Published:Updated:

`அறிமுகம் இல்லாத இடத்தில் தவித்தோம்!’ -நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் உதவியால் நெகிழும் கேரளத் தம்பதி

கேரளக் குடும்பத்தினர்
கேரளக் குடும்பத்தினர்

சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த தார் கேனில் கார் மோதியதால் டயர்கள் உருள முடியாமல் சிக்கிக் கொண்டன. மெக்கானிக் ஷெட்கள் அடைக்கப்பட்டதால் வாகனத்தைச் சரி செய்ய முடியாமல் தவித்தார்கள்.

கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் மனிதாபிமான உதவிகள் தாராளமாகச் செய்யப்படுகின்றன. மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து நெல்லை மாவட்டத்தில் வாழும் சாமானிய மக்களின் குறைகளைத் தீர்த்து வருகிறார்கள். 

நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்
நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்

நாமக்கல் பகுதியிலிருந்து கிணறு வெட்டும் வேலைக்காகச் சிலர் குடும்பத்துடன் நெல்லையில் தங்கியிருக்கிறார்கள். கொரோனா பாதிப்பு காரணமாக வேலை இல்லாத நிலையில், பசியால் வாடினார்கள். இது பற்றிய தகவல் கிடைத்ததும் மாவட்ட நிர்வாகம் சார்பாக உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

கிணறு வெட்டும் பணிக்காக வந்திருந்த நாமக்கலைச் சேர்ந்த கவிதா என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தப் பெண்ணுக்குக் குழந்தை பிறந்ததும், தன்னார்வலப் பெண்ணின் துணையுடன் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

குழந்தையுடன் நாமக்கல் பெண் கவிதா
குழந்தையுடன் நாமக்கல் பெண் கவிதா

இதேபோல சென்னையில் இருந்து நெல்லை வழியாக திருவனந்தபுரம் செல்ல முயன்ற ஒரு தம்பதியின் கார் பழுதடைந்தது. குழந்தைகளுடன் வந்திருந்த அந்தத் தம்பதி, அடுத்து என்ன செய்வதெனத் தடுமாறினார்கள். குழந்தைகளுடன் தவித்த அந்தத் தம்பதிக்கு உடனடியாக உதவி கிடைத்திருக்கிறது.

இதுபற்றி பேசிய கேரளாவைச் சேர்ந்த பெண், ``நான் சென்னையில் வேலை செய்கிறேன். கொரோனா ஊரடங்கு காரணமாக நான், என் கணவர், இரு குழந்தைகளுடன் சென்னையில் வசித்தோம். தற்போது அரசு அனுமதி பெற்று சொந்த ஊருக்குக் கிளம்பி வந்தோம். என் கணவர் காரை ஓட்டி வந்தார். 

நன்றி தெரிவிக்கும் கேரளப் பெண்
நன்றி தெரிவிக்கும் கேரளப் பெண்

நாங்கள் பாளையங்கோட்டை அருகே வந்தபோது பின்னால் வந்த காருக்கு வழிவிட்டபோது, சோதனைச் சாவடிக்காக சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த தார் கேனில் மோதியது. அதனால் கார் டயர் சுழலாமல் நின்று விட்டது.

மெக்கானிக் ஷெட் எல்லாம் அடைக்கப்பட்டிருந்தன. அறிமுகம் இல்லாத இடத்தில் இரு குழந்தைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்றே புரியவில்லை. சாலையில் செல்வோரிடம் உதவி கேட்டோம். யாரும் உதவ முன்வரவில்லை. அப்போதுதான் நெல்லை மாவட்ட ஹெல்ப் லைன் நம்பர் கிடைத்தது. அதில் பேசி விவரத்தைத் தெரிவித்தோம்.

உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன்
உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன்

போனில் பேசிய தாசில்தார் உதவி செய்வதாகச் சொன்னார். அடுத்த சில நிமிடங்களில் உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் எங்களைத் தொடர்பு கொண்டு விவரத்தைக் கேட்டார். எங்களைப் பற்றிய விவரங்களை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கவனத்துக்கு அவர் கொண்டு சென்றுள்ளார். 

மாவட்ட ஆட்சியரின் அனுமதியைப் பெற்று அடுத்த அரை மணி நேரத்தில் எங்களுக்கு மாற்று வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்கள். நெருக்கடியான சமயத்தில் கிடைத்த இந்த உதவியை மறக்கவே முடியாது” என்றார் நெகிழ்ச்சியுடன்.

அடுத்த கட்டுரைக்கு