Election bannerElection banner
Published:Updated:

`2026-க்கான பணிகளைத் தொடங்குகிறேன்!' - தேர்தல் தோல்வி குறித்து குஷ்பு

குஷ்பு
குஷ்பு

சேப்பாக்கம் அல்லது திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடலாம் என்று நினைத்து களப்பணிகள் மேற்கொண்ட குஷ்புவுக்கு ஆயிரம் விளக்கு தொகுதி வழங்கப்பட்டது.

2021-ம் ஆண்டு தேர்தல் பல்வேறு எதிர்பார்ப்புகளையும், மாற்றத்துக்கான எண்ணங்களையும் மக்கள் மனதில் விதைத்தது. பா.ஜ.க-வில் இணைந்த குஷ்பு, தேர்தல் அறிவிப்புக்கு முன்பே சென்னையில் தன்னுடைய களப்பணியைத் தொடங்கினார். சேப்பாக்கம் அல்லது திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடலாம் என்று நினைத்து களப்பணிகள் மேற்கொண்ட குஷ்புவுக்கு ஆயிரம் விளக்கு தொகுதி வழங்கப்பட்டது.

குஷ்பு
குஷ்பு

ஆயிரம் விளக்கு தொகுதியில் நடைபெற்ற தேர்தல்களில் தி.மு.க ஒன்பது முறையும் அ.தி.மு.க நான்கு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2016-ம் ஆண்டு தி.மு.க சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட கு.க.செல்வம், பா.வளர்மதியை வீழ்த்தி வெற்றிபெற்றார். 2021-ம் ஆண்டு தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பே செல்வம் பா.ஜ.க-வில் இணைந்தார்.

ஆயிரம் விளக்கு தொகுதி செல்வத்துக்குக் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக - பாஜக கூட்டணிக் கட்சியின் ஆயிரம் விளக்கு தொகுதியின் வேட்பாளராக குஷ்பு அறிவிக்கப்பட்டார். ஆயிரம் விளக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஏ.ஜே செரின், தி.மு.க சார்பில் டாக்டர் எழிலன், அ.ம.மு.க சார்பில் என்.வைத்தியநாதன், மக்கள் நீதி மய்யம் சார்பில் கே.எம்.ஷெரீப் ஆகியோர் போட்டியிட்டனர்.

குஷ்பு
குஷ்பு

குஷ்பு தொடக்கத்திலிருந்தே கடுமையான பிரசாரத்தை மேற்கொண்டார். வேட்பாளர் என்பதைத் தாண்டி குஷ்புவை பார்ப்பதற்காக பல இடங்களில் மக்கள் கூட்டம் நிறைந்து வழிந்தது. குஷ்புவின் பிரசார வீடியோக்கள்கூட சமூக வலைதளங்களில் வைரல் ஆகின.

இந்நிலையில் நேற்று வெளியிடப்பட்ட தேர்தல் முடிவில், ஆயிரம் விளக்கு தொகுதியில் தி.மு.க வேட்பாளர் எழிலன் 71,867 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதே தொகுதியில் போட்டியிட்ட குஷ்பு 39,405 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

குஷ்பு
குஷ்பு

தோல்வி குறித்து குஷ்புவிடம் பேசியபோது, ``மக்கள் தீர்ப்பை மனதார ஏற்றுக்கொள்கிறேன். தேர்தலுக்காக அரசியல் பணி மேற்கொள்ள அரசியலுக்கு வரவில்லை. தொடர்ந்து மக்கள் பணி தொடரும். 2026-ம் ஆண்டு தேர்தல் களத்தில் வரப்போகும் மாற்றத்துக்கான பயணத்தைத் தொடங்குகிறேன்" என்று கூறினார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு