Published:Updated:

கேரள பாதிரியாரின் திருமணம் குறித்த சர்ச்சைப் பேச்சும் மன்னிப்பும்! - நடந்தது என்ன?

``கோட்டயம் சீரோ மலபார் சபையிலிருந்து, ஒரு மாதத்துக்குள் ஒன்பது பெண்களைக் காதலித்துக்கொண்டுபோனது ஈழவ இளைஞர்கள்’’ எனப் பேசியிருந்தார் பாதிரியார் றோய் கண்ணஞ்சிரா.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கேரள மாநிலம், கோட்டையம் மாவட்டத்திலுள்ள பாலா மறைமாவட்ட பிஷப் மார் ஜோசப் கல்லறங்காட் சமீபத்தில் ஒரு வீடியோவில் நார்க்கோட்டிக் ஜிகாத் பற்றிப் பேசியிருந்தார். கத்தோலிக்கப் பெண்கள், இளைஞர்களுக்கு எதிராக லவ் ஜிகாத் மற்றும் நார்க்கோட்டிக் ஜிகாத் நடப்பதாகவும், ஆயுதம் ஏந்திச் சண்டையிட முடியாத இடங்களில் இந்த ஜிகாத்களை நடைமுறைப்படுத்துவதாகவும் அதில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையில், ஈழவ சமுதாய இளைஞர்கள் கத்தோலிக்கப் பெண்களைக் காதலித்துக்கொண்டு போவதாக மற்றொரு கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் பேசியிருப்பது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா விவகாரம்: அரசும் கட்சிகளும் அணுகியது எப்படி? ஓர் அலசல் ரிப்போர்ட்!
பாலா பிஷப் மார் ஜோசப் கல்லறங்காட்
பாலா பிஷப் மார் ஜோசப் கல்லறங்காட்

கத்தோலிக்க பாதிரியார் றோய் கண்ணஞ்சிரா என்பவர் பேசிய வீடியோ ஒன்று வலைதளங்களில் வைரலானது. அதில் பேசிய பாதிரியார், ``கோட்டயம் சீரோ மலபார் சபையிலிருந்து, ஒரு மாதத்துக்குள் ஒன்பது பெண்களைக் காதலித்துக் கொண்டுபோனது ஈழவ இளைஞர்கள். லவ் ஜிகாத் பற்றியும், நார்க்கோட்டிக் ஜிகாத் பற்றியும் நாம் அதிகமாகப் பேசுகிறோம். நம்முடைய பெண்களைக் காதலிப்பதாக நடித்தும், மற்ற வகையிலும் கொண்டு போவதற்காக பிற மதத்தவர்கள் திட்டம் வகுத்துச் செயல்படுகின்றனர். அதில் பத்தில் ஒரு பங்குகூட நாம் தயாராகவில்லை. நம் குழந்தைகளை மத நம்பிக்கையுடன் வைத்திருக்கவும், பெற்றோருடன் வைத்திருக்கவும், இதற்காக வாழ்க்கையை அர்ப்பணித்த பாதிரியார்களால் முடியவில்லை என்பதுதான் நாம் எதிர்கொள்ளும் நெருக்கடியாக இருக்கிறது" எனக் கூறியிருந்தார்.

சங்ஙணாசேரி மறைமாவட்டத்திலுள்ள மத ஆசிரியர்களுக்கு பாதிரியார் றோய் கண்ணஞ்சிரா ஆன்லைன் வழியாக நடத்திய பயிற்சி வகுப்பில் இந்தக் கருத்துக்களை அவர் பேசியதாகத் தகவல் வெளியானது. இது ஒரு தரப்பினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுத்துப் பேசிய ஈழவ சமூகத்துக்கான அமைப்பான எஸ்.என்.டி.பி பொதுச்செயலாளர் வெள்ளாப்பள்ளி நடேசன் கூறுகையில், ``வகுப்புவாத விஷத்தை உமிழும் இது போன்ற முதிர்ச்சியற்ற கருத்துகளை யார் சொன்னாலும் அது உண்மை இல்லை. உயர்ந்த பொறுப்பிலுள்ள பாதிரியார் றோய் கண்ணஞ்சிரா வாயிலிருந்து ஈழவ சமூகத்துக்கு எதிரான கருத்து வந்திருக்கிறது.

