Published:Updated:

`இது தொடர்ந்தால் 6 எம்.எல்.ஏ-க்களும் செக்போஸ்டை முற்றுகையிடுவோம்!’ கொதிக்கும் கிள்ளியூர் எம்.எல்.ஏ

காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார்
காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார்

இந்த நிலை தொடர்ந்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 6 பேரும் கேரள செக்போஸ்டுகள் முன்பு போராட்டம் நடத்துவோம்.

தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 1,629 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 பேருக்கு மேல் கொரோனா பாதித்திருந்தால் அந்தப் பகுதி ஹாட்ஸ்பாட் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததால் கேரள மாநிலம் தனது எல்லையான களியக்காவிளையை மூடியது. கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து செல்லும் அனைத்து வாகனங்களையும் இஞ்சிவிளைப் பகுதியில் கேரள போலீஸார் தடுத்து நிறுத்துகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்துக்கு சிகிச்சைக்காகச் சென்ற ஆம்புலன்ஸைத் தடுத்து திருப்பி அனுப்பியதால் அதில் இருந்த மீனவர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் நடந்தது. இந்த நிலையில் நேற்று மலையாள நாளிதழ் ஒன்றின் செய்தியாளர் மருத்துவமனைக்குச் சென்று திரும்பியபோது கேரள போலீஸார் தடுத்து, ஆத்திரத்தில் திட்டியுள்ளனர். கேரள எல்லை மூடப்பட்டதால் குமரி மாவட்டத்தில் இருந்து சிகிச்சைக்காகக் கேரளா செல்லும் நோயாளிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

கேரள எல்லையான இஞ்சிவிளை
கேரள எல்லையான இஞ்சிவிளை

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அவசர சிகிச்சைக்காகக் கேரளா செல்லும் வாகனங்களைத் தடுத்து நிறுத்துவது தொடர்ந்தால் செக்போஸ்டுகளில் குமரி மாவட்டத்தின் ஆறு எம்.எல்.ஏ-க்களும் சேர்ந்து போராட்டம் நடத்தப்போவதாகக் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான ராஜேஷ்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ நம்மிடம் கூறுகையில், ``கன்னியாகுமரி மாவட்டத்தில் அவசர சிகிச்சைக்காகத் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைகளுக்குச் செல்வது வழக்கம்.

கேரள மாநிலத்தில் அதிகமாகக் கொரோனாத் தொற்று இருந்த சமயத்திலும் தமிழக எல்லைகள் மூடப்படவில்லை. ஆனால், இப்போது தமிழகத்தில் அதிக கொரோனா பாதிப்பு இருப்பதாகக் கூறி அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்ஸில் செல்பவர்களைக்கூட களியக்காவிளையை அடுத்த இஞ்சிவிளை செக்போஸ்டில் கேரள போலீஸார் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்புகிறார்கள். அதே சமயம் காய்கறி மற்றும் அத்தியாவசிய தேவைக்கான பொருள்களைக் கொண்டு செல்லும் வாகனங்களை அனுமதிக்கிறார்கள்.

கேரள எல்லை இஞ்சிவிளை
கேரள எல்லை இஞ்சிவிளை

தமிழகத்தில் இருந்து செல்பவர்களைத் தடுத்து நிறுத்துவது மடுமல்லாது தகாத வார்த்தைகளால் கேரள போலீஸார் பேசுவது கண்டனத்துக்குரியது. சிகிச்சைக்காகச் செல்லும் நோயாளிகளை கேரள போலீஸ் தடுத்து நிறுத்தினால் தமிழகத்திலிருந்து செல்லும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் செல்லும் வாகனங்களை நாங்கள் தடுத்து நிறுத்துவோம்.

கொரோனா `ஹாட்ஸ்பாட்'.. கன்னியாகுமரி எல்லையை மூடிய கேரளா!

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டக் கலெக்டரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளேன். அவர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார். இந்த நிலை தொடர்ந்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 6 பேரும் கேரள செக்போஸ்டுகள் முன்பு போராட்டம் நடத்துவோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு