Published:Updated:

`மொபைலே இல்ல, ஊர்க்காரங்கதான் உதவுறாங்க!' - ஆன்லைன் போட்டிகளில் பரிசுகள் குவிக்கும் கிராமத்து மாணவி

மரக்கன்று நடும் கனகவள்ளி
மரக்கன்று நடும் கனகவள்ளி

படிப்பில் சிறப்பாக விளங்கும் மாணவியான இவர், ஆன்லைன் மூலம் நடத்திய 5 போட்டிகளில் கலந்துகொண்டு, பரிசுகள் வாங்கியிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கரூர் மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய சிறிய கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், லாக்டௌன் காலத்தில் ஆன்லைன் மூலமாக நடைபெற்ற போட்டிகளில் பரிசுகளை வாங்கி அசத்தியிருக்கிறார். அதோடு, `வருங்காலத்தில் ஆட்சியர் ஆவதே எனது லட்சியம். அதற்கு இந்தத் தனித்திறமை கைகொடுக்கும்' என்று உற்சாகமாகப் பேசுகிறார் அந்த மாணவி.

கனகவள்ளியைப் பாராட்டும் ஆசிரியர்கள்
கனகவள்ளியைப் பாராட்டும் ஆசிரியர்கள்

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் உள்ள வ.வேப்பங்குடி பகுதியைச் சேர்ந்தவர் கனகவள்ளி. இவர், அருகில் உள்ள காணியாளம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்புப் படித்து வருகிறார். படிப்பில் சிறப்பாக விளங்கும் மாணவியான இவர் கட்டுரை, கவிதை, பேச்சு என்று தனித்திறமை சார்ந்த விஷயங்களிலும் சிறந்து விளங்குகிறார். கொரோனா ஊரடங்குக் காலத்தில் பல்வேறு அமைப்புகள் ஆன்லைன் மூலம் நடத்திய 5 போட்டிகளில் கலந்துகொண்டு, பரிசுகள் வாங்கியிருக்கிறார்.

இதுகுறித்து, மாணவி கனகவள்ளியிடம் பேசினோம்.

``எங்கப்பா கூலி வேலை பார்க்கிறார். எங்கம்மா ஒரு மாற்றுத்திறனாளி. எங்க கிராமம் ரொம்பவும் பின்தங்கிய கிராமம். சாப்பாட்டுக்கே பலநேரம் கஷ்டப்படுற சூழல். அதனால், `நல்லா படிச்சு நல்ல நிலைமைக்கு வரணும்'னு தொடர்ந்து நல்லா படிச்சுக்கிட்டு வர்றேன். எங்க குடும்பத்துல அதிகம் படிச்சது நான்தான். இன்னும் கல்லூரி படிப்பு, மேல் படிப்பு படிச்சு, நல்ல நிலைமைக்கு வரணும்னு தினமும் மனதில் வைராக்கியத்தை வளர்த்துக்கிட்டு வர்றேன். வெறும் படிப்போட நிக்காம, விளையாட்டு, தனித்திறமை போட்டிகள்னு பல விஷயங்களிலும் ஈடுபாடு எனக்கு.

கனகவள்ளி
கனகவள்ளி

எதையாவது பண்ணி, இந்தச் சமூகத்துல முன்னுக்கு வந்துர முடியாதாங்கிற ஏக்கத்துல எல்லா விசயத்தையும் கத்துக்கிட்டு இருக்கிறேன். அப்படித்தான், பள்ளி அளவுல நடக்கும் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் கலந்துக்குவேன். பரிசுகள் வாங்குவேன். இந்த நிலையிலதான், கொரோனா வந்து, பள்ளிக்கு விடுமுறை விட்டாங்க. தொடர் லாக்டௌன் போட்டாங்க. இந்தச் சூழலில், பல்வேறு அமைப்புகள் ஆன்லைன் மூலமாக நடத்திய போட்டிகள்ல ஆர்வமா கலந்துகிட்டேன். என்கிட்ட செல் இல்லை. ஆனா, எங்க ஊரைச் சேர்ந்த அண்ணன்கள் சிலர் என்னோட ஆர்வத்தைப் பார்த்து, போட்டிகள் குறித்த அறிவிப்பை சொல்வாங்க. அவங்க ஆண்ட்ராய்டு மொபைலைக் கொடுத்து, போட்டிகள்ல கலந்துக்க உதவினாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதனால், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ஐந்து போட்டிகள்ல முதல் பரிசு, சிறப்புப் பரிசு, வெள்ளி நாணயம்னு பரிசுகளை வாங்க முடிந்தது. அமெரிக்காவில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் மன்றம் நடத்திய கட்டுரைப் போட்டியில் சிறப்புப் பரிசு வாங்கினேன். 1,000 ரூபாய் பணமுடிப்பும் சான்றிதழும் கொடுத்தாங்க. அதேபோல், மதுரையில் உள்ள முத்தமிழ் நாட்டுப்புற கலைகள் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பல அமைப்புகள் இணைந்து நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு வாங்கியிருக்கிறேன். அவர்கள் இன்னும் பரிசளிப்பு விழா நடத்தலை.

