Published:Updated:

`ஊருக்குள் வரவும் முடியாது; போகவும் முடியாது!' -சிசிடிவி கேமராவால் கண்காணிக்கும் ஊராட்சித் தலைவர்

இனங்கனூரில் .சி.டி.வி கேமராக்கள்
இனங்கனூரில் .சி.டி.வி கேமராக்கள்

டெக்னாலஜி மூலம் ஊரடங்கு உத்தரவை தங்கள் கிராம மக்கள் சரியாக கடைப்பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார் இனங்கனூர் ஊராட்சி மன்றத் தலைவர் ரகு.

தனது கிராமத்துக்குள் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் வரவோ, தனது கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காரணமின்றி வெளியே செல்வதோ தடுக்கப்பட வேண்டும் என்பதற்காக, ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர், ஊர் முகப்பு மற்றும் மையப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் அமைத்து கண்காணிப்பது, மற்ற கிராம மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இனங்கனூர் ஊராட்சி மன்ற அலுவலகம்
இனங்கனூர் ஊராட்சி மன்ற அலுவலகம்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் இருக்கிறது, இனங்கனூர். இந்தக் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மிகவும் பின்தங்கிய பகுதியான இந்தக் கிராமத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் ஏழ்மை நிலைமையில் உள்ளவர்கள். இந்தக் கிராமத்தை உள்ளடக்கிய பஞ்சாயத்துக்கு தலைவராக இருப்பவர், ரகு. தனது கிராம மக்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருக்கிறார்.

`திருப்பூரிலிருந்து நடந்தே கரூர் வந்த தொழிலாளி!' -250 கி.மீ தூரத்தைக் கடக்க உதவிய செந்தில் பாலாஜி

அதற்காக, ஏழ்மை நிலைமையில் உள்ள ஊர் மக்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறி உள்ளிட்டப் பொருள்களை வழங்கினார். அதோடு, தேவையில்லாமல் மற்ற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் கிராமத்துக்கு வருவதையும் காரணமேயின்றி தங்கள் கிராம மக்கள் இனங்கனூரை விட்டு வெளியே செல்வதையும் தடுக்க நினைத்தார்.

சிசிடிவி காட்சிகள் மூலம் கண்காணிப்பு
சிசிடிவி காட்சிகள் மூலம் கண்காணிப்பு

தமிழகத்தில் பல கிராமங்களில் ஊர் முகப்பில் செக்போஸ்ட் போல அமைத்து, தடுத்து வருவதை அறிந்த ரகு, அதுபோல் தங்கள் கிராமத்திலும் செய்தார். அதோடு மட்டுமல்லாது, ஊர் முகப்பிலும் ஊர் மையப் பகுதியிலும் கம்புகளை ஊன்றி, அதன் மீது சிசிடிவி கேமராக்களைப் பொருத்தினார். அதன் காட்சிகளை இனங்கனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமர்ந்து கவனிக்க சில இளைஞர்களையும் நியமித்திருக்கிறார்.

அவர்கள் மூலம் மக்கள் தேவையில்லாமல் வெளியே நடமாடுவதையும், வெளியூர் மக்கள் தங்கள் கிராமத்துக்கு நுழைவதையும் கவனித்து, தடுத்து வருகிறார். டெக்னாலஜி மூலம் ஊரடங்கு உத்தரவை தங்கள் கிராம மக்கள் சரியாக கடைப்பிடிக்க நடவடிக்கை எடுத்த, இனங்கனூர் ஊராட்சி மன்றத் தலைவர் ரகுவின் முயற்சியை அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாராட்டி வருகிறார்கள்.

`திருப்பூரிலிருந்து நடந்தே கரூர் வந்த தொழிலாளி!' -250 கி.மீ தூரத்தைக் கடக்க உதவிய செந்தில் பாலாஜி

இனங்கனூர் ஊராட்சி மன்றத் தலைவர் ரகுவிடம் பேசினோம்.

``எங்கள் பஞ்சாயத்தில் வசிக்கும் மக்கள் மிகவும் கஷ்டப்படும் சூழலில் உள்ளவர்கள். விவசாயக் கூலி வேலை பார்ப்பது, கால்நடை வளர்ப்பது என வாழ்பவர்கள். இந்த நிலையில்தான், கொரோனா வைரஸ் வந்து அவர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்துவிட்டது. `ஊரடங்கு உத்தரவுதான் கொரோனா பாதிப்பிலிருந்து தப்பித்துக்கொள்ளும் ஒரே வழி' என்பதால், எங்க கிராம மக்களை ஆரம்பத்திலிருந்து ஊரடங்கு உத்தரவை 100 சதவிகிதம் உறுதியாக கடைப்பிடிக்க வைத்தோம்.

ஆள் நடமாட்டம் இல்லாத இனங்கனூர்
ஆள் நடமாட்டம் இல்லாத இனங்கனூர்

அவர்களுக்குத் தேவையான உணவு, முகக்கவசம், சானிடைஸர் ஆகியவற்றை ஏற்பாடு செய்தேன். அதையும் மீறி சில இளைஞர்கள் கிராமத்தை விட்டு வெளியே போவதும், தேவையில்லாமல் வெளியூர்களைச் சேர்ந்த பலர் இனங்கனூருக்கு வருவதும் நடந்தது. அதை தடுக்கத்தான் ஊர் முகப்பில் செக்போஸ்ட் மற்றும் சிசிடிவி கேமராக்களை அமைத்தோம்.

இந்தப் பகுதியே மிகவும் வறட்சியான பகுதி. வெயில் அதிகம் அடிக்கும் கிராமம். அதனால், பகல் பொழுதுகளில் செக்போஸ்ட் அருகே இளைஞர்கள் அமர்ந்து கண்காணிக்க முடியாது. அதனால், சிசிடிவி அமைத்து கண்காணித்தோம். அதன்மூலம் ஊருக்குள் நுழைபவர்களைக் கண்காணித்து, அவர்களைக் கைகள் கழுவ வைத்து, ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு அழைத்து வருவோம். அவர்கள் எங்கள் கிராமத்துக்கு வந்த காரணத்தைக் கேட்டு தெரிந்துகொள்வோம். அத்தியாவசிய விஷயம் என்றால், தக்க பாதுகாப்போடு அவர்களை ஊருக்குள் அனுமதிப்போம்.

சிசிடிவி காட்சிகள் மூலம் கண்காணிப்பு
சிசிடிவி காட்சிகள் மூலம் கண்காணிப்பு

தேவையில்லாமல் வந்திருந்தால், அறிவுரை கூறி அவர்களை ஊரைவிட்டு வெளியே அனுப்பிவிடுவோம். இதேபோல்தான், எங்கள் கிராமத்தைச் சேர்ந்த நபர்கள் யாரும் காரணமேயின்றி ஊரை விட்டு வெளியே போனாலும், அவர்களையும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கண்காணித்து, அவர்களையும் எச்சரித்து வருகிறோம். இதனால், எங்கள் ஊரில் இப்போது 100 சதவிகிதம் ஊரடங்கு உறுதியாக அமலில் உள்ளது. கொரோனா வைரஸ் முற்றிலும் ஒழியும் வரை இந்த நடைமுறை எங்கள் ஊராட்சியில் தொடரும்" என்றார் உறுதியாக!

அடுத்த கட்டுரைக்கு