`காலையில் 800 டிபன்; மதியம் 1,000 சாப்பாடு!' - ஊரடங்கில் ஆதரவற்றவர்களை நெகிழவைத்த கரூர் இளைஞர்கள்

இட்லி, லெமன் சாதம், தக்காளி சாதம், தண்ணீர் பாட்டில்னு 800 சாப்பாடு பார்சல்களை டூவீலர்களில் வைத்து, கரூர் பேருந்து நிலையம், ரயில்வே நிலையம், அரசு மருத்துவமனைன்னு மூணு இடங்களில் கொண்டு போய் கொடுத்தோம். அங்குள்ளவர்கள் சாப்பாடின்றி தவித்துப்போனதை பார்த்ததும் பரிதாபமாகப் போயிட்டு.
இன்று சுய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கரூர் மாவட்டத்தில் சாப்பாட்டுகுச் சிரமப்பட்ட ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கி, அவர்களை நெகிழ வைத்திருக்கிறார்கள், தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள்.

சீனாவில் உருவானதாகச் சொல்லப்படும் கொரோனா வைரஸ், இன்று உலக மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. நமது நாட்டிலும் அது பரவ, அதை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதோடு, அதை எதிர்க்கும் பொருட்டு பிரதமர் மோடி, இன்று ஒருநாள் சுய ஊரடங்குக்கு உத்தரவிட்டுள்ளார். இன்று இந்தியா முழுக்க அனைத்து போக்குவரத்து வாகனங்களும் இயக்கப்படாதது ஒருபக்கம் என்றால், ஹோட்டல்களும், உணவு பொருள்கள் சார்ந்த பொருள்கள் விற்பனை செய்யப்படும் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
இதனால், மக்கள் இன்று தேவையான உணவுப் பொருள்களை நேற்றே வாங்கி வீட்டில் வைத்து, இன்று பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், வீடின்றி, ஆதரவின்றி தெருவோரங்களிலும் பிளாட்பாரங்களிலும், ரயில்வே நிலையம், பேருந்து நிலையங்களில் தங்கியிருக்கும் முதியோர்கள், ஆதரவற்றவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மனிதர்கள் பலர், சாப்பாடு கிடைக்காமல் அல்லாடிப்போகிறார்கள்.

அப்படி கரூர் நகரில் சாப்பாடு இன்றி தவித்த 800 பேர்களுக்கு, மூன்று தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் காலை டிபன் மற்றும் சாப்பாடு கொடுத்து, அவர்களை நெகிழ வைத்திருக்கிறார்கள். அதோடு, அவர்கள் சாப்பாடின்றி தவிப்பதைப் பார்த்த அந்த இளைஞர்கள் மதியம் மற்றும் இரவுக்கும் சாப்பாடு தயார் செய்து 1,000 பேர்களுக்குக் கொடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். இணைந்த கைகள், ஒன்ஸ் ஸ்டெப் அறக்கட்டளை, இளைய தலைமுறை ஆகிய மூன்று தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள்தான், கரூர் நகரில் உணவின்றி தவித்த மனிதர்களுக்கு உணவு கொடுத்து, உதவியிருக்கிறார்கள்.
இதுகுறித்து, அந்த இளைஞர்களிடம் பேசினோம். "கொரோனா என்ற கொடிய வைரஸ் அரக்கனை இந்தியாவே சேர்ந்து ஒற்றுமையுடன் எதிர்க்கவே, மத்திய, மாநில அரசுகள் இந்த சுய ஊரடங்கு உத்தரவுக்கு உத்தரவிட்டன. அதை எதிர்க்க மக்களும் உறுதியாக ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடித்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் வீடுகளில் இருப்பதால், அவர்களுக்குத் தேவையான உணவை தயாரித்து, சாப்பிடும் சூழல் இருக்கிறது. ஆனால், வீடின்றியும் ஆதரவின்றியும் சாலையோரங்களில், பேருந்து நிலையங்களில் வசிக்கும் மக்கள் உணவின்றி தவித்துப் போவார்களே என்று நினைத்தோம். அவர்களுக்கு காலையில் மட்டும் உணவு கொடுக்கத்தான் முதலில் முடிவு பண்ணினோம். அதன்படி, இட்லி, லெமன் சாதம், தக்காளி சாதம், தண்ணீர் பாட்டில்னு 800 சாப்பாடு பார்சல்களை டூவீலர்களில் வைத்து, கரூர் பேருந்து நிலையம், ரயில்வே நிலையம், அரசு மருத்துவமனைன்னு மூணு இடங்களில் கொண்டுப் போய் கொடுத்தோம்.

ஆனால், அங்குள்ளவர்கள் சாப்பாடின்றி தவித்துப் போனதை பார்த்ததும் பரிதாபமாகப் போயிட்டு. குறிப்பாக, அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளே சாப்பாடின்றி அவதிப்பட்டார்கள். அருகில் உள்ள அம்மா உணவகமும் மூடப்பட்டுள்ளதால், அவர்களுக்கு உணவு கிடைக்கவில்லை. மாற்றுத்திறனாளிகள் பலர் சாப்பாடின்றி, கண்ணீரே விட்டார்கள். அவர்களுக்கும் உணவு கொடுத்தோம். சாப்பாடின்றி பலர் அவதியுறுவதை நேரில் பார்த்த நாங்க காலையில் மட்டுமன்றி, மதியத்துக்கும் இரவுக்கும் அவர்களுக்கு சாப்பாடு வழங்க வேண்டும் எனத் திடீர்னு முடிவு பண்ணினோம். 1,000 பேர்களுக்கு மதியம் மற்றும் இரவு வேளைக்கும் சேர்த்து உணவு கொடுக்க, இப்போது தக்காளி சாதம் தயார் பண்ணிக்கிட்டு இருக்கோம். 2 மணியிலிருந்து ஆதரவற்றவர்களுக்கு உணவு கொடுக்கத் தொடங்குவோம்" என்றார்கள்.