கனகவள்ளி பெற்ற வெள்ளி நாணயம் பரிசு
கனகவள்ளி பெற்ற வெள்ளி நாணயம் பரிசு
`கோச்சுக்காதீங்க... பள்ளியில் இடமில்ல!' - மாணவர் சேர்க்கையில் அசத்தும் அரசு தொடக்கப் பள்ளி

பசுமைக்குடி என்ற இயற்கை ஆர்வலர்கள் நிறைந்த அமைப்பு, கொரோனாவுக்கு எதிராக, பாசிட்டிவிட்டியை அதிகரிக்க வைக்கும் வகையில, மாநில அளவிலான கட்டுரைப் போட்டியை ஆன்லைன் மூலமாக நடத்தினாங்க. அதில் கலந்துகொண்ட எனக்கு முதல் பரிசு கிடைத்தது. கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், மாவட்ட கல்வி அலுவலர் கையால பரிசு வாங்கினேன். அதேபோல், கரூர் திருக்குறள் பேரவை நடத்திய மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டியில கலந்துகொண்டு பரிசு வாங்கினேன். வெள்ளி நாணயமும், சான்றிதழும் கொடுத்தாங்க. இறுதியாக, கும்பகோணம் நிமிர்வு மாற்று ஊடக மையம் நடத்திய அம்பேத்கர் குறித்த கவிதைப் போட்டியில கலந்துகொண்ட எனக்கு, `அம்பேத்கர் விருது' கொடுத்தாங்க.

இப்படி, மாவட்டம், மாநிலம், உலகளவுல பரிசுகள் வாங்கியது புது உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது.

எங்க பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு, இயற்கை சார்ந்த ஆர்வத்தையும் ஏற்படுத்திக்கொண்டுள்ளேன். எனது எல்லா முயற்சிகளையும் பள்ளியின் தலைமை ஆசிரியரும் ஆசிரியர்களும் தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்துறாங்க. நான் வருங்காலத்தில் ஆட்சியராக வர வேண்டும் என்ற லட்சியத்தை மனதில் விதையா விதைத்திருக்கேன். அதுக்கு, இதுபோன்ற எனது தனித்திறமைகளுக்கு கிடைக்கும் அங்கீகாரங்கள் உரமாக அமையும். எங்க ஊர்ல இருந்து கரூருக்குச் சென்று வருவதையே சாதனையாக நினைக்கும் மக்கள் நிறைந்த பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்தவள் நான். ஒருநாள் என் பெயரை இந்த நாடே உச்சரிக்கும் நிலை வரும். அப்போது, எனது `பின்'தங்கிய ஊரும் `முன்னே' தெரியும்" என்றார்.

கனகவள்ளியைப் பாராட்டும் ஆசிரியர்கள்
கனகவள்ளியைப் பாராட்டும் ஆசிரியர்கள்
பொம்மலாட்ட வீடியோ மூலம் மாணவிகளுக்கு பாலியல் விழிப்புணர்வு; அரசுப்பள்ளி ஆசிரியையின் புது முயற்சி!

சமீபத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்துக்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளி காணியாளம்பட்டி குறுவள மையத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கிடையேயான 9 - 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடந்த கட்டுரைப் போட்டியில், கனகவள்ளி முதல் பரிசு பெற்றார். அவருக்கு 30,000 மதிப்புள்ள டேப்லெட் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

``எல்லாரும் பாராட்டுறாங்க. ஒரு மொபைல்கூட என்கிட்ட இல்ல. இன்னைக்கு டேப் கிடைச்சிருக்கு. முயற்சி திருவினையாக்கும் என்ற என் நம்பிக்கை இன்னும் உறுதிப்பட்டிருக்கு'' என்கிறார் கனகவள்ளி உற்சாகத்துடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு