தலைக்கேறிய போதையில், 75 அடி கிணற்றில் இளைஞர் ஒருவர் விழுந்து இறந்த சம்பவம், உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கரூர் மாவட்டம், தோகைமலை அருகிலுள்ள போத்துராவுத்தன்பட்டியைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவர் மகன் மகேஷ்வரன் (வயது 32). இவர், கரூரிலுள்ள தனியார் டெக்ஸ்டைலில் டெய்லராக வேலை செய்துவருகிறார். இவருக்குத் திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இவருக்கு அளவுக்கு அதிகமாக மது குடிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. இந்தநிலையில், கடந்த ஏப்ரல் 15-ம் தேதி இரவு சுமார் 7 மணியளவில், தனது இருசக்கர வாகனத்தை போத்துராவுத்தன்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் அருகேயுள்ள 75 அடி ஆழமுள்ள கிணற்றின் அருகில் நிறுத்திவைத்துவிட்டு, அங்கேயே அமர்ந்து மது அருந்தியிருக்கிறார்.
அதோடு, கிணற்றின் ஓரமாக ஒரு காலையும், கிணற்றின் உள்பக்கமாக மற்றொரு காலையும் வைத்து அமர்ந்தபடி செல்போனில் பேசிக்கொண்டிருப்பதை, ஊர்க்காரர்கள் பார்த்து கண்டித்திருக்கிறார்கள். இருப்பினும், அவர்களிடம் மது போதையில் தகராறு செய்திருக்கிறார். ஊர்மக்கள் சொல்லியும் கேட்காமல் அதேநிலையில் அமர்ந்துபடி இருந்திருக்கிறார். இதனால், ஊர் மக்கள், `நமக்கேன் வம்பு' என்று அவரை கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டனர்.

இந்தநிலையில், இன்று காலை 6 மணியளவில் போத்துராவுத்தன்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் அருகில் 75 அடி உள்ள பொதுக்கிணற்றில் 15 அடி தண்ணீரில் மகேஷ்வரனின் உடல் மிதக்க, அதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ந்துபோயிருக்கிறார்கள். உடனடியாக, தோகைமலை காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீஸார் உதவியுடன், முசிறி தீயணைப்புத்துறையினர், கிணற்றில் மிதந்த மகேஷ்வரனின் உடலை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து வழக்கைப் பதிவு செய்ததோடு, மகேஷ்வரன் மதுபோதையில் கிணற்றுக்குள் விழுந்தாரா அல்லது குடும்பத் தகராறு காரணமாகத் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில், தோகைமலை காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.