`கையில கட்டிவிட்டோம்; டவுன்லோடு பண்ணிட்டாங்க!' - காணும் பொங்கலில் மக்களைக் கவர்ந்த இன்ஸ்பெக்டர்

சென்னை மெரினாவில் காணும் பொங்கலையொட்டி குவிந்த மக்களிடையே `காவலன் செயலி' குறித்து திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சீத்தாராம் தலைமையிலான போலீஸ் டீம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தமிழக காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. ஒவ்வோர் ஆண்டும் காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினாவுக்கு லட்சக்கணக்கானோர் வருவதுண்டு. அந்த மக்களிடையே `காவலன் செயலி' குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் (குற்றப்பிரிவு) சீத்தாராம் முடிவு செய்தார்.
இதற்காகத் திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குமரன், சாமுவேல், காவலர்கள் வெங்கடேசன், ஆனந்தன், பிருந்தா, பரணி, ஷிபா கொண்ட டீம் மெரினாவுக்கு வந்த மக்களிடையே காவலன் செயலி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீஸார் கூறுகையில், ``சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் காவலன் செயலி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்திவருகிறோம். காவலன் செயலியை மக்கள் மனதில் பதிய வைப்பதற்காகக் காணும் பொங்கலையொட்டி மெரினாவில் ராட்சத பலூனை பறக்க விட்டோம். மெரினா கடற்கரைக்கு வருபவர்களின் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போக வாய்ப்புள்ளது. அதற்காக குழந்தைகளின் கைகளில் பெற்றோரின் செல்போன் நம்பரை எழுதிய பேண்டை கட்டிவிட்டோம். அதில், `டவுன்லோடு காவலன் செயலி, திருவல்லிக்கேணி காவல் நிலையம்' என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டிருந்தது.
குழந்தைகளின் கைகளில் அந்த பேண்டை ஒட்டிவிடும்போது, `நீங்கள் பெற்றோரைவிட்டு பிரிந்துவிட்டால் உயரத்தில் பறக்கும் ராட்சத பலூன் அருகே வந்துவிடுங்கள். அங்கு பெற்றோர் உங்களுக்காகக் காத்திருப்பார்கள்' என்று கூறினோம். அதன்படி குடும்பத்தைவிட்டுப் பிரிந்த ஏராளமானவர்கள் காவலன் செயலி ராட்சத பலூன் பறந்ததை வைத்து மீண்டும் சேர்ந்தனர். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல குழந்தைகளைக் கண்டுபிடிக்கவும் காவலன் செயலியை மக்கள் மனதில் பதிய வைக்கவும் ராட்சத பலூன் பயனுள்ளதாக இருந்தது.

மெரினாவில் காவலன் செயலி ராட்சத பலூன் பறக்க விடுவதற்கு முன், ஏராளமானவர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அந்தப் புகைப்படங்களை முகநூல், ட்விட்டர், இன்ஸ்ட்ராகிராம் ஆகியவற்றில் பதிவு செய்தனர். இதுவும் காவலன் செயலிக்கு ஒரு விளம்பரமாக அமைந்தது. அடுத்து, குழந்தைகளுக்கு அதிகம் பிடிக்கும் 4 விதமான டாய்ஸ்களை வைத்திருந்தோம். அதற்குமுன் வயது பாரபட்சமின்றி அனைவரும் போட்டோ, செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
மெரினாவுக்கு வந்த குழந்தைகளுக்கு காவலன் செயலியை டவுன்லோடு செய்வதை வலியுறுத்திய பலூன்களை இலவசமாக விநியோகித்தோம். அதை அனைவரும் ஆர்வத்தோடு வாங்கிச் சென்றனர். காவலன் செயலி குறித்து தெரிந்துகொள்ளும் வகையில் பூத் அமைத்திருந்தோம். மேலும், காவலர்களும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரும் காவலன் செயலி டவுன்லோடு செய்வது தொடர்பான டீ சர்ட்களை அணிந்திருந்தனர்.
அவர்கள், பொதுமக்களுக்கு காவலன் செயலி டவுன்லோடு செய்வதன் அவசியத்தை வலியுறுத்தினர். மேலும், டவுன்லோடு செய்வதில் உள்ள சிரமங்களுக்கு விளக்கம் அளித்தனர். காணும் பொங்கலுக்கு மெரினாவுக்கு வந்த ஏராளமான குழந்தைகளின் கையில் பேண்ட் கட்டிவிட்டோம். அதைக் கழற்றுவதற்கு முன் பலர், தங்களின் செல்போன்களில் காவலன் செயலியை டவுன்லோடு செய்தனர்.

திருவல்லிக்கேணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேப்பாக்கம் மைதானம் அருகில் அடிக்கடி போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அதில் கலந்து கொள்பவர்களிடமும் காவலன் செயலி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறோம். திரையரங்குகளில் காவலன் செயலி, ஸ்லைடு போடப்பட்டுவருகிறது. பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று மாணவ மாணவிகள் மத்தியில் காவலன் செயலி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறோம்.
காணும் பொங்கலுக்கு மெரினாவுக்கு வந்தவர்களிடமிருந்து காவலன் செயலிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒரு கோடி பேரை காவலன் செயலியை டவுன்லோடு செய்ய வைப்பதுதான் எங்களின் இலக்கு. அந்த இலக்கை நோக்கி பயணித்துவருகிறோம். இந்த இலக்கை அடைய இணை கமிஷனர் சுதாகர், துணை கமிஷனர் தர்மராஜன், உதவி கமிஷனர் சரவணன் உட்பட அனைத்து அதிகாரிகளும் உறுதுணையாக இருந்துவருகின்றனர்" என்றனர்.
மெரினாவில் காவலன் செயலி ராட்சத பலூன் பறக்க விடுவதற்கு முன், ஏராளமானவர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அந்தப் புகைப்படங்களை முகநூல், ட்விட்டர், இன்ஸ்ட்ராகிராம் ஆகியவற்றில் பதிவு செய்தனர். இதுவும் காவலன் செயலிக்கு ஒரு விளம்பரமாக அமைந்தது.போலீஸார்

மெரினா கடற்கரையில் ஆய்வு செய்த பிறகு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறுகையில், ``காணும் பொங்கல் கூட்ட நெரிசலில் சிக்கி மெரினாவில் காணாமல்போன 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்களும் தடுக்கப்பட்டன" என்றார்.
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வாழ்த்துகளை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, காவலன் செயலி ராட்சத பலூனை மெரினாவில் பறக்கவிட்ட போலீஸ் டீமை பாராட்டியுள்ளார்.