Published:Updated:

₹30,000 பணத்தை தவறவிட்ட பெண்; தேடிக் கண்டுபிடித்து திருப்பியளித்த பெண் போலீஸ்!

பர்ஸை ஒப்படைக்கும் விவேக ஸ்ரீ
பர்ஸை ஒப்படைக்கும் விவேக ஸ்ரீ

அந்த பர்ஸ் கிடந்த இடத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தும், அதுபற்றி யாருக்கும் எந்தத் தகவலும் தெரியவில்லை.

புதிதாகக் குடியேற இருக்கும் வீட்டு உரிமையாளருக்கு அட்வான்ஸ் வழங்குவதற்காக பர்ஸில் கொண்டு சென்ற ரூ.30,000 பணத்தைப் பெண் ஒருவர் தவறவிட்டார். அதைக் கண்ட பெண் காவலர் ஒருவர், அந்த பர்ஸை எடுத்து அந்தப் பெண்ணிடம் வழங்கிய சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

பர்ஸை ஒப்படைக்கும் விவேக ஸ்ரீ
பர்ஸை ஒப்படைக்கும் விவேக ஸ்ரீ

கரூர் மாவட்டம், புலியூரைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவர், கணவரை பிரிந்து தனியே வாழ்ந்து வருகிறார். இவருக்கு பெண், ஆண் என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர். வறுமை நிலைமையில் உள்ள இவர், தன் குழந்தைகளோடு, புலியூரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், கரூரில் உள்ள வையாபுரி நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு பேசி, அங்கு தங்க முடிவெடுத்துள்ளார். அதற்கு, அந்த வீட்டின் உரிமையாளர் அட்வான்ஸாக ரூ.30,000 கேட்டிருக்கிறார். அந்த தொகையை சிரமப்பட்டு தயார் செய்த புவனேஸ்வரி, அதை வீட்டு முதலாளியிடம் கொடுப்பதற்காக, கடந்த திங்கள் மாலை 5:30 மணி அளவில், கருர் வையாபுரி நகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

ரூ.30,000 பணம் மற்றும் டெபிட் கார்டு இருந்த அந்த பர்ஸ் எங்கேயோ தவறிவிழுந்துவிட்டது. வையாபுரி நகர் சென்றபிறகுதான், புவனேஸ்வரிக்கு அது தெரியவந்திருக்கிறது. இதனால் பதற்றமான புவனேஸ்வரி, அங்கேயே அழுதிருக்கிறார். வீட்டு ஓனர் அவரை தேற்றிய பிறகு, ``நாளைக்கு நகையை அடகுவெச்சு பணத்தை கொண்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குச் சென்றுள்ளார். வீட்டுக்குச் சென்ற பிறகும், அவருக்குப் பதற்றம் குறையவில்லை.

இதற்கிடையில், கரூர் நகரில் கோவை சாலையில் நடு ரோட்டில் மணி பர்ஸ் ஒன்று கிடந்துள்ளது. இதனை, அவ்வழியே வந்த ஆயுதப்படை பெண் காவலர் விவேக ஸ்ரீ என்பவர் கண்டெடுத்தார். அந்த பர்ஸை திறந்து பார்த்தபோது, அதில் ரூ.30,000 பணம் மற்றும் டெபிட் கார்டு இருந்துள்ளது. ஆனால், அந்த பர்ஸூக்குரியவரின் முகவரி பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. இந்தத் தகவலை விவேக ஸ்ரீ, கரூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயனிடம் தெரிவித்தார். இதனால், அந்தப் பெண் காவலரின் கடமை உணர்ச்சியைப் பாராட்டிய கார்த்திகேயன், அந்த பர்ஸின் சொந்தக்காரரை கண்டுபிடிக்கும் காரியத்தில் இறங்கினார். அந்த பர்ஸ் கிடந்த இடத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தும், அதுபற்றி யாருக்கும் எந்தத் தகவலும் தெரியவில்லை.

பர்ஸை ஒப்படைக்கும் விவேக ஸ்ரீ
பர்ஸை ஒப்படைக்கும் விவேக ஸ்ரீ

நடந்தவற்றைப் பற்றி கார்த்திகேயனிடம் கேட்டோம்.

``என்ன அவசரத் தேவைக்காக இந்தப் பணத்தை கொண்டு போனார்களோ, இந்தப் பணத்தைத் திரட்ட எவ்வளவு பாடுபட்டிருப்பார்களோனு நினைச்சுப் பார்த்ததும், எங்களுக்கும் பதட்டமாயிட்டு. உடனே இந்த பர்ஸூக்கு உரியவரை கண்டுப்பிடிக்கணும்னு களத்தில் இறங்கினோம். அந்த பர்ஸில் இருந்த டெபிட் கார்டுக்குரிய வங்கியை அணுகி, சம்பந்தப்பட்ட கஸ்டமரின் தொடர்பு எண்ணைக் கேட்டோம். ஆனா அதுக்கு அவங்க, `அப்படியெல்லாம் தரமுடியாது. எங்ககிட்ட கொடுத்துட்டுப் போங்க.

டெபிட் கார்டை பிளாக் பண்ண முயற்சிக்கிறோம்'னாங்க. ஆனா, பர்ஸில் பணம் இருந்த விஷயத்தைச் சொல்லவும், அதன் பிறகே தொடர்பு எண்ணை கொடுத்தாங்க. ஆனா, அந்த நம்பர்ல கால் போகவே இல்லை. ஒரு வழியா அந்த நம்பர் மூலமா, இன்று காலை 10 மணிக்குத்தான் அவர்கிட்ட பேச முடிந்தது.

பர்ஸை ஒப்படைக்கும் விவேக ஸ்ரீ
பர்ஸை ஒப்படைக்கும் விவேக ஸ்ரீ

`புவனேஸ்வரி, புலியூர்'னு தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டார். உடனே, விவேக ஸ்ரீயும், நானும் அந்தப் பெண்ணை பார்த்து, அந்த பர்ஸை ஒப்படைத்தோம். அதற்குள், நகையை அடகுவெச்சு ரூ.30,000-ஐ புது வீட்டு ஓனர்கிட்ட கொடுத்திருக்காங்க. இந்நிலையில், தொலைந்த பணம் கிடைத்த ஆனந்த அதிர்ச்சியில் அவங்களுக்கு பேச்சே வரல. கைகள் நடுங்கியபடி நின்னாங்க. அதனால, அவங்களோட மகள்தான் பேசினாங்க. மிகவும் கஷ்டப்பட்டுதான் அந்த பணத்தை திரட்டியதாவும், அந்தப் பணம் கிடைக்காமல் போயிருந்தா மிகவும் சிக்கலாகியிருக்கும்னும் சொன்னாங்க. பணத்தை கொண்டு வந்து கொடுத்தற்கு, விவேக ஸ்ரீக்கும், கரூர் காவல்துறைக்கும் நன்றி சொன்னாங்க. இந்தக் கொடுமையான கொரோனா காலத்தில், எங்களால ஒருவருக்கு இப்படி உதவ முடிந்ததே என்ற உற்சாகம் ஏற்பட்டிருக்கு" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு