Published:Updated:

`ஆயாவும், தாத்தாவும்தான் அம்மா, அப்பா’ -தாயை இழந்து தவிக்கும் குழந்தைகள்

குழந்தைகள்
குழந்தைகள்

''அம்மாவின் இறப்புச் சான்றிதழ் இல்லை. எங்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை. ரேஷன் கார்டு இல்லாம அரிசிகூட கிடைக்கவில்லை " என்று கண்ணீர் வடிக்கிறார்கள், சின்னஞ்சிறு குழந்தைகள்.

மதுரையிலிருந்து மேலூர் செல்லும் சாலையில் உள்ளது நரசிங்கம்பட்டி. இங்குள்ள கத்தப்பட்டு, மந்தையம்மாள் தம்பதியின் 4 பேரக் குழந்தைகள் பெற்றோர்களை இழந்ததால், உணவுக்கே கஷ்டப்படுகிறார்கள்.

கத்தப்பட்டு - மந்தையம்மாள்
கத்தப்பட்டு - மந்தையம்மாள்

இதுதொடர்பாகப் பேசிய மந்தையம்மாள், "எங்க வீட்டுக்காரரின் மூத்த மனைவி இறந்திட்டதால, நான் அவரைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். மூத்த தாரத்து மகளையும் நான்தான் வளர்த்தேன். நாங்க பெற்ற எல்லாப் பிள்ளைகளையும் கரை சேர்த்துட்டோம். மூத்த தாரத்திற்குப் பிறத்த பொண்ணு பெயர் வனிதா. அவளை மேலூர் ’சின்ன சூரக்குண்டுல கட்டிக்கொடுத்தோம். அவளுக்கு 3 பொம்பளப்பிள்ளைங்க இருந்துச்சு. அடுத்து குழந்தை வேண்டாம்னு எவ்வளவோ கெஞ்சினோம். ஆனா, அவங்க வீட்டுல கேக்கல. 4 -வது குழந்தையும் பெத்துக்க அடம் பிடிச்சாங்க. 4- வது குழந்தை ஆம்பள பையன்தான். ஆனா, குழந்தை பிறந்த அன்னிக்கே அம்மா இறந்துட்டா.

அதனால 4 குழந்தையையும் விட்டுட்டு, வனிதா வீட்டுக்காரர் வேற கல்யாணம் செஞ்சுக்கிட்டார். பிள்ளைங்க நாலும் அனாதையா தெருவில் நின்னுச்சுக. நானும் என் வீட்டுக்காரரும் குழந்தைகளைக் கூட்டிட்டு வந்துட்டோம். ரெண்டரை வருசமா பிள்ளைகள நாங்கதான் வளர்க்கிறோம். என் வீட்டுக்காரர் கூலிக்கு மாடு மேய்க்க போயிருவாரு. எனக்கு நேரம் கிடைச்சா கம்மா வெட்டு வேலைக்குப் போவேன். 3 பொம்பளப் பிள்ளைகள பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிட்டு, பையன நான் பார்த்துக்கிறேன்.

`ஆயாவும், தாத்தாவும்தான் அம்மா, அப்பா’ -தாயை இழந்து தவிக்கும் குழந்தைகள்

அதனால நான் வேலைக்கு போறது சிரமம். என் வீட்டுக்காரர் கூலி வேலை பார்த்துக் கொடுக்கிற காசு பாதி மாசத்துக்குக்கூட வராது. அக்கம் பக்கத்துல கிடைக்கிற கைமாத்த வெச்சுதான் ஓட்டுறேன். குழந்தைங்க படிப்பு, துணிமணி, சாப்பாடுனு வயசான காலத்திலயும் போராடித்தான் பொழைக்கிறோம். இந்த குழந்தைங்களோட அப்பா ஒரு நாளும் எட்டிப்பார்த்ததில்லை. ரெண்டரை வயசுப் பையன் பாலுக்கு தினமும் அழுகுற சத்தம் ஈரக்குலைய பிரட்டிப் போடுது. மூத்த தாரத்து பேரக் குழந்தைகள் தானே எனக்கு என்னானு நானும் போயிட்டா, இந்தக் குழந்தைங்க பசியில செத்துருங்க.

அதனால எந்த வேத்துமையும் பாக்காம பிள்ளைகள வளர்க்கிறேன். எங்க உசுரு இருக்கவரைக்கும் நாங்க பார்த்துகிறோம். நாங்களும் செத்துட்டா என்ன பண்றதுனு தெரியலை" என்றார் வேதனையாக.

வயதான தம்பதிகளின் மூத்த பேத்தி, "எங்களுக்கு சரியா விவரம் தெரியிறதுக்கு முன்னாடியே அம்மா செத்துட்டாங்க. அப்பாவும் எங்களை விரட்டிட்டாரு. ஆயாவும் தாத்தாவும்தான் இப்ப எங்களுக்கு அம்மா- அப்பா. எங்க அம்மா இறந்த இறப்பு சான்றிதழ் கூட வாங்க முடியல. எங்களுக்கும் பிறந்த சான்றிதழ்கூட இல்லை. தாத்தா, ஆயா க்‌ஷன் கார்டுலகூட எங்க பேர் இல்லை. அதுனால எங்களுக்கு ரேஷன் அரிசிகூட கிடைக்கிறதில்லை.

குழந்தைகள்
குழந்தைகள்

தாத்தாவுக்கு 70 வயசாச்சு. எங்களை வெச்சுகிட்டு ரொம்ப சிரமப்படுறாங்க. எனக்கு நல்லா படிக்கணும்னு ஆசை. ஆனா, நாங்க வாழுறதே கஷ்டமா இருக்கு" அவர் பேசிக்கொண்டு இருக்கும்போதே, தாரை தாரையாக வழிந்துக்கொண்டு இருக்கிறது கண்ணீர்.

4 குழந்தைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படும் வயதான தம்பதிக்கும், தாய், தந்தை ஆதரவு இல்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்கும் அரசு உதவி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு