Published:Updated:

``கீழடி, அகரம், மணலூரை சங்ககால வாழ்விடமாக அறிவிக்க வேண்டும்" - எழுத்தாளர் சு.வெங்கடேசன்

Keeladi
Keeladi

கல்வியிலும் நாகரிகத்திலும் தமிழர்கள் சிறந்து விளங்கியுள்ளார்கள். உடைகள், ஆபரணங்கள் அணிவதிலும், விளையாட்டுகளிலும் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். தொழிற்சாலைகள் அமைத்துள்ளனர், வீடுகளில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.'

இந்தியை பொதுமொழியாக்குவோம் என 'ஒற்றை'க் குரல்கள் ஒலித்துவரும் நிலையில், தமிழின் தொன்மைச் சரித்திரத்தை மேலும் சில நூற்றாண்டுகளுக்கு நகர்த்தியிருக்கிறது கீழடி.

தமிழக தொல்லியல்துறை, கீழடியில் நடந்த நான்காம்கட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை உலகம் முழுதுமுள்ள தமிழர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். சமூக ஊடகங்களிலும் கருத்துகளைப் பரிமாறி வருகிறர்கள்.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் மத்திய தொல்லியல்துறை 2014-ல் அகழாய்வை தொடங்கியது. அப்போதே தொன்மைக்கு ஆதாரமான பலவகையான பொருள்கள் கிடைத்தன. ஆனால், மத்திய தொல்லியல்துறை மூன்றாண்டுகளுடன் ஆய்வை முடித்துக்கொண்டது.

Keeladi
Keeladi

இந்த நிலையில், நான்காம் கட்ட ஆய்வில் கண்டெடுக்கப்பட்டவை குறித்த விவரங்களைத் தொல்லியல்துறை ஆணையர் உதயச்சந்திரன் கடந்த 19-ம் தேதி அறிக்கையாக வெளியிட்டார். ''55 லட்ச ரூபாய் செலவில் நடத்தப்பட்ட ஆய்வில் தங்கக் காதணி, சங்கு வளையல்கள், செங்கல் கட்டுமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் 2,600 ஆண்டுகளுக்கு முந்தையவை. 353 செ.மீ ஆழத்தில் கிடைத்த இந்தப் பொருள்கள் கார்பன் டேட்டிங் முறையில் சோதனை செய்ய ஃபுளோரிடாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

"கல்வியிலும் நாகரிகத்திலும் தமிழர்கள் சிறந்து விளங்கியுள்ளார்கள். உடைகள், ஆபரணங்கள் அணிவதிலும் விளையாட்டுகளிலும் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். தொழிற்சாலைகள் அமைத்துள்ளனர், வீடுகளில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளனர்'' என்று, அறிக்கையில் கீழடியில் வாழ்ந்த மக்களைப் பற்றிய பதிவுகள் நீண்டுகொண்டே போகின்றன. இதில் முக்கியமானது, எந்தவொரு மத தாக்கமுமில்லாமல் தனித்த அடையாளத்தோடு வாழ்த்திருக்கிறார்கள் என்பதுதான்.

Keeladi excavation
Keeladi excavation

கீழடி ஆய்வில் ஆரம்பத்திலிருந்து ஆர்வம் காட்டி வரும் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனிடம் பேசினோம், ''தொல்லியல்துறையின் அறிக்கையை மகிழ்வோடு வரவேற்கிறேன். அறிக்கையின் முடிவுகள் தமிழக, இந்திய வரலாற்றில் புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

கீழடியின் வயது கி.மு 6-ம் நூற்றாண்டு என்பது அறிவியல்பூர்வமாக நிரூபணமாகியிருக்கிறது. இரண்டாம் கட்ட அகழாய்வின்போது அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு, கரிம வேதியியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளின் வயது 290 எனக் கூறியது.

Keeladi excavation
Keeladi excavation

அந்த மாதிரிகளெல்லாம் 6 மீட்டர் ஆழத்தில் எடுக்கப்பட்டவை. இன்னும் ஆழம் அதிகமாகச் செல்கிறபோது வயது அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, இந்த மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். அப்போது மத்திய அரசு அதை அனுப்பவில்லை. இன்றைக்கு மாநில தொல்லியல்துறை, மாதிரிகளை அனுப்பி அவை கி.மு 6-ம் நூற்றாண்டைச் சார்ந்தவை என நிரூபித்துள்ளது.

சங்ககாலமும் கீழடி நகரமும் 2200 ஆண்டுகளுக்குப் பின்னோக்கி செல்கின்றன. ஒரு ஏக்கர் பரப்பில் செய்யப்பட்ட ஆய்வில் 89 தங்க தாயக் கட்டைகள் கிடைத்துள்ளன என்றால், அப்போது இருந்த செழிப்பையும் நாகரிக வளமையையும் கற்பனை செய்யவே பெருமிதமாக இருக்கிறது. தமிழ் மிகப்பழைமையான இந்திய மொழி என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது .

MP S.Venkatesn
MP S.Venkatesn

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட குறியீடுகள் சிந்து வெளி குறியீடுகளோடு ஒத்துப்போகின்றன. மத்திய அரசு, குஜராத் மாநிலம் வாட் நகரில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க சர்வதேச அளவில் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளனர். கீழடியில் அதுபோன்று சர்வதேச தரத்திலான காட்சியகம் அமைக்கப்பட வேண்டும்.

உத்தரப் பிரதேசம் சலோனியில் பழங்கால தேர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த இடத்தை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்துள்ளனர். அதேபோன்று கீழடி பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட வேண்டும். கீழடி, மணலூர், அகரம், கொந்தகை ஆகிய ஊர்களை சங்ககால வாழ்விடமாக அறிவிக்க வேண்டும்.

Keeladi excavation
Keeladi excavation

மத்திய தொல்லியல்துறை ரூ.6,000 கோடியில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த உள்ளது. ஆனால், அதில் தமிழகத்துக்கான எந்தத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை. எனவே, தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு தமிழகத்திலும் திட்டங்களை செயல்படுத்த நிதியை பெற வேண்டும்.

மூன்றாம் கட்ட ஆய்வின்போது ஆய்வு நடத்திய ஸ்ரீராமன், கீழடியில் தொடர்ச்சியான கட்டுமானங்கள் இல்லை என்ற பொய்யான வாதத்தை முன் வைத்தார். அந்த வாதமும் மத்திய தொல்லியல் துறையின் வஞ்சகமும் மாநில அரசின் இந்த அறிக்கையால் முறியடிக்கப்பட்டு இருக்கிறது என்பது மகிழ்ச்சியாக உள்ளது'' என்றார்.

Keeladi
Keeladi

கீழடியே தமிழ் சமூகத்தின் தாய்மடி என்பது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது.

`இந்திய வரலாற்றுக்கே வெளிச்சம் பாய்ச்சும்!’ - கீழடி அகழாய்வு முடிவுகளால் நெகிழும் சு. வெங்கடேசன்
அடுத்த கட்டுரைக்கு