Published:Updated:

`என்னைப் பார்த்து இப்போ பலரும் உதவுறாங்க!' - ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக கொடுத்த ஆசிரியை

நிதி வழங்கும் தேவிகலா
நிதி வழங்கும் தேவிகலா

கணினி அறிவியலில், எம்.எஸ்ஸி, எம்.பில், பி.எட் முடித்துள்ளார். கரூர் நகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் குமரன் உயர்நிலைப் பள்ளியில், பகுதி நேர ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் மற்றும் பாதிப்புகளைத் தடுக்க, தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதோடு, தமிழக மக்களிடம் நிவாரண உதவிக்கு நிதி கேட்டார், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். அதனடிப்படையில், சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தைக் கொடுத்த குழந்தைகள் முதல், பிள்ளையின் படிப்புக்காக வைத்திருந்த பணத்தை தந்த பெற்றோர்கள் வரை, பலரும் கொரோனா நிவாரண நிதிக்குப் பங்களிப்பு செய்து, மனிதாபிமானத்துக்கு மகுடம் சூட்டி வருகிறார்கள். அந்த வகையில், கரூரில் உள்ள அரசுப் பள்ளியில் பகுதி நேர ஆசிரியையாகப் பணியாற்றி வரும் தேவிகலா, தனது ஒருமாத சம்பளமான ரூ.10,000-ஐ அப்படியே முதல்வர் நிவாரண நிதிக்குக் கொடுத்து, நெகிழ வைத்திருக்கிறார்.

அரிசி வழங்கும் தேவிகலா
அரிசி வழங்கும் தேவிகலா
கன்றுகளை விற்று நிவாரண நிதி, விகடன் தந்த வெளிச்சம், கிடைத்த உதவி; நெகிழும் மாற்றுத்திறனாளி!

கரூர் தான்தோன்றிமலை அருகில் உள்ள கருப்பகவுண்டன் புதூரைச் சேர்ந்தவர் தேவிகலா. இவர், கணினி அறிவியலில், எம்.எஸ்ஸி, எம்.பில், பி.எட் முடித்துள்ளார். கரூர் நகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் குமரன் உயர்நிலைப் பள்ளியில், பகுதி நேர ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவரின் கணவர் ரகுநாதன் வழக்கறிஞராக உள்ளார். வாடகை வீட்டில் வசித்து வரும் தேவிகலா, மாத சம்பளமாக ரூ. 10,000 வாங்குகிறார். அந்தப் பணத்தை, முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மாறியிருக்கிறார்.

இதுகுறித்து, ஆசிரியை தேவிகலாவிடம் பேசினோம். ``பெருசா எங்களுக்கு வசதிவாய்ப்பில்ல. ஆனா, மத்தவங்களுக்கு உதவணும்ங்கிற எண்ணம் எனக்கு சின்ன வயசுல இருந்தே இருக்கு. எங்கப்பா அப்படி மத்தவங்களுக்கு உதவுவார். அதைப் பார்த்து, எனக்கும் மத்தவங்களுக்கு உதவணும்ங்கிற எண்ணம் வந்துச்சு. கடந்த வருஷம் என்னால முடிஞ்ச அளவுக்கு சிலருக்கு உணவுப் பொருள்கள் வாங்கிக் கொடுத்தேன். முதியோர் இல்லங்கள்ல உள்ளவங்களுக்கு உடை, இனிப்புனு வாங்கிக் கொடுத்தேன். இந்த வருஷம் கொரோனா இரண்டாம் அலை வந்து, மறுபடியும் லாக்டௌன் போட்டாங்க.

 தேவிகலா
தேவிகலா

மக்களை கொரோனா கடுமையா பாதிக்குது. இன்னொரு பக்கம், மக்களோட வாழ்வாதாரம் பாதிக்கப்படுது. அதனால, முதல்வர், மக்களிடம் நிதி வழங்கும்படி கேட்டார். அதுக்கு நானும் பங்களிப்புச் செய்யணும்னு நினைச்சேன். ஆனா, எனக்கோ, என் கணவருக்கோ பெரிய அளவுல வருமானம் கிடையாது. பகுதி நேர ஆசிரியையா இருக்கும் எனக்கு, மே மாதம் சம்பளம் கிடையாது. கடந்த ஏப்ரல் மாத சம்பளத்தை செலவு பண்ணாம அப்படியே வெச்சிருந்தேன். `அதை முதல்வர் நிவாரண நிதிக்குக் கொடுக்கட்டுமா?'னு கணவர்கிட்ட கேட்டேன். அவரும் என் விருப்பத்துக்கு மகிழ்ச்சியோடு சம்மதித்தார்.

அந்தத் தொகையை, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அப்போதைய கலெக்டர் பிரசாந்த் மு வடநேரே ஆகியோர்கிட்ட கொடுத்தேன். `உங்களுக்கு சம்பளம் எவ்வளவு?'னு கேட்டாங்க. `பத்தாயிரம்'னு சொன்னதும், ஆச்சர்யமாகிப் பாராட்டுனாங்க. அதைப் பார்த்துட்டு, எங்க பள்ளியில் நிரந்தரப் பணிபுரியும் ஆசிரியர்கள் பலர், `எங்ககிட்ட பணமிருக்கு. ஆனா, கொடுக்க மனசில்ல. சொற்பமா சம்பளம் வாங்கும் உங்ககிட்ட, கொடுக்கணும்ங்கிற எண்ணம் இருக்கு'னு பாராட்டினாங்க. அதோடு, புதுக்கோட்டை மாவட்டத்துல பகுதி நேர ஆசிரியராகப் பணியில் இருக்கும் என் நண்பர் சுப்ரமணி, `என் தோழியின் மனிதாபிமானத்தை பாரீர்'னு வாட்ஸ்அப்ல ஸ்டேட்டஸ் வச்சுருந்தார். அதைப் பார்த்துட்டு, தமிழ்நாடு முழுக்க உள்ள பகுதிநேர ஆசிரியர்கள் பலர், தங்களால முடிஞ்ச நிதியை கொடுத்து, ஃபண்ட் கலெக்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க.

நிதி வழங்கும் தேவிகலா
நிதி வழங்கும் தேவிகலா

கரூர் மாவட்டத்தில் உள்ள 40 பகுதிநேர ஆசிரியர்கள், `உங்களைப் போல நாங்களும் உதவ நினைக்கிறோம்'னு சொல்லி, எனக்கு கூகுள் பே மூலமா இதுவரை ரூ.22,000 வரை அனுப்பி இருக்காங்க. அதை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்ப இருக்கோம். அதேபோல, தோகைமலை பிளாக்குல உள்ள அரசுப் பள்ளியில் பகுதிநேர ஆசிரியராகப் பணியாற்றும் வெங்கடேஷ், பணம் அனுப்பி அஞ்சு பேருக்கு அரிசி வாங்கி தரச் சொன்னார். இப்படி, நான் செய்த சிறு உதவி, என்னோடு நிற்காமல் பலரையும் உதவி செய்யத் தூண்டியிருக்குனு நினைக்கும்போது, ரொம்ப நிறைவா இருக்கு" என்றார் மகிழ்ச்சியுடன்.

வாழ்த்துகள் சகோதரி!

அடுத்த கட்டுரைக்கு