Published:Updated:

`உயிர் பயத்தை வெறுத்து, குடிநீருக்காக கூட்டம்!' - தண்ணீர் பஞ்சத்தால் அவதியுறும் கரூர் மக்கள்

குடிநீருக்காக நிற்கும் மக்கள்
குடிநீருக்காக நிற்கும் மக்கள் ( நா.ராஜமுருகன் )

இப்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட, தங்கள் ஊர் வழியாக போகும் கூட்டுக்குடிநீர் திட்டக் குழாயில் கசியும் நீரைப் பிடிப்பதற்காக, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் கூடியது, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடும்கோடை நிலவுவதால், தினமும் தங்கள் ஊர் வழியாக செல்லும் கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் கசியும் குடிநீரை குடங்களில் நிரப்புவதற்காக, நூற்றுக்கணக்கானவர்கள் எந்தவித பாதுகாப்பும் மேற்கொள்ளாமல், சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் கூட்டமாக கூடுவது, கரூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

குடிநீருக்காக நிற்கும் மக்கள்
குடிநீருக்காக நிற்கும் மக்கள்
நா.ராஜமுருகன்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இப்போது உலகம் முழுவதும் பரவி, மக்களிடையே அச்சத்தை விதைத்திருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸை முற்றிலும் ஒழிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று, சமூக விலகல் என்கிற ஊரடங்கு உத்தரவு. மக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்க மட்டும் வெளியில் வர அனுமதிக்கப்படுகின்றனர்.

`அமைச்சருக்கு ஊரடங்கு உத்தரவு விதிவிலக்கா?!' - வெடிக்கும் சமூக ஆர்வலர்கள்!

ஆனால், அதையும் மீறி பலர் காரணமே இல்லாமல் வெளியில் வருகிறார்கள். அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குடிநீரை குடங்களில் சேகரிப்பதற்காக நூற்றுக்கணக்கானவர்கள் கைகளில் குடங்களோடு கூடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. `கொரோனா வைரஸ் பாதிப்பைவிட கொடூரமானது நாங்க குடிநீருக்காக படும் பாடு!' என்று அந்தக் கிராம மக்கள் கண்ணீரோடு தெரிவிக்கிறார்கள்.

குடிநீருக்காக நிற்கும் மக்கள்
குடிநீருக்காக நிற்கும் மக்கள்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கிறது, முத்துரங்கம்பட்டி. கோடைக்காலம் வர ஆரம்பித்துவிட்டாலே, இந்தக் கிராமத்தில் குடிநீர் பிரச்னை தலைதூக்கத் தொடங்கிவிடுமாம். கிராமத்தில் போடப்பட்டுள்ள பொது ஆழ்துணைக் கிணற்றிலிருந்து தண்ணீர் வராது என்கிறார்கள். அப்படி இப்போது குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட, தங்கள் ஊர் வழியாகப் போகும் கூட்டுக்குடிநீர் திட்டக் குழாயில் கசியும் நீரை பிடிப்பதற்காக, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் கூடியது, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து, கிருஷ்ணராயபுரம் தொகுதியின் முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ காமராஜிடம் பேசினோம். ``கரூர் மாவட்டமே வறட்சியான மாவட்டம். கோடைக்காலத்தில் 60 சதவிகித கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். கரூர் மாவட்டத்தின் வழியாக பாயும் காவிரியில் இருந்து பல மாவட்டங்களுக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுது. ஆனால், இந்த மாவட்டத்தில் பல கிராம மக்கள் குடிநீருக்காக அல்லாடும் நிலைமையே உள்ளது. அந்த வகையில்தான், கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட முத்துரங்கம்பட்டியில் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுது. அந்தக் கிராமம் வழியாக, காவிரியில் இருந்து கடவூர் வரை கூட்டிக்குடிநீர் திட்டம் மூலம் பைப்பில் குடிநீர் கொண்டு செல்லப்படுது.

காமராஜ் (முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ)
காமராஜ் (முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ)
நா.ராஜமுருகன்

ஆனால், இந்தக் கிராம மக்களுக்கு அதில் இருந்து போதிய குடிநீர் கிடைக்க வழி பண்ணலை. `எங்கள் கிராமத்துக்குத் தேவையான குடிநீர் கிடைக்க ஏற்பாடு பண்ணுங்க'னு அந்தக் கிராம மக்கள் ஆளுங்கட்சி மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகம், வாட்டர் போர்டுனு பலருக்கும் மனு அனுப்பி ஓய்ஞ்சுட்டாங்க. கொரோனா பயத்தில் வீட்டுக்குள் இருக்க நினைத்தாலும், தாகம் ஏற்படும்போது அவர்கள் தண்ணீர் குடிக்க வேண்டுமல்லவா... அதனால்தான், கொரோனா வைரஸ் பற்றிய உயிர் பயத்தை வெறுத்து, குடிநீருக்காக வீட்டைவிட்டு வெளியே வந்து, கூட்டமாக கூடியிருக்கிறார்கள்.

அப்படி குடிநீருக்காகப் பலரும் கூடியதைப் பற்றிய புகைப்படங்களை எனக்குச் சிலர் அனுப்பினார்கள். அதைப் பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியா போயிட்டு. உடனே, அந்த ஊர் மக்களிடம் பேசினேன். `எங்களுக்கு குடிக்கத் தண்ணீரே இல்லை. அப்புறம் நாங்க எப்படி வீட்டுக்குள்ள முடங்கிக் கிடக்க முடியும்.. கொரோனா வைரஸ் தரும் பாதிப்பைவிட கொடூரமானது, நாங்க குடிநீருக்காக படும் பாடு'னு சொன்னதும், இந்த அரசை நினைத்து கவலையானது. இப்போதுதான் கரூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னை தலைக்காட்ட ஆரம்பித்திருக்கிறது. இந்தப் பிரச்னை இன்னும் ஒரு வாரத்தில் அதிகமாகும். அப்போது மாவட்ட நிர்வாகம் எப்படி மக்களுக்கு குடிநீரை வழங்கப் போகிறது?

குடிநீருக்காக நிற்கும் மக்கள்
குடிநீருக்காக நிற்கும் மக்கள்
நா.ராஜமுருகன்

அந்த வகையில், முத்துரங்கம்பட்டி கிராம மக்களை இந்த விஷயத்தில் குற்றம் சொல்லவே முடியாது. அவர்களுக்கு குடிநீர் கிடைக்க வழி செய்யாத இந்த அரசும், மாவட்ட நிர்வாகமும்தான், அவர்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்காததற்கு காரணம். கரூர் மாவட்ட குடிநீர் பிரச்னைக்கு உடனடியாக மாற்று ஏற்பாடு பண்ணலன்னா, ஊருக்கு ஊர் இப்படி மக்கள் கொத்துக் கொத்தாக அலையும் அபாயம் ஏற்படும். அதன்பிறகு, நடக்கும் விபரீதத்தை யாராலும் தடுக்க முடியாத நிலை ஏற்படும்" என்று எச்சரிக்கை மணி அடித்து முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு