Published:Updated:

`எங்க மேலயும் கொஞ்சம் கருணை காட்டுங்க..!’- தவிக்கும் கரூர் திருநங்கைகள்

பாதிக்கப்பட்ட திருநங்கைகள்
பாதிக்கப்பட்ட திருநங்கைகள்

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள், கொரோனா ஊரடங்கால் தங்களது வாழ்வாதாரம் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தங்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளைச் செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய உதவிகள்கூட கிடைக்கவில்லையென கரூர் மாவட்டத்தில் வசிக்கும் திருநங்கைகள் கண்ணீரோடு தெரிவிக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட திருநங்கைகள்
பாதிக்கப்பட்ட திருநங்கைகள்
`எங்க நிலைமையை யாருகிட்ட சொல்லி அழுறது?’ - கலங்கிநின்ற பார்வையற்ற தம்பதி; உதவிய கலெக்டர்!

மற்றவர்களைத் தேடித் தேடி உதவுபவர்கள்கூட தங்களைக் கண்டு ஒதுங்குவதாகவும், உணவுகூட கிடைக்காமல் தவிப்பதாகவும் கூறும் திருநங்கைகள், கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரைச் சந்தித்து தங்களுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

பாதிக்கப்பட்ட திருநங்கைகள்
பாதிக்கப்பட்ட திருநங்கைகள்

இதுகுறித்து நம்மிடம் பேசிய திருநங்கை துர்கா,``கரூர் மாவட்டத்தில் பரவலா வசிக்கிறோம். கடை வசூலுக்குப் போறதும், சமையல் வேலைக்குப் போறதும்தான் எங்க வாழ்வாதாரம். எங்களுக்கு வேற எந்தத் தொழிலும் தெரியாது.

கொரோனா வைரஸ் பிரச்னை வந்து, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் கடந்த 15 நாள்களாக வருமானத்துக்கு வழியில்லாமல் தவிக்கிறோம். சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாமல் அல்லாடிப் போயிருக்கிறோம். எங்க நிலைமை கொரோனா பாதித்தவர்களைவிட கொடூரமாக மாறிவிட்டது.

துர்கா
துர்கா

கரூர் மாவட்ட கலெக்டரைப் பார்த்து மனு கொடுத்தோம். 'நடவடிக்கை எடுக்கிறேன்'னு சொன்னார். ஆனால், எந்த உதவியும் கிடைக்கலை. போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அண்ணனைப் பார்த்து, எங்களோட நிலைமையை எடுத்துச் சொல்லியிருக்கிறோம். அவரும், எங்களுக்கு உதவுறதா சொல்லியிருக்கிறார். எங்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாயிட்டு இருக்கு. கருணை உள்ளம் கொண்ட யாராச்சும் எங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, மளிகைச் சாமான்கள் கொடுத்தா பட்டினியில்லாம இருப்போம்” என்கிறார், வருத்தம் தோய்ந்த குரலில்!.

அடுத்த கட்டுரைக்கு