வெள்ளாப்பள்ளி நடேசன்
வெள்ளாப்பள்ளி நடேசன்

யாரைப் பற்றியும் எதுவும் சொல்வதற்குக் கொடுக்கப்பட்டது அல்ல பாதிரியார் பட்டம். வறுமையைப் பயன்படுத்தி, நாட்டில் அதிக மதமாற்றம் செய்கின்றனர் கிறிஸ்தவ மிஷனரிகள். பணம் கொடுத்துக்கூட சிலர் மதம் மாற்றுகின்றனர். கிறிஸ்தவர்களைவிட முஸ்லிம்கள் மதம் மாற்றுவது குறைவு. கிறிஸ்தவ சமூகம் ஒழுங்கமைக்கப்பட்ட வாக்குவங்கியாகச் செயல்படுகிறது. அவர்கள் முன்பு அனைத்து அரசியல் கட்சிகளும் சாஷ்டாங்கமாக வணங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் அரசியலில் அதிகாரத்துக்குச் சென்று பொருளாதார நிலையை உயர்த்துகிறார்கள். ஆனால், பட்டியலின, பழங்குடியின, பின்தங்கிய வகுப்பினர் எங்கே இருக்கிறார்கள் எனப் பார்க்க வேண்டும்" என்றார். இதையடுத்து ஈழவ சமூகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாதிரியார் றோய் கண்ணஞ்சிரா தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து பாதிரியா றோய் கண்ணஞ்சிரா வெளியிட்டுள்ள வீடியோவில் கூறுகையில், ``கத்தோலிக்க சபையில் மதம் பற்றி போதிக்கும் ஆசிரியர்கள் மத்தியில் சில கருத்துகளை ஆன்லைன் மூலம் பேசினேன். அதில் திருமண பந்தத்தைப் பற்றிப் பேசினேன். ஏனென்றால் கத்தோலிக்க சபையிலுள்ள தாய், தந்தையர் குழந்தைகளை 25 வயதுவரை வளர்த்து ஆளாக்குகிறார்கள். ஆனால் அந்தக் குழந்தைகள் பெற்றோரிடம் கூறாமல், அவர்களின் சம்மதம் இல்லாமல் வீட்டைவிட்டு இறங்கி மற்றொருவருடன் செல்லும் வேதனையைப் பலமுறை பெற்றோர் எங்கள் முன்பு வந்து அழுதுகொண்டே கூறுகிறார்கள். கத்தோலிக்க குடும்பங்களிலுள்ள பெண் குழந்தைகளுக்கு இறை நம்பிக்கை பற்றிக் கற்றுக்கொடுக்கவேண்டியது மத ஆசிரியர்களான எங்களது கடமை.

மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியிட்ட பாதிரியார் றோய் கண்ணஞ்சிரா
மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியிட்ட பாதிரியார் றோய் கண்ணஞ்சிரா

கத்தோலிக்க சபையில் நம்பிக்கையுள்ள இளம்பெண்களும் இளைஞர்களும் தங்களுக்குள் திருமணம் செய்துகொள்வதுதான் புதிய குடும்பத்தின் தொடக்கம். ஏனென்றால், கத்தோலிக்க சபையின் அடிஸ்தானம் குடும்பமாகும். எனவே, என் கவனத்தில் வந்த சில விஷயங்களை அங்கு தெரிவித்தேன். மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் கத்தோலிக்கப் பெண்களைப் பெற்றோர் அனுமதி இல்லாமல் கடத்திக்கொண்டு போவது பற்றி அதில் தெரிவித்தேன். அது ஈழவ சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது என்பதை நான் புரிந்துகொண்டேன். நான் மத ஆசிரியர்களிடம் மட்டுமே பேசினேன். அந்த வீடியோ கிளிப் வெளியானதால் யாருக்கெல்லாம் வேதனை ஏற்பட்டதோ அவர்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார். இதையடுத்து பாதிரியாரின் பேச்சால் ஏற்பட்ட சர்ச்சை ஓய்ந்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு