Published:Updated:

`பேனர் வைப்பதில்லை; ஏழை வீராங்கனைகளுக்கு உபகரணங்கள்!' -நெகிழவைக்கும் குளித்தலை விஜய் ரசிகர்கள்

குளித்தலை நூலகத்துக்கு 1000 உறுப்பினர்களைச் சேர்க்க இருக்கிறோம். அதிக உறுப்பினர்கள் இருந்தால், அந்த நூலகத்துக்கு அதிக புத்தகங்கள் மற்றும் தேவையான வசதியை அரசு செய்து தரும்.

வீராங்கனைகளுக்கு உதவும் விஜய் ரசிகர்கள்
வீராங்கனைகளுக்கு உதவும் விஜய் ரசிகர்கள்
`` `பிகில்'ல வராத சீன், நயன்தாராவின் பரிசு, கண்ணை மூடி திட்டு வாங்கின விஜய்!" - `பிகில்' அம்ரிதா

நடிகர் விஜய் நடித்து வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் `பிகில்' படத்துக்கு பேனர் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது எனப் பணத்தை இறைக்காமல், விளையாட்டு வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வாங்கிக் கொடுத்து நெகிழவைத்திருக்கிறார்கள், குளித்தலை ஒன்றிய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர்.

வீராங்கனைகளுக்கு உதவும் விஜய் ரசிகர்கள்
வீராங்கனைகளுக்கு உதவும் விஜய் ரசிகர்கள்

கால்பந்து வீராங்கனைகள்படும் வேதனைகளையும் அவர்கள் எதிர்கொள்ளும் அரசியலையும் மையக் கருவாக வைத்து `பிகில்' படம் எடுக்கப்பட்டுள்ளது. புதிய படங்கள் வெளியாகும்போது, `பேனர்கள் எதுவும் வைக்க வேண்டாம்' என நடிகர் விஜய்யும், தனது ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார். இதை அவரது ரசிகர்களும் கடைப்பிடித்து வருகின்றனர்.

விஜய் ரசிகர்கள்
விஜய் ரசிகர்கள்

அதேநேரம், கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றிய விஜய் மக்கள் தலைவர் சதாசிவமோ, கடந்த பத்து வருடங்களாகவே பேனர் வைப்பது, கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது போன்ற எந்தச் செயலையும் செய்வதில்லை. மாறாக, அந்தப் பணத்தில் ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு உதவுவது, ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவுவது என்று நற்பணிகளைச் செய்து வருகிறார்.

பிகில் படம் வெளியானபோது, குளித்தலைப் பகுதியைச் சேர்ந்த நான்கு வீராங்கனைகளுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்களை வாங்கிக் கொடுத்து, நெகிழவைத்திருக்கிறார் சதாசிவம்.

சதாசிவத்திடம் பேசினோம்.

``பிகில் திரைப்படம் வெளியான தினத்தன்று குளித்தலை ஊர்க்காவல் படையைச் சேர்ந்த அகில இந்திய மூத்தோர் தடகள வீராங்கனையும் ஐந்து முறை அகில இந்திய தடகளப் போட்டியில் முதல் பரிசு வென்ற ரேவதிக்குத் தடகளப் பயிற்சிக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்களை வழங்கினோம். அதேபோல், டேக்வாண்டோ பிரிவில் தேசிய அளவில் சாதித்த மாணவிகள் சுவாதி, பாவனா மற்றும் மாநில அளவில் சாதித்த நீனோஸ்ரீ ஆகிய மூவருக்கும் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் விளையாட்டு ஆடைகளை வழங்கினோம்.

எனக்குக் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது ஐந்து ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு 2 கிராம் வீதம் தங்கம் வழங்கினோம். விஜய் பிறந்தநாள் விழாவை ரத்ததானம் வழங்கும் விழாவாக மட்டுமே நடத்துறோம். அதேபோல், பிகில் திரைப்பட வெற்றியை வேறுவிதமாகக் கொண்டாட இருக்கிறோம்.

சதாசிவம்
சதாசிவம்

குளித்தலை நூலகத்துக்கு 1000 உறுப்பினர்களைச் சேர்க்க இருக்கிறோம். அதிக உறுப்பினர்கள் இருந்தால், அந்த நூலகத்துக்கு அதிக புத்தகங்கள் மற்றும் தேவையான வசதியை அரசு செய்து தரும். அதனால், குளித்தலை நூலகத்துக்கு 1000 உறுப்பினர்களைச் சேர்க்க இருக்கிறோம். முதல்கட்டமாக நூறு பேரை உறுப்பினராகச் சேர்த்துட்டோம். நாங்கள் தொடர்ந்து முன்மாதிரியாகச் செயல்பட இருக்கிறோம்" என்றார் உற்சாகத்துடன்.