Published:Updated:

`வீடுகளுக்கே சென்று குழந்தைகளுக்கு முட்டைகள் வழங்குகிறோம்!' - கவிதா ராமு ஐ.ஏ.எஸ்

கவிதா ராமு ஐ.ஏ.எஸ்
கவிதா ராமு ஐ.ஏ.எஸ்

"ஒலிப்பதிவு செய்த பாடலையும் எனக்கு அனுப்பிவைத்தார். என் வீடு மற்றும் வாசலில்தான் நடனமாடினேன். அதை செல்போனில் பதிவு செய்து அவருக்கு அனுப்பிவைத்தேன்."

`உள்ளே போ’ எனத் தொடங்கும் கொரோனா விழிப்புணர்வுப் பாடலை உருவாக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் தாஜ்நூர். மக்கள் வீட்டுக்குள் தனிமைப்படுத்திக்கொண்டு, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை அந்தப் பாடல் வழியுறுத்துகிறது. தற்போது சமூக வலைதளங்கில் வைரலாகிவரும் இந்தப் பாடலில் நடனமாடியிருக்கிறார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை இயக்குநர் கவிதா ராமு ஐ.ஏ.எஸ். இதுகுறித்து அவரிடம் பேசினோம்.

கவிதா ராமு ஐ.ஏ.எஸ்
கவிதா ராமு ஐ.ஏ.எஸ்

``தேர்தலில் வாக்களிப்பது மற்றும் பொது சுகாதாரம் பற்றி சமூக விழிப்புணர்வுக்காக இதற்கு முன்பே சில வீடியோக்களில் நடனமாடியிருக்கிறேன். அதனால், இந்தப் பாடலுக்கு நான் நடனமாடினால் நன்றாக இருக்கும் எனக் கேட்டார், இசையமைப்பாளர் தாஜ்நூர். ஒலிப்பதிவு செய்த பாடலையும் எனக்கு அனுப்பிவைத்தார். என் வீடு மற்றும் வாசலில்தான் நடனமாடினேன். அதை செல்போனில் பதிவு செய்து அவருக்கு அனுப்பிவைத்தேன்.

மொத்தமே ஒன்றரை மணிநேரம்தான் ஆனது. இந்தப் பாடல் தற்போது பலராலும் பகிரப்படுகிறது; பார்க்கப்படுகிறது. இதன் மூலமும் மக்களுக்கு விழிப்புணர்வு கிடைத்தால் எங்கள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும்” என்பவர், அனுபவமிக்க பரதநாட்டியக் கலைஞரும்கூட. அரசுப் பணிக்கிடையே, தொடர்ந்து நடனத்திலும் கவனம் செலுத்திவருகிறார்.

கவிதா ராமு ஐ.ஏ.எஸ்
கவிதா ராமு ஐ.ஏ.எஸ்

கொரோனா சூழலில் மேற்கொள்ளப்படும் தனது துறை சார்ந்த பணிகள் குறித்துப் பேசுபவர்,``கொரோனா ஊரடங்கால் தமிழகம் முழுவதுமுள்ள அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன. அதேசமயம் அந்த மையத்தால் பயன்பெறும் குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று சத்துமாவு, முட்டை உள்ளிட்டவற்றை வழங்கிவருகிறோம். அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்கியிருக்கிறோம்.

அதன் மூலம் ஆன்லைன் வாயிலாகவே, பெற்றோர்கள் உதவியுடன் குழந்தைகளுக்குத் தேவையான பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளைப் பணியாளர்கள் வழங்குகின்றனர். அங்கன்வாடி மையத்தால் பயன்பெறும் கர்ப்பிணிகளின் உடல்நலத்துக்கும் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்துவருகிறோம். இந்தப் பணிகள் தவிர, மீதமுள்ள பணியாளர்கள் மக்களை நேரடியாகச் சென்று கொரோனா பரவலைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் பணிகளை மேற்கொள்கிறார்கள். இவர்கள் அனைவரும் உரிய பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள்.

கவிதா ராமு ஐ.ஏ.எஸ்
கவிதா ராமு ஐ.ஏ.எஸ்

கொரோனாவைத் தடுக்க அரசு தொடர்ந்து விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறது. அதை மக்கள் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், மக்களின் அச்சத்தைப் போக்க, மீடியா துறையினரின் பங்களிப்பு அதிகம் தேவைப்படுகிறது. கூட்டு முயற்சியால் கொரோனாவின் பாதிப்பிலிருந்து மீள்வோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு