Published:Updated:

`எங்க ஊர் போர்டை காணோம்!' - உயர் நீதிமன்றம் வரையில் சென்ற 'பெயர்ப்பலகை' பஞ்சாயத்து

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காணாமல்போன அ.உடையாபட்டி பெயர்ப்பலகை
காணாமல்போன அ.உடையாபட்டி பெயர்ப்பலகை

இந்த கிராமத்தில் பெயர்pபலகை கடந்த ஆண்டு திடீரென காணாமல் போனதாம். இது குறித்து, அ.உடையாபட்டி கிராம மக்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'எங்க துறை சார்பில் உங்க ஊர் பெயர்ப்பலகையை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளவில்லை' என தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது.

நடிகர் வடிவேல் ஒரு படத்தில், 'என்னோட கிணற்றைக் காணோம் சார்' என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, காவலர்களை ஜெர்க் ஆக வைப்பார். அதேபோல், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராம மக்கள், 'நெடுஞ்சாலையில் இருந்த எங்க ஊர் பெயர்ப்பலகையைக் காணோம். 2 கிலோமீட்டர் தள்ளியுள்ள வேற ஊரின் பலகையை நட்டுவெச்சுருக்காங்க' என்று ஆட்சியரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

மனு கொடுத்தவர்கள்
மனு கொடுத்தவர்கள்
முதல் நாள் மனு, 24 மணி நேரத்தில் வீடு; 3 பிள்ளைகளோடு தவித்த தாய்க்கு உதவிய அமைச்சர்!

கரூர் மாவட்டம், குளித்தலையிலிருந்து தோகைமலைக்குச் செல்லும் வழியில் இருக்கிறது அ.உடையாபட்டி. கரூர் மாவட்டத்தையும், திருச்சி மாவட்டத்தையும் இணைக்கும் பகுதியாக உள்ள தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில், கரூர் நெடுஞ்சாலை கோட்ட கட்டுப்பாட்டிலுள்ள, கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலை உட்கோட்டத்தில் வரும் மாநில நெடுஞ்சாலையான முசிறி டு குளித்தலை வழியாக, மாணப்பாறை செல்லும் பிரதான சாலையாக இருக்கிறது. அந்தச் சாலையில்தான் அ.உடையாபட்டி கிராமமும் இருக்கிறது. அந்த கிராமப் பகுதியில், நெடுஞ்சாலையையொட்டி அ.உடையாபட்டி என்ற பெயர்ப்பலகை பல ஆண்டுகளாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த கிராமத்தில் பெயர்ப்பலகை கடந்த ஆண்டு திடீரென காணாமல் போனதாம். இதுகுறித்து, அ.உடையாபட்டி கிராம மக்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'எங்க துறை சார்பில் உங்க ஊர் பெயர்ப்பலகையை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளவில்லை' என தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது.

மேற்கொண்டு நடந்தவை பற்றி, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரிடம் இது குறித்து மனு கொடுத்த அந்த கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி நம்மிடம், ``நெடுஞ்சாலைத்துறையைத் தொடர்ந்து, குளித்தலை வட்டாட்சியர் கலியமூர்த்தி, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆகியோருக்கு மனு அளித்தோம். அதனால், மீண்டும் அந்த இடத்தில் பெயர்ப்பலகை நிறுவுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால், அ.உடையாபட்டி என்ற எங்க கிராமத்தின் பெயர்ப்பலகைக்கு பதிலாக, கழுகூர் என்ற பெயர்ப்பலகை அமைத்துவிட்டனர். இதனால், 'போக்குவரத்து தொடங்கிய காலத்திலிருந்தே 100 ஆண்டுகளுக்கு மேலாக நெடுஞ்சாலைத்துறையில் இருந்த எங்க கிராம பெயர்ப்பலகையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும்' என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தோம்.

பழனிசாமி
பழனிசாமி

அந்த வழக்கில், கடந்த ஜூன் மாதம் 3-ம் தேதி நீதிமன்றம், கழுகூர் பெயர்ப்பலகை மாற்றி அமைப்பது சம்பந்தமாக முடிவெடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், கடந்த மூன்று மாத காலமாக அந்த இடத்தில் எங்கள் ஊர் பெயர்ப்பலகையை நிறுவவில்லை.

அ.உடையபட்டியிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கழுகூர் கிராமத்தின் பெயர்ப்பலகை உடையாபட்டியில் அமைக்கப்பட்டதால், ஊர் விலாசம் மாறியிருக்கிறது. இது சம்பந்தமாக நீதிமன்றத்துக்குச் சென்று ஆணை பெற்றும் அதிகாரிகள் மெத்தனமாகச் செயல்படுகின்றனர். அதனால், மறுபடியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறோம். அவர் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், விரைவில் பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்" என்றார் ஆக்ரோஷமாக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு