Published:Updated:

`2க்கும் மேற்பட்ட குழிகள்; கூடுதலாக இரண்டு மாதம்?’ - கீழடியில் மீண்டும் தொடங்கிய 6ம் கட்ட அகழாய்வு

கீழடி
கீழடி

``சமூக இடைவெளியுடன் அகழாய்வுப் பணி நடைபெறுகிறது. அனைவருக்கும் கிருமி நாசினிகளும் வழங்கியுள்ளோம். முறையாக ஆய்வுகள் நடைபெறும்’’

கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களிலும் கீழடியின் தொடர்ச்சியான 6ம் கட்ட அகழாய்வுப் பணி இன்று மீண்டும் தொடங்கியது. சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட மதுரை அருகே உள்ள கீழடியில் முதல், இரண்டு மற்றும் மூன்றாம்கட்ட அகழாய்வுப் பணிகளை, மத்தியத் தொல்லியல்துறை சார்பாக நடத்தப்பட்டன. அதற்குப் பின் 4 மற்றும் 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் தமிழகத் தொல்லியல் துறை சார்பாக நடத்தி முடிக்கப்பட்டன.

கீழடி
கீழடி

இந்தநிலையில் (19.2.2020) அன்று கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கியது. கீழடி மட்டுமன்றிக் கீழடியைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வுப் பணி செய்யப்படுமெனத் தெரிவிக்கப்பட்டது. 6-ம் கட்ட அகழாய்வுப் பணியில் கொந்தகை ஈமக்காட்டில் ஆய்வுகள் செய்யப்பட்டன.

இந்நிலையில் நாடு முழுதும் கொரோனா பாதிப்பால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த சமயத்தில் கீழடியில் மக்கள் அதிகமாகக் கூடுவதைக் கருத்தில் கொண்டு கீழடியில் பார்வையாளர்களுக்கு அனுமதி தடை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஊரடங்கால் கீழடியிலும் முழுமையாகப் பணிகளும் நிறுத்திவைக்கப்பட்டன.

6-ம் கட்டப் பணி
6-ம் கட்டப் பணி

இந்நிலையில், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 144 தடை தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதால், பல்வேறு வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதேபோல் கீழடியிலும் பணிகள்தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அங்கு மழை காரணமாக சில இடங்கள் சேதம் ஏற்பட்டதால் அது சீர் செய்யப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் 2-க்கும் மேற்பட்ட குழிகளுக்குள் அகழாய்வுப் பணி முழு வீச்சில் தொடங்கியுள்ளது.

வரும் செப்டம்பர் மாதம் வரை அகழாய்வுப் பணி தொடரும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக கூடுதலாக இரண்டு மாதங்கள் அகழாய்வு செய்ய வேண்டும் எனத் தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழடி
கீழடி

இது குறித்து கீழடி தொல்லியல் வட்டாரத்தில் விசாரித்தோம். ``தற்போது கீழடி உள்ளிட்ட 4 இடங்களில் மீண்டும் ஆய்வுப் பணி தொடங்கிவிட்டோம். தொடர்ந்து இப்பகுதியில் மழைப்பொழிவு இருந்ததால் குழிகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது. அதனால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் இல்லாத குழிகளில் மட்டும் அகழாய்வு செய்ய முடிகிறது. சமூக இடைவெளியுடன் அகழாய்வுப் பணி நடைபெறுகிறது. அனைவருக்கும் கிருமி நாசினிகளும் வழங்கியுள்ளோம். முறையாக ஆய்வுகள் நடைபெறும்’’ என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு