Published:Updated:

கீழடி தொல்பொருள்களின் காலத்தைத் தீர்மானித்தது எப்படி? விளக்கும் தொல்லியல் துறை ஆணையர்!

ஆய்வுகளின்போது கரிமப் பொருள்களின் ஒரு பகுதி கிடைத்தால் கூட அது மிக முக்கியமானதாகவே கருதப்படும். காரணம் இது போன்ற பொருள்களால் அங்கே வாழ்ந்த மனிதர்களின் காலத்தைக் கணக்கிட்டுவிடலாம்.

Keezhadi
Keezhadi

கீழடியில் நடந்த அகழாய்வில் கிடைத்த பொருள்களை சோதனை செய்ததில் கிடைத்த முடிவுகள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. 4 கட்டங்களாக நடத்தப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களில் ஆறு மாதிரிகள் அமெரிக்காவில் இருக்கும் Beta Analytic என்ற ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கே நடத்தப்பட்ட கார்பன் டேட்டிங் சோதனையில்தான் இந்தப் பொருள்களின் வயது தெரிய வந்திருக்கிறது.

கார்பன் டேட்டிங் எனப்படும் இந்தக் கரிமப் பகுப்பாய்வானது, ஒரு பொருளின் வயதைக் கண்டறிவதற்காக நடத்தப்படும் ஆய்வில் முக்கியமானது. இந்தச் சோதனையில் ஒரு பொருளின் காலத்தை எப்படிக் கணிக்கிறார்கள் ?

உலகம் முழுவதும் பல இடங்களில் அகழ்வாராய்ச்சிகளின் போது பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருள்கள் கிடைத்திருக்கின்றன. ஆய்வுகளின்போது கரிமப் பொருள்களின் ஒரு பகுதி கிடைத்தால் கூட அது மிக முக்கியமானதாகவே கருதப்படும். காரணம் இது போன்ற பொருள்களால் அங்கே வாழ்ந்த மனிதர்களின் காலத்தைக் கணக்கிட்டுவிடலாம். அது போன்ற சிறிய பொருள்கள் கூட வரலாற்றை மாற்றி எழுத உதவலாம் என்பதற்கு கீழடி மேலும் ஒரு எடுத்துக்காட்டு.

இப்படிக் கண்டெடுக்கப்படும் பொருள்களின் காலத்தைக் கணிக்க தற்போது உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு முறைதான் கார்பன் டேட்டிங். 1949-ம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் லிப்பி (Willard Libby ) என்பவர்தான் இந்த கார்பன் டேட்டிங் முறையைக் கண்டறிந்தார். இதன் மூலமாக 50,000 முதல் 60,000 ஆண்டுகள் முன்பு வரைக்குமான காலகட்டத்தைக் கணிக்க முடியும். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாக கார்பன் டேட்டிங் இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறது Beta Analytic ஆய்வகம்.

Carbon Dating
Carbon Dating

பூமியில் மட்டுமல்ல, இந்த பிரபஞ்சத்தை எடுத்துக் கொண்டால் கார்பன் என்ற தனிமத்துக்கு மிக முக்கிய இடமுண்டு. நம்மைச் சுற்றி இருக்கும் உயிர்கள் அனைத்திலும் கார்பன் தனிமம் காணப்படுகிறது. மனிதர்களும், மரங்களும் காற்றை சுவாசிக்கிறார்கள். விலங்குகள் தாவரங்களை உணவாக உட்கொள்கின்றன. விலங்குகளை மனிதர்கள் உணவாக உட்கொள்கிறார்கள். இது போன்று பல வழிகளில் கார்பன் அணுக்கள் உயிர்களில் சேகரமாகின்றன. அவை இறந்த பின்னர் புதைபடிமமாக மாறினாலும் கூட கார்பன் அணுக்கள் அப்படியே அவற்றில் தங்கி விடுகின்றன.

கரிமப்பொருள்களில் C12 மற்றும் C14 என்ற கார்பன் அணுக்கள் பொதுவானதாக இருக்கின்றன. ஆறு புரோட்டான்களும், ஆறு நியூட்ரான்களும் இருக்கும் கார்பன் அணுவுக்கு C12 என்று பெயர். வளிமண்டலத்தில் இருக்கும் நைட்ரஜன் அணுவை காஸ்மிக் கதிர்கள் தாக்கும்போது ஆறு புரோட்டான்கள், எட்டு நியூட்ரான்கள் கொண்ட C14 என்ற கார்பன் ஐசோடோப்பை உருவாக்குகிறது. C12 மற்றும் C14 என்ற இரண்டு கார்பன் அணுக்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவைதான். ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் வேறுபட்டிருக்கின்றன.

Carbon Dating
Carbon Dating

C12 கார்பன் அணு நிலையானது. ஆனால், C14 அணு நிலையானதல்ல; சிதைவடையும் தன்மை கொண்டது. கதிரியக்கத் தன்மை கொண்ட இந்த ஐசோடோப் சிதைவடையும் போது நைட்ரஜனை (14N) வெளிப்படுத்துகிறது. C14 அணுவின் சராசரி அரை ஆயுள் காலம் 5,730 ஆண்டுகளாக இருக்கிறது. ஓர் உயிரின் வாழ்நாள் முடியும்போது அதன் உடலில் இருக்கும் C14 ஐசோடோப் சிதைவடையத் தொடங்கும். 5,730 ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் பாதியளவு C14 ஐசோடோப் மட்டுமே மிஞ்சியிருக்கும். மாறாக C12 கார்பன் அணு சிதைவடையாமல் அப்படியே இருக்கும். எனவே கார்பன் 12-க்கும் கார்பன் 14-க்கும் இடைப்பட்ட விகிதத்தைக் கணக்கிடுவதன் மூலமாக ஒரு பொருள் எவ்வளவு ஆண்டுகள் பழைமையானது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட விலங்குகளின் 70 எலும்புத்துண்டு மாதிரிகள் பகுப்பாய்வு செய்வதற்காக புனேவில் இருக்கும் முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான டெக்கான் கல்லூரிக்கு அனுப்பப்பட்டன. 17 பானை ஓடுகள் இத்தாலியிலுள்ள பைசா பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவைதவிர, கிடைத்த பொருள்களில் ஆறு கரிம மாதிரிகள் சோதனைக்காக அமெரிக்காவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. அவை எதற்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டன, இந்தியாவில் அதற்கான வசதிகள் இல்லையா? என்ற கேள்வியைத் தமிழ்நாடு தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர் உதயசந்திரனிடம் முன்வைத்தோம்.

Udhayachandran IAS
Udhayachandran IAS

``கீழடியில் உள்ள பொருள்களின் காலகட்டத்தைக் கணித்துச் சொல்லியிருக்கும் பீட்டா அனலிடிக் (Beta Analytic) ஆய்வகம், கார்பன் டேட்டிங் சோதனைக்கு உலக அளவில் மிகவும் புகழ் பெற்ற ஒன்று; மிகவும் நம்பகமான ஒன்றும் கூட. இந்தியத் தொல்பொருள் ஆய்வகமும் சில மாதிரிகளை அங்கேதான் அனுப்பி வைத்திருந்தது. இங்கே பெறப்படும் ஆய்வு முடிவுகள் சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதனால்தான் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தோம். மாதிரிகள் இங்கிருந்து கொரியர் மூலமாக அமெரிக்காவுக்குச் சென்றன. இரண்டு மாதங்களுக்குள்ளாகவே அவர்கள் சோதனை முடிவுகளை அனுப்பி வைத்து விட்டார்கள்” என்றார்.