Published:Updated:

`அன்று சிரித்தார்; இன்று முதல்வர் அலுவலகத்துக்குள்ளேயே கொரோனா!' -கே.என்.நேரு

கே.என்.நேரு
கே.என்.நேரு

``ஆளும்கட்சியின் தவறுகளை எடுத்துச் சொல்லத்தான் எதிர்க்கட்சியே தவிர எதிர்க்கட்சி என்ன முதல்வருக்கு மாலையா போடும்” - கே.என்.நேரு

``கொரோனா விவகாரத்தில் ஆளும் கட்சியினர் தோல்வி அடைந்துவிட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் எதாவது செய்து மக்களிடம் இடம் பிடித்துவிடுவார் என்ற பயத்தில் ஆளும் கட்சியினர் எங்கள் மீது குறை சொல்வதில் குறியாக இருக்கிறார்கள்" என ஆளும்கட்சியினரை கே.என்.நேரு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கே.என்.நேரு
கே.என்.நேரு

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, ``எம்.ஜி.ஆர் முதல்வராக இருக்கும்போது நான் சேர்மனாக இருந்தேன். யூனியனுக்கு வரும் பணத்தை சேர்மன், கவுன்சிலர்தான் முடிவு செய்து செலவு செய்வார்களே தவிர மாவட்டம் நிர்வாகம் செலவு செய்யாது. தற்போது மாவட்ட ஊராட்சிக்கு 19 கோடி ரூபாய் வந்திருக்கிறது. இதற்கு அரசாணை வெளியிட்டு இந்தப் பணி செய்யுங்கள் என்று அவர்களே எடுத்துக்கொள்கிறார்கள். வெற்றி பெற்று வந்தவர்களால் ஒண்ணும் செய்ய முடியவில்லை. இது குறித்து கேட்டால் கொரோனா திட்டம், அதனால் பணத்தை எடுத்துவிட்டோம் என்கிறார்கள். 3,000 மதிப்புள்ள பொருளை 12,000-க்கு வாங்குவதுதான் கொரோனா திட்டமா?” என்று கேள்வி எழுப்பினார்.

`நாங்கள் உதவி செய்வதும் ஓட்டு வாங்கத்தானே சார்...!' - திருச்சியில் கலகலத்த கே.என்.நேரு

தொடர்ந்து அவர் பேசுகையில், ``தி.மு.க நிவாரண உதவிகளை கொடுத்ததால்தான் கொரோனா பரவியது என்று முதலில் முதல்வர் கூறினார். அதன்பிறகு அ.தி.மு.க-வினர் வீடு வீடுடாகச் சென்று நிவாரண உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றார். மூன்றாவதாக தி.மு.க-வினர் அங்கொன்றும் இங்கொன்றும்தான் நிவாரணம் வழங்குகிறார்கள் என்றார். பின்னர், நாங்கள் முழுமையாக வழங்குவோம் என்று கூறினார்.

சட்டமன்றம் நடந்து கொண்டிருந்தபோது, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வரிடம், `கொரோனா சீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்குள் வரப்போவதாக சொல்கிறார்கள். உடனடியாக நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்பேரவையை நீங்கள் ஒத்திவைத்துவிட்டு அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி இதுபற்றி ஆலோசிக்கலாம்' என்று கூறினார். அப்போது, முதல்வர் சிரித்துக்கொண்டே, `இது பணக்காரர்களுக்குத்தான் வரும். ஏழைகளுக்கு வராது. மேலும் 70 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குதான் வரும்' என்றார்.

முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமி

துரைமுருகனைப் பார்த்து நீங்கள் கவலைப்படாதீங்க என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு சட்டமன்றத்தை நடத்திக் கொண்டே இருந்தார். பின்னர் மத்திய அரசு சொன்ன பிறகுதான் சட்டமன்றத்தை அவசரம் அவசரமாக மூடுகிறார். அனைத்துக்கட்சி கூட்டம் போடுங்க என்று கேட்டால், நீங்கள் எல்லோரும் டாக்டரா? என்ன ஆலோசனை சொல்லப் போறீங்க? என்று முதல்வர் கேட்கிறார். ஆளும்கட்சியின் தவறுகளை எடுத்துச் சொல்லத்தான் எதிர்க்கட்சியே தவிர எதிர்க்கட்சி என்ன முதல்வருக்கு மாலையா போடும். தினந்தோறும் ஸ்டாலின் அறிக்கைவிடுகிறார். அரசியல் செய்கிறார் என்று முதல்வர் கூறுகிறார். கடந்த காலத்தில் தி.மு.க ஆட்சியில் இருந்தபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 5 வருடம் வெளியே வரவில்லை.

தினமும் காலையில் எழுந்தவுடன் ஓர் அறிக்கை. அவர்கள் ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 8 சதவிகிதம் போனஸ் கொடுத்துவிட்டு எங்க ஆட்சியில் 30 சதவிகிதம் போனஸ் கொடுக்க வேண்டும் என்று ஏட்டிக்குபோட்டியாக அறிக்கை விடுத்தார். கடைசி 3 மாதங்கள் தி.மு.க ஆட்சி இருக்கும்போதுதான் வெளியே வந்தார். நீங்கள் வேகமாக செயல்பட வேண்டும் என்று சொல்வதுதான் எதிர்க்கட்சியின் வேலை. உங்களைப் பாராட்டுவது எதிர்க்கட்சியின் பணியில்லை. கொரோனா தொடர்பாக உண்மை இல்லாத ஒன்றை, உண்மைபோலவே பேசுவதில் சுகாதாரத்துறை அமைச்சருக்கு நிகர் வேறு யாருமில்லை.

மு.க ஸ்டாலின்
மு.க ஸ்டாலின்

கொரோனா தமிழகத்துக்கு வராது என்று முதல்வர் கூறினார். இன்று அவரின் அலுவலகத்திற்குள்ளேயே கொரோனா வந்துவிட்டது. அதைத்தொடர்ந்து முதல்வர் சேலத்துக்கு மட்டும் செல்வது ஏன் என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பிய பின்னரே, கோவை, திருச்சி என ஆய்வுக்கு வந்திருக்கிறார். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தோல்வியடைந்துவிட்டது” என்று ஆளும் கட்சியின் மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை எழுப்பியுள்ளார்.

`நாங்கள் சொன்னதை தமிழக அரசு கேட்டிருந்தால்?!' -கொரோனா விவகாரத்தில் கே.என்.நேரு ஆதங்கம்
அடுத்த கட்டுரைக்கு