலும், புழக்கத்தில் இல்லாத பழைய பேருந்துகளை இவ்வாறு கழிவறைகளாக மாற்றுவதன் மூலம், குறைந்த செலவில் இதுபோன்ற நடமாடும் கழிப்பறைகளை உருவாக்கலாம